தக்காளி, காய்கறி விலைகளைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலைகள் ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் கைகளுக்கு எட்டாத அளவுக்கு உயர்ந்துள்ளன. தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளபோதிலும், நிலைமையைச் சமாளிக்க அவை போதுமானவையல்ல.
தமிழ்நாட்டில் அண்மைக் காலங்களில் பெய்த தொடர் மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. அவற்றில் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வாகும். தக்காளி விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்து, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.150 முதல் ரூ.180 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் விலை கிலோ ரூ.60 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. பெரும்பான்மையான காய்கறிகளின் விலை சராசரியாக கிலோ ரூ.100 என்ற அளவில் உள்ளது. காய்கறிகளின் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தக்காளி இல்லாத ரசம்தான் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான வீடுகளில் இன்று பொது உணவாக மாறியிருக்கிறது. இது மிகைப்படுத்தப்பட்ட செய்தியல்ல. உண்மை.
» கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை: குற்றவாளிகளை கைது செய்ய மாணவர்கள் மறியல்
காய்கறிகள் விலை உயர்வின் தாக்கத்தைக் குறைக்கும் நோக்குடன், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும்; சென்னை, கோவை, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சை, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 65 பண்ணை பசுமைக் கடைகள் மூலம் பொதுவாக அனைத்துக் காய்கறிகளும், குறிப்பாகத் தக்காளியும் விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.85 முதல் ரூ.100 என்ற விலையில் விற்பனை செய்யப்படும்; ஒரு நாளைக்கு 15 டன் தக்காளி இவ்வாறு விற்பனை செய்யப் படும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். இது விலைக்குறைப்புக்கான அடையாளமாகவும். நல்லெண்ண நடவடிக்கையாகவும் இருக்கும். ஆனால், மக்களின் பிரச்சினையை இது தீர்க்காது. தமிழ்நாட்டின் ஒரு நாள் தக்காளி தேவை 5 ஆயிரம் டன் ஆகும். சென்னையின் ஒரு நாள் தக்காளி தேவை மட்டும் சுமார் 1000 டன் ஆகும். ஆனால், தமிழகத்தின் மொத்தத் தேவையில் ஐநூற்றில் ஒரு பங்கை மட்டும்தான் கூட்டுறவு கடைகள் மூலம் அரசு விற்கவுள்ளது. அது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
நியாயவிலைக் கடைகளைப் போலவே பண்ணை பசுமைக் கடைகளும் விலைக் கட்டுப்பாட்டுக்கான அற்புதமான தத்துவம் ஆகும். வெளிச்சந்தையில் பதுக்கல் காரணமாக விலைகள் உயருமபோது, பண்ணை பசுமைக் கடைகளில் மலிவு விலையில் காய்கறிகள் விற்கப்பட்டால், அதனால் வெளிச் சந்தையில் ஏற்படும் தாக்கத்தால், பதுக்கப்பட்ட பொருட்கள் வெளியில் கொண்டுவரப்படும்; அதனால் விலைகள் குறையும் என்பதுதான் அரசு நிறுவனங்கள் மலிவு விலையில் பொருட்களை விற்பதற்கான காரணம். சந்தையில் சமநிலையை ஏற்படுத்துவதுதான் இந்தத் தத்துவத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
ஆனால், இப்போது பதுக்கல் காரணமாக விலை அதிகரிக்கவில்லை. மாறாக, பெருமழையால் தக்காளி மற்றும் காய்கறிச் செடிகள் அழிந்ததால், தேவைக்கும் வரத்துக்கும் இடைவெளி அதிகரித்ததுதான் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். இத்தகைய சூழலில் மிகக்குறைந்த அளவில் காய்கறிகளையும், தக்காளியையும் விற்பனை செய்வதால் விலையைக் கட்டுப்படுத்த முடியாது. தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, மகாராஷ்டிரா வரை இதே நிலைதான் என்பதால் சந்தைச் சமநிலை மூலம் காய்கறிகள் & தக்காளியின் விலையைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.
மானிய விலையில் அரசே தக்காளி மற்றும் காய்கறிகளை விற்பதன் மூலம் மக்களின் சுமையைக் குறைப்பதுதான் இன்றைய தேவை ஆகும். அதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் தக்காளி மற்றும் காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்ய வேண்டும்.
கரோனா காலத்தில் நடமாடும் காய்கறிக் கடைகள் உருவாக்கப்பட்டதைப்போல இப்போதும் உருவாக்கி மலிவு விலையில் காய்கறி மற்றும் தக்காளியை விற்பனை செய்யலாம். இவற்றை அரசு நேரடியாக உழவர்களிடமிருந்து கொள்முதல் செய்தால் அவர்களுக்கும் நல்ல விலை கிடைக்கும். இதற்காக விலைக்கட்டுப்பாட்டு நிதியம் ஒன்றைத் தமிழக அரசு நிரந்தரமாக ஏற்படுத்த வேண்டும்’’.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago