மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு சட்டமாக நிறைவேற்ற வேண்டும்: திமுக வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை மத்திய அரசு சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மக்களவை - மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அண்ணா அறிவாலையத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றின் விவரம்:

தீர்மானம் 1 : உயிர்த் தியாகம் செய்த விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி

மத்திய பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துக் கடும் குளிரிலும், அடக்குமுறையிலும் துணிச்சலாக நின்று போராடி - “அச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும்” என்ற பிரதமர் அறிவிப்பிற்குப் பின்னணியாக இருக்கும் உயிர்த் தியாகம் செய்த 700-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இக்கூட்டத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீர்மானம் 2: குளிர்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டும்

“குறைந்தபட்ச ஆதார விலையே இல்லாத” மூன்று வேளாண் சட்டங்களை முதலில் அவசரச் சட்டங்களாகவும், பிறகு மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் கொண்டுவந்தபோது தொடர்ந்து எதிர்த்து வந்தார் திமுக தலைவர் ஸ்டாலின். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து, மாநிலத்தில் திமுக தலைமையில் உள்ள கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துப் பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார். அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போராட்டங்களில் பங்கேற்று விவசாயிகள் போராட்டத்திற்குத் தொடக்கத்திலிருந்தே ஆதரவு தெரிவித்து வருகிறது திமுக.

தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும் அடுத்தடுத்துப் போராட்டங்களை நடத்தியது திமுக. வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய மறுநாளே - அந்தச் சட்டங்களை எதிர்த்து வாக்களித்ததோடு மட்டுமின்றி - 23.9.2020 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு - தமிழ்நாடு முழுவதும் அறப் போராட்டம் அறிவித்து - நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் காஞ்சிபுரத்தில் பங்கேற்றுப் பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின்.

அனைத்துக் கூட்டணிக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கூட்டம் போட்டு - இந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் - 5.12.2020 அன்று கருப்புக் கொடி ஏந்தி திமுக தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்தினார். திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் 30.11.2020 அன்று கூட்டறிக்கை வெளியிட்டு - மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், 8.12.2020 அன்று அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு அறிவித்த நாடு தழுவிய போராட்டத்தில் பங்கேற்பது என்றும் அறிவித்து - அவ்வாறே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய அளவில் 20-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து 9.12.2020 அன்று குடியரசுத் தலைவர்களைச் சந்தித்து “மூன்று வேளாண் சட்டங்களையும் அரசைத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தது.

18.12.2020 அன்று தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கூட்டணிக் கட்சியினர் சார்பில் ஒரு நாள் உண்ணாவிரத அறப் போராட்டம் இருந்து இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தப்பட்டது. பஞ்சாப், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வேளாண் சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட்ட நிலையில் - தமிழ்நாட்டிலும் அப்படியொரு தீர்மானம் போட வேண்டும் என்று வலியுறுத்தி 1.1.2021 அன்று, அன்றைய தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதினார் திமுக தலைவர்.

அனைத்துக் கூட்டணிக் கட்சியினரை அழைத்துப் பேசி - அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தினாலும் அச்சட்டங்களைத் திரும்பப் பெறவில்லை என்பதால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 28.8.2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வராக - நம் கழகத் தலைவரே தீர்மானத்தை முன்மொழிந்து “மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுக” என வலியுறுத்தும் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார் என்பதை இந்தக் கூட்டம் நன்றியுணர்வுடன் பதிவு செய்கிறது.

வழக்குகள், கண்ணீர் புகை குண்டுகள், தடியடி, போராட்டத்திற்குள் காரை விட்டுக் கொன்றது என தங்கள் போராட்டத்தை நோக்கி வந்த அனைத்து அராஜாகத்தையும் - கண்மூடித்தனமான அடக்குமுறைகளையும் - முள் வேலிகளையும் - தைரியமாக எதிர்த்து நின்று - இந்திய விவசாயப் பெருங்குடி மக்கள் “அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு” பின்னால் நின்று, அவர்கள் நடத்தி வந்த போராட்டத்திற்கு திமுக தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது. அந்த ஆதரவு எதிர்க்கட்சியாக இருந்தபோதும் - ஆளுங்கட்சியான பிறகும் தொடர்ந்தது.

இந்நிலையில், 15 மாதங்களுக்கு மேலாக மவுனம் சாதித்த பிரதமர் அவர்களுக்கு விவசாயிகளின் பலத்தை உணர்த்தி - இந்த நாட்டின் முதுகெலும்பான விவசாயப் பெருங்குடி மக்களுக்கு எதிரான இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவது என்ற பிரதமரின் அறிவிப்பினை அறவழிப் போராட்டம் மூலம் வெளியிட வைத்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இந்தக் கூட்டம் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறது.

அறிவிப்பினை முன்னெடுத்துச் சென்று, நாடாளுமன்றத்தின் வருகின்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் அறிவிப்பை - சட்டமாக நிறைவேற்றிட வேண்டும் என்று இந்தக் கூட்டம் மத்திய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''.

இவ்வாறு திமுக தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 secs ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்