மாணவி தற்கொலை: புகார் அளிக்கவந்த தாய், உறவினர்களைத் தாக்குதவதா?- போலீஸாருக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

By செய்திப்பிரிவு

கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக் கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''கரூர் பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் (19.11.2021) “பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொள்ளும் கடைசிப் பெண் நானாகத்தான் இருக்க வேண்டும்” எனக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி நெஞ்சை உலுக்குகிறது.

மிருகத்தனமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர்

தன் மகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவியின் தாயார், வெங்கமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க அன்று இரவு தன்னுடைய உறவினர்களை அழைத்துக்கொண்டு சென்றிருக்கிறார்.

அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவைப் பெறாமல் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தகாத முறையில் பேசியதோடு, புகார் அளிக்க வந்த மாணவியின் உறவினரை ''என்னடா இப்படி உட்கார்ந்திருக்கிற'' எனச் சொல்லி தனது பூட்ஸ் காலால் உதைத்து அடித்திருக்கிறார். மேலும், அவரை லாக்கப்பில் தள்ளி அடைத்திருக்கிறார். ''ஏன் அவரை அடிக்கிறீர்கள்'' எனக் கேட்ட உறவினர்கள் சிலரையும் சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்.

இரவு முழுவதும் அதைத் தொடர்ந்து அடுத்த நாள் காலைவரை விசாரணை என்ற பெயரில் மாணவியின் தாயையும், அவருடன் சென்றவர்களையும் காவல் நிலையத்திலேயே இருக்க வைத்திருக்கிறார். காவல்துறையின் இத்தகைய தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

மிருகத்தனமாக நடந்துகொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை உடனடியாகக் கைது செய்வதுடன் பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும் மாணவியின் மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே கணவரை இழந்து தற்பொழுது மகளையும் இழந்து துன்பத்தில் உழலும் மாணவியின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

''இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் பெண்கள் செல்ல வேண்டாம், பாலியல் வன்முறைகள் அதிகமாக நடைபெறும் நாடாக இந்தியா மாறி இருக்கிறது'' என அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இதிலிருந்து இந்தியாவில் பாலியல் வன்முறை அதிகரித்து வருவதை அறியலாம். கடந்த ஒரு வாரத்தில் கோவை, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கல்வி நிலைய வளாகங்களில் பாலியல் துன்புறுத்தலால் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கல்வி நிலையங்களில் விசாகா

மேலும் சில மாணவிகள் பாதிப்புக்கு உள்ளாகி புகார் கொடுத்துள்ளனர். அதன்மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு, போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. தொடரும் பாலியல் வன்முறைகளை அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

கல்வி நிலையங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக் கமிட்டி (விசாகா) உடனடியாக அமைக்க வேண்டுமெனவும், அதைப் பரவலாக விளம்பரப்படுத்த வேண்டுமெனவும், பாலியல் தொந்தரவு இருந்தால் மேற்கண்ட கமிட்டிக்கு புகார் கொடுக்கலாம் என்பதையும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்குத் தகவல் அளித்திட ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

பாலியல் புகார் தரப்பட்டால் அதனடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்