மழை, பேரிடர்க் காலங்கள்; முதல் நாள் இரவே விடுமுறை அறிக்கவும்: தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

மழை மற்றும் பேரிடர்க் காலங்களில் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு முதல் நாள் இரவே மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறை அறிவிப்பு எடுக்க அறிவுறுத்த வேண்டும் எனத் தமிழக அரசுக்குத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

"மாணவர்களின் நலன், பாதுகாப்பு கருதி மழை மற்றும் இயற்கை பேரிடர்க் காலங்களில் விடுமுறை அறிவிப்பு குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் முடிவெடுத்துக்கொள்ளத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளதைத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வரவேற்கிறது.

பேரிடர்க் காலங்களில் விடுமுறை வழங்கப்படும்போது வானிலை மையத்தின் அறிவிப்பையும் கணிப்பையும் வெளியிடும்போது அதற்கேற்றாற்போல் முதல் நாள் இரவு அல்லது மறுநாள் காலை 6.30 மணிக்குள் விடுமுறை வழங்க ஆட்சித் தலைவர்கள் ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வானிலை மையம் கணிப்பை மீறி இயற்கையின் சீற்றம் சில நேரங்களில் மாறுபட்ட நிலையை ஏற்படுத்துவது தவிர்க்க இயலாது. மேலும், கிராமப்புற மாணவர்கள் பலர் நீண்ட தூரம் பயணித்துக் கல்வி கற்கும் சூழல் உள்ளதால் காலையில் சீக்கிரமாகப் பள்ளிக்குப் புறப்பட வேண்டியுள்ளது.

விடுமுறை அறிவிப்பை சில மாவட்டங்களில் 8 மணிக்கு மேல் அறிவிப்பதால் மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் விடுமுறையை உறுதி செய்ய மழையில் நனைந்துகொண்டு பள்ளிக்கு வந்து மீண்டும் வீடு திரும்பக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது.

எனவே, இதனைக் கவனத்தில் கொண்டு காலை 6.30 மணிக்குள் அறிவிப்பதன் மூலம் மாணவர்களிடையே ஏற்படும் பதற்றத்தைத் தடுக்க முடியும். ஆகவே, சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆவன செய்யும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சார்பில் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்."

இவ்வாறு இளமாறன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE