பெட்ரோல்; டீசல் விலை விவகாரத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் பேச்சு ஏமாற்றமளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு பத்து ரூபாயும் குறைத்துள்ள நிலையில் அதனைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியினை கணிசமாகக் குறைத்துள்ளன.
தமிழ்நாட்டு மக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை தமிழ்நாடு அரசு குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 2014 ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கை தாமாகவே மாநிலங்களின் வரியை குறைத்துவிடும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தத் தருணத்தில், கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டி, 06.06.2018 அன்று தமிழக சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும் இப்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமிழக அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்திற்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை அடித்தட்டு மக்களையும், குறிப்பாக, தாய்மார்களையும் பெரிதும் பாதிக்கக் கூடிய வகையிலேயே இருக்கின்றன.. இந்த காரணத்தால் இதுபற்றி உடனடியாக அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
» சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பூமிநாதனுக்கு வீர வணக்கம்: வைகோ
» சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது: காவல்துறை தகவல்
கேரளாவை விட தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருந்த தருணத்தில், அந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தற்போதைய முதல்வர், ஆனால் இன்று மத்திய அரசு குறைத்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலங்களான பஞ்சாப் ராஜஸ்தான் உள்பட 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் தமிழகத்தை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாக இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் அதைச் செய்வதற்கான சாத்தியம் இல்லை. என்று நிதியமைச்சர் அறிவித்திருப்பது வேதனைக்குரியது.
நிதியமைச்சர் தனது அறிக்கையில் 1.8.2014, 2.11.2011 மற்றும் 4.11.2021 ஆகிய தேதிகளில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரிகள், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மத்திய அரசின் வரி அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என்று கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் வரி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்ற நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் வரியைக் குறைக்கும்போது தமிழக அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது என்றே தமிழக மக்கள் நினைக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த வரி விதிப்பு என்பது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது.
இதையெல்லாம் தெரிந்து கொண்டு தானே, திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது.
அதில் ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததா? இல்லையே. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு மட்டும் தானே லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்டது.
தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினால், 2014 ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல், டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் நிதியமைச்சர்.
அப்போதும் கூட மாநில அரசின் வரி விகிதத்தைக் குறைப்பேன் என்று சொல்லாமல் மத்திய அரசின் வரிக் குறைப்பால் மாநில அரசின் வரிவிதிப்பு தானாகக் குறைந்துவிடும் எனக் கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். அதே வேளையில், வாக்குறுதியே அளிக்காத பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்துள்ளன.
திமுகவின் இந்த அறிவிப்பு ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தருணத்தில் சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்பப்படித்தவனாக இல்லாவிட்டாவிலும் கூட பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்ற வித்தியாசம் அவர்களுக்குத் தெரியும் என்ற அண்ணாவின் பொன்மொழியை முதல்வருக்கு நினைவூட்டுகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago