‘எங்க அப்பா அம்மாதான் படிக்க முடியலை, காடுதான் அவங்க வாழ்க்கையினு ஆயிருச்சு, இந்த தலைமுறையில நாங்களாவது நாலு எழுத்து படிச்சு, மற்றவங்களப் போல ஆகலாமுனா பேருந்து வசதியில்லாம அதுவும் கேள்விக்குறியா மாறிடுச்சு’- தினமும் சரக்கு வாகனத்தில் பள்ளிக்குச் செல்லும் பழைய சர்க்கார்பதி கிராம மாணவர்கள் தங்கள் வேதனையை இவ்வாறு வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனைமலை அடுத்துள்ள சேத்துமடை அருகே 4 கி.மீ. தொலைவில் பழைய சர்க்கார்பதி கிராமமும், அடர்ந்த வனப்பகுதியில் மின் உற்பத்தி நிலையம் அருகே புதிய சர்க்கார்பதி பழங்குடியின கிராமமும் அமைந்துள்ளது. பழைய சர்க்கார்பதி கிராமத்தில் பழங்குடியின இனத்தின் மலசர் பிரிவைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட குடும்பங்களில் 600க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள குழந்தைகள் கல்வி பயில இப்பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. அதில் 60 மாணவர்களுக்குப் பாடம் கற்றுத்தர, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர்.
ஆரம்பப்பள்ளி மாணவர்களைத் தவிர்த்து, நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி படிக்க விரும்பும் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், 4 கி.மீ. தொலைவில் உள்ள சேத்துமடை கிராமத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது. அதற்குப் போதுமான பேருந்து வசதி கிடையாது. இந்த கிராமத்துக்கு உள்ள ஒரே போக்குவரத்து வசதி, சேத்துமடையிலிருந்து புதிய சர்க்கார்பதி கிராமத்துக்குச் செல்லும் 34 ஏ என்னும் அரசுப் பேருந்து மட்டுமே.
அதுவும் இந்த பேருந்து பழைய சர்க்கார்பதி கிராமத்துக்குள் வருவதில்லை. பழைய சர்க்கார்பதி பிரிவிலேயே பயணிகளை இறக்கி விட்டுச் செல்கின்றனர். அங்கிருந்த சுமார் 3 கி.மீ நடந்து கிராமத்துக்குச் செல்ல வேண்டி உள்ளது. இந்தப் பேருந்து பள்ளி செல்ல விரும்பும் மாணவர்களுக்கு எவ்வகையிலும் பயன் தருவதில்லை. ஆனாலும் படிக்கும் ஆர்வத்தில், மாணவர்கள் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர்.
» ஜனவரியில் இருந்து இணை நோய் உள்ள இந்தியக் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த வாய்ப்பு
சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம்
4 கி.மீ. தொலைவில் உள்ள சேத்துமடை உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு, மழைக் காலங்களில் போக்குவரத்து வசதி பெரும் சவால்தான். எப்படியும் படித்து ஆளாக வேண்டும் என்ற மாணவர்களின் கல்வி வேட்கை முன், ஆபத்தான முறையில் சரக்கு ஆட்டோவில் பயணிப்பது பெரிய தடையாகத் தெரிவதில்லை. ஆனாலும் பள்ளி செல்லும் தங்கள் பிள்ளைகள் பத்திரமாக வீடு திரும்பும் வரை, பெற்றோர்கள் அச்சத்துடன்தான் காத்திருக்க வேண்டியதுள்ளது.
இதுகுறித்து மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பரமசிவம் கூறும்போது, ‘’தங்கள் குழந்தைகளின் எதிர்காலம், தங்களின் வாழ்வைப் போல் காட்டுக்குள் முடங்கி விடக் கூடாது என்பதால் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் அவர்களை சரக்கு ஆட்டோவில் ஏற்றி பள்ளிக்கு அனுப்புகின்றனர். இதற்காக ஒவ்வொரு வாரமும் ஒரு குழந்தைக்கு ரூ.300 செலவிடுகின்றனர். இப்பகுதியில் இருந்து சுமார் 50 மாணவர்கள் சரக்கு ஆட்டோவில், சேத்துமடை உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்து வருகின்றனர்.
சரக்கு வாகனம் மற்றும் லாரிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய அரசு தடை விதித்துள்ள நிலையில், சர்க்கார்பதி கிராம மாணவர்களுக்கோ, வேறு வழியில்லை. குழந்தைகள் பாதுகாப்பு குறித்து அக்கறை காட்டும் கல்வித்துறை, சமூக நலத்துறை அதிகாரிகள், ஆபத்தான முறையில் பயணிக்கும் குழந்தைகளுக்கு பெரியளவில் ஏதாவது பாதிப்பு நடந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பார்கள் போலிருக்கிறது. மாணவர்களின் எதிர்காலக் கனவுகள் 4.கி.மீ. ஆபத்தான பயணத்தில் முடிவுக்கு வந்துவிடக்கூடாது என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.
பழைய சர்க்கார்பதி, தம்மம்பதி, கல்லாங்குத்து, நாகரூத்து, பொன்னாலம்மன்துறை, மன்னம் மற்றும் மூவேந்தர் காலனி பகுதிகளுக்கு சேத்துமடையில் இருந்து மினி பேருந்து இயக்கவும், புதிய சர்க்கார்பதிக்கு 8 கி.மீ. சாலையை செப்பனிட்டு, மீண்டும் காலை முதல் இரவு வரை அரசு பேருந்தை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
50 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago