இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் விரைவாக விசாரித்து குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்துப் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகைகூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும், வேதனையும் அளிக்கிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் அங்கமாக இருந்த திருக்கோவிலூரை அடுத்த தி.மண்டபம் பகுதியில் உள்ள இருளர் குடியிருப்பைச் சேர்ந்தவர் காசி. அவரை சரியாக பத்தாண்டுகளுக்கு முன் இதே நவம்பர் 22ஆம் தேதி திருக்கோவிலூர் காவல்துறையினர் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அன்றிரவு இருளர் குடியிருப்புக்குள் நுழைந்த காவலர்கள் சோதனை என்ற பெயரில் அங்குள்ள வீடுகளைச் சூறையாடினர்.
பின்னர் இருளர் குடியிருப்பைச் சேர்ந்த 5 பெண்கள் உள்ளிட்ட 9 பேரை விசாரணைக்காக, ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் என இரு வாகனங்களில் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களில் பெண்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அங்குள்ள காட்டுக்குள் ஓட்டிச் சென்ற காவலர்கள், அங்கு 4 பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் ஒருவர் மகப்பேற்றை நோக்கியிருந்தவர்; மற்றொருவர் 17 வயதுச் சிறுமி. அவர்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமின்றி பல்வேறு சூழல்களில் மிரட்டி, இதுகுறித்துப் புகார் கொடுக்காமல் தடுக்க முயன்றனர். அதையும் மீறி அந்தப் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து இழுபறிக்குப் பிறகுதான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவ்வாறு வழக்குத் தொடரப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாததை நியாயப்படுத்த முடியாது. வழக்கு தாமதப்படுத்தப்படுவதற்கு காவல்துறைதான் காரணம் என்று கூறப்படுகிறது.
வழக்கமாக குற்ற வழக்குகளில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். ஆனால், திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீண்ட தாமதத்திற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்கு முன்தான் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அக்குற்றப்பத்திரிகையில் உள்ள குறைகளைக் களைந்து அனுப்பும்படி காவல்துறையிடம் நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், காவல்துறை இன்று வரை திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், அதன்பின் இந்த வழக்கு விழுப்புரம் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்படும். திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இப்போது தாக்கல் செய்யப்பட்டால்கூட விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட ஓரிரு ஆண்டுகள் ஆகும்.
பழங்குடியினப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு ஏற்கெனவே 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அவர்களுக்கு நீதி கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும் என்பதே நீதியை மறுக்கும் செயல்தான். ஆனால், அதற்கும்கூட வாய்ப்பளிக்காமல் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையைக் காவல்துறை முடக்கி வைத்திருப்பது இந்த வழக்கின் விசாரணையைச் சீர்குலைக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காவலர்கள் தொடக்கத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும்கூட, பின்னர் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி மீண்டும் பணியில் சேர்ந்துவிட்டனர். அவர்கள் இப்போதும் பணியில் உள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த வழக்கைக் காவல்துறை தாமதப்படுத்துவதாகத் தெரிகிறது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உடலளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகும் நீதி மறுக்கப்படுவது நியாயமல்ல.
திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களும் தற்போதைய காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவுக்கு நன்றாகத் தெரியும். இந்தக் கொடிய நிகழ்வு நடந்தபோது வடக்கு மண்டலக் காவல்துறை தலைவராக இருந்தவர் அவர்தான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ததும் அவர்தான். அதன் பிறகுதான் இதில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இவ்வழக்கு குறித்த அனைத்து உண்மைகளையும் அறிந்த அவருக்கு, இந்த வழக்கை இயல்பான முடிவுக்குக் கொண்டுவரும் கடமை உள்ளது.
இருளர் பெண்கள் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையை உடனடியாகத் தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் இந்த வழக்கை விழுப்புரம் வன்கொடுமைத் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றவும், குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago