இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பங்களிப்பு மகத்தானது என்று, ‘கலாமை கொண்டாடுவோம்’ இணையவழி கலந்துரையாடல் நிகழ்வில், அவருடன் இணைந்து பணியாற்றிய விஞ்ஞானிகள் பெருமிதத்தோடு குறிப்பிட்டனர்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ம் ஆண்டு நினைவையொட்டி, ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் ‘கலாமை கொண்டாடுவோம்’ எனும் இணைய வழி சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு தொடர்ந்து நடந்து வருகிறது. 27-ம் தேதி நடந்த நிகழ்வில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும், இந்திய தொழில்நுட்ப காங்கிரஸ் சங்கத்தின் (ITCA, பெங்களூரு) துணைத் தலைவருமான பத்மஸ்ரீ ஆர்.எம். வாசகம், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்ற இயக்குநரும், ராணுவ விஞ்ஞானியுமான டாக்டர் வி.டில்லிபாபு இருவரும் பங்கேற்று கலந்துரையாடினர்.
இதில் அவர்கள் பேசிய தாவது:
பேராசிரியர் ஆர்.எம்.வாசகம்: 1965-ல் நான் மெட்ராஸ் ஐஐடியில் எம்.டெக். படிக்கும்போது, அட்லான்டிக் கடல் தாண்டிச் சென்று, பணி புரிய வேண்டும் என்று ஆசை இருந்தது. பிறகு, திருவனந்தபுரத்தில் உள்ள தும்பா விண்வெளி ஏவு மையத்தில் பணியில் சேர்ந்ததும், இந்தியாவிலேயே சுயசார்புடன் திட்டமிட்டு, ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய கண்டிபிடிப்புகளை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திரா பவனத்தில் தங்கிதான் 15 ஆண்டுகாலம் ராக்கெட் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் அப்துல் கலாம் ஈடுபட்டார்.
நான் அவரது பக்கத்து அறை நண்பர். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவோம். நான் வாங்குகிற நாளிதழ்களை கலாம் வாங்கிப் படிப்பார். அவர் வாங்குகிற நூல்களை நானும் வாங்கிப் படிப்பேன். அப்போதெல்லாம் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் கிடையாது. நாங்கள் செய்யும் சிறு ராக்கெட்கள் 15-20 கி.மீ. தூரம் மட்டுமே செல்லக்கூடியவை. அதிலும் பல தோல்வி அடைந்துவிடும். எந்த ஒரு செயலிலும் தோல்வியின் அடிப்படை என்ன என்று கண்டறிந்து, அந்த தவறுகளை சரிசெய்துவிட்டால் முழு வெற்றி அடையலாம் என்று கலாம் அடிக்கடி என்னிடம் சொல்வார்.
எதையும் திட்டமிட்டபடி குறித்த நேரத்தில் முடிக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் உறுதியாக இருப்பார். இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையின் வளர்ச்சியில் கலாமின் பங்களிப்பு மகத்தானது. 1997-ல் கலாமுக்கு மத்திய அரசு ‘பாரத ரத்னா’ விருது வழங்கியபோது, நான் சென்னை பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருந்தேன். கலாம் விருது பெற்றதற்கான முதல் பாராட்டு விழாவை நாங்கள் நடத்தினோம். ஆளில்லா விமானம் உட்பட பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு உந்துசக்தியாகவும், உறுதுண யாகவும் இருந்த பெருமைக்குரியவர் கலாம்.
விஞ்ஞானி வி.டில்லிபாபு: இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக் கோளான எஸ்எல்வி-3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட போது, இந்தியாவை உலகமே திரும்பிப் பார்த்தது. அதற்கு காரணமாக இருந்த ஆளுமையாளர் அப்துல் கலாம். எஸ்எல்வி-1-ன் தோல்விக்கு காரணமான தொழில்நுட்பக் கோளாறுகளைக் கண்டறிந்து, அதில் இருந்து பெற்ற படிப்பினைகளைக் கொண்டு, எஸ்எல்வி-3 முயற்சியை மேற்கொண்டு வெற்றி கண்டார். ஒரு தேசத்தின் அறிவியல் வளமானது அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும் என்று கலாம் சொல்வார். அறிவியல் சித்தாந்தங்களை நம் நாட்டின் எல்லை காக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தும் வகையில் சிந்தித்தவர் கலாம். தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த கலாம், பல்வேறு புதிய ஆராய்ச்சிகள், முயற்சிகளுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா சுயசார்புடன் செயல்படுவதோடு, தன்னிறைவு பெற்ற நாடாகவும் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டவர். இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், இனிவரும் தலைமுறை இளைஞர்களுக்கும் ஊக்க சக்தியாக கலாமின் அறிவியல் சிந்தனைகள் திகழும். தான் சென்ற பள்ளி, கல்லூரி விழாக்களில் மாணவர்களிடம் பேசும்போதெல்லாம் அறிவியல், தொழில்நுட்பத் துறையில் நாம் இன்னும் அடைய வேண்டிய இலக்குகள் பற்றியே பேசினார். செயற்கைக் கோள் தொழில்நுட்பத்தில் இந்தியா இன்று படைத்துள்ள சாதனைகளுக்கு காரணமாக விளங்கிய கலாம், தான் எழுதிய நூல்கள் வழியாகவும் பலருக்கும் வழிகாட்டியாக இருந் தார். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேசன் நெறிப்படுத்தினார்.
இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://youtu.be/V2_7lA1ep8Y என்ற லிங்க்கில் பார்த்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago