வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று அதிகாலை 4.17 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது என தேசிய புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி நில அதிர்வு ஏற்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தட்டப்பாறை ஊராட்சியில் கடந்த மாதம் 3 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டது. இது பெரிய அளவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 59 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 2 மணி முதல் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை என 6 முறை நில அதிர்வு ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பெரியபேட்டை, சென்னாம்பேட்டை, தும்பேரி, ராமநாயக்கன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. ஆம்பூர் வட்டத்துக்கு உட்பட்ட அரங்கல்துருகம் வனப்பகுதியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
» கோவிட்-19 தடுப்பூசி; எண்ணிக்கை 122.41 கோடியாக உயர்வு
» பெட்ரோல், டீசல் விலை குறைவதற்கு வாய்ப்பில்லை: காரணம் என்ன?
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த தட்டப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மீனூர் கொல்லைமேடு பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் அங்குள்ள 4 வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மீனூர் கொல்லைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி செல்வம் (57). இவர் தனது மனைவி லதா (47), மகன்கள் விஜய் (28), நவீன் (25) ஆகியோருடன் இன்று அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
2 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தனது குடும்பத்தாருடன் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் கீழே உருண்டு விழுந்தன. கட்டில், பீரோக்கள் சில அடி தூரம் நகர்ந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டின் சுவர், மேல்மாடி சுவர், அறைகளில் உள்ள சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.
அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன், நாகேந்திரன், ரமேஷ் ஆகியோரின் வீடுகளிலும் நில அதிர்வால் விரிசல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அச்சமடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறி விடிய விடிய வீதியில் தஞ்சமடைந்தனர். இப்பகுதியில், இதேபோல ஏற்கெனவே 3 முறை நில அதிர்வு ஏற்பட்டதாகவும், இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் பயங்கர சத்தத்துடன் ஏற்பட்டதால் வீட்டுக்குள் செல்லவே அச்சமாக இருப்பதாகவும், சிறிய அளவில் ஏற்படும் நிலநடுக்கம் எதிர்காலத்தில் பெரிய அளவில் ஏற்பட்டு பேரழிவை ஏற்படுத்துமா எனப் பொதுமக்கள் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
நிலநடுக்கம் குறித்த தகவல் அறிந்ததும் வருவாய்த் துறையினர் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்வைத் தொடர்ந்து வருவாய் துறையினர் அப்பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர். வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவத்தால் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வேலூர் மாவட்டத்தில் இருந்து சுமார் 59 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆகப் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago