கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைப்பு

By ஜி.ராதாகிருஷ்ணன்

உறுப்பினர்கள் யாரும் வராததால் கரூர் மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி ஈஸ்வரி அறிவித்தார்.

கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் 8 பேரும், அதிமுக கூட்டணியில் தமாகாவைச் சேர்ந்த சிவானந்தம் என்ற ஒரு உறுப்பினர் என 9 பேரும், திமுகவில் 3 பேரும் வெற்றி பெற்றனர். இதனால் அதிமுக மாவட்டப் பொருளாளரான எம்.எஸ்.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும், அதிமுகவைச் சேர்ந்த தானேஷ் என்கிற என்.முத்துகுமார் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் பதவியை தானேஷ் என்கிற என்.முத்துகுமார் ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் க.சிவகாமசுந்தரியிடம் தோல்வியடைந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்குக் கடந்த அக்.9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இதில் அதிமுக சார்பில் தானேஷ் என்கிற என்.முத்துகுமார், திமுக சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த அ.கண்ணையன் உள்ளிட்ட 16 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் அ.கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் திமுகவின் பலம் 4 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 8 ஆகக் குறைந்தது.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு கடந்த அக். 22-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த 4 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், அதிமுக மற்றும் தமாகாவைச் சேர்ந்த உறுப்பினர் என 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.

திமுக, அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து தேர்தல் அலுவலரான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் மந்திராசலம், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாகக் கூறி வெளியேறி, காரில் புறப்பட்டார். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் தேர்தல் அலுவலர் காரை முற்றுகையிட்டு, தாக்கி சேதப்படுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டு காரை எடுக்கவிடாமல் தடுத்து மறியல் செய்தனர்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட அதிமுகவினரை தாந்தோணிமலை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக அதிமுக, நீதிமன்றத்தை நாடி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தேர்தல் நடத்தவேண்டம் எனக் கோரிக்கை வைத்தது. இதற்கிடையில் அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் இருவர் திமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் 6 ஆக அதிகரித்தது. அதிமுகவின் பலம் 5 ஆகக் குறைந்தது. அதிமுக கூட்டணி தமாகா உறுப்பினரைச் சேர்த்து அதிமுக தரப்பில் 6 பேர் என திமுக, அதிமுக இருதரப்பிலும் சமபலத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இன்று (நவ. 29-ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநர் வாணி ஈஸ்வரி தேர்தல் நடத்தும் அலுவலராக அறிவிக்கப்பட்டார். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி ஈஸ்வரி மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பிற்பகல் 3 மணி வரை காத்திருந்த நிலையில் திமுக, அதிமுக, தமாகா உறுப்பினர்கள் யாரும் தேர்தல் நடைபெறும் கூட்ட அரங்கத்திற்கு வரவில்லை. இதையடுத்து மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் வாணி ஈஸ்வரி அறிவித்தார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மாவட்ட திட்ட அலுவலர் மந்திராசலம் உடனிருந்தார்.

இதனால் கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் 2-வது முறையாக ஒத்திவைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்க மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தால் தாங்களும் செல்லலாம் என கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே திமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 6 பேரும் காத்திருந்தனர். அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் யாரும் வராததால் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம் முடிந்த பிறகு அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்