இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிதைத்த சிங்களப் படை: அன்புமணி கண்டனம்

By செய்திப்பிரிவு

இலங்கையில் மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப் படை சிதைத்ததற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கணடனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

“இலங்கையில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த விடுதலைப் புலிகளின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் வகையில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி தமிழீழப் பகுதிகளில் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப் படைகள் சிதைத்துள்ளன. மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீது கொடுரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை கண்டிக்கத்தக்கவை.

விடுதலைப் போரில் உயிர்நீத்த விடுதலைப் புலிகளின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிலும் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் போராடிய, ஆட்சி செய்த பகுதிகளில் கடந்த 27ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்த மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப் படையினர் திட்டமிட்டு சிதைத்துவிட்டதாக வடக்கு மாநிலத்தில் வாழும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதற்காக பொதுமக்கள் கொண்டுவந்த தீபச்சுடர்களை ராணுவ வீரர்கள் தட்டிவிட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் மாவீரர்களின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்த வந்த தமிழ் மக்களை சிங்களப் படையினர் துப்பாக்கி முனையில் மிரட்டியுள்ளனர்.

முல்லைத்தீவு பகுதியில் மாவீரர்களின் நினைவிடத்தில் தீபம் ஏற்ற முயன்ற அவர்களின் சொந்தங்களை சிங்களப் படையினர் விரட்டி அடித்திருக்கின்றனர். முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் என்ற செய்தியாளர் மீது முள்கம்பிகள் சுற்றப்பட்ட தடியைக் கொண்டு சிங்களப் படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அந்த செய்தியாளரின் உடலில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிங்கள அரசின் இந்த காட்டுமிராண்டித் தனத்தை மன்னிக்க முடியாது.

2009ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை இறுதிப் போருக்குப் பிறகு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்காமல் முடக்குவதை சிங்கள அரசு வாடிக்கையாக வைத்திருக்கிறது. நடப்பாண்டில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கை நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தாலும் கூட, அதை மதிக்காமல் சிங்களப் படைகள் தமிழர்களைத் தாக்கியும், மிரட்டியும் மாவீரர் நாள் நிகழ்வுகளைச் சிதைத்துள்ளன. சிங்களப் படையினரின் இந்தத் தாக்குதல்களைத் தனித்த நிகழ்வாகப் பார்க்க முடியாது. தமிழர்கள் அடக்கி, ஒடுக்கப்பட்டு மூன்றாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விடுதலைப் போரில் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாத சிங்கள அரசு, ஈழத் தமிழர்களுக்கு சம உரிமைகளையும், தன்மானத்துடன் வாழும் உரிமையையும் எவ்வாறு வழங்கும்? என்ற கோணத்தில்தான் இந்தச் சிக்கலை அணுக வேண்டும்.

இலங்கை இறுதிப் போரில் ஒன்றரை லட்சத்திற்கும் கூடுதலான ஈழத் தமிழர்களை சிங்களப் படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்தனர். அதற்குக் காரணமானவர்கள்தான் இப்போது இலங்கை அரசு நிர்வாகத்தின் முக்கியப் பதவிகளில் உள்ளனர். இலங்கை இறுதிப் போரின்போது அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், போர்க்குற்றங்கள் நடத்தப்பட்டதும் உண்மை என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதற்கான ஆதாரங்களைத் திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம், தமிழீழத்தில் தமிழர்கள் அச்சமின்றி வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும் இலங்கை அரசுக்கு ஆணையிட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் நடப்பதைப் பார்க்கும்போது, இலங்கையில் சிங்களர்களுடன் சிங்கள ஆட்சியின் கீழ் தமிழர்கள் ஒன்றாக வாழமுடியாது என்பது தெளிவாகிறது.

அண்டை நாடான இலங்கையில் நடைபெறும் இத்தகைய அத்துமீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இலங்கைப் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதையும், தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில் தனித் தமிழீழம் குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்