சிறப்பு எஸ்.ஐ. பூமிநாதன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட நவல்பட்டு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் திருடர்களால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பூமிநாதன் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், தினகரன், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் பூமிநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் பூமிநாதனின் உடல் அவரது சொந்த ஊரான சோழமா தேவியில் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது. காவலர்கள் சூழ்ந்திருக்க, 3 சுற்றுகளாக 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன், மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பூமிநாதனின் இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள், காவல்துறையினர் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE