முதல் முயற்சி தோல்வி; ரயில்வே தனியார் மயத்தைக் கைவிடுக: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

ரயில்வே துறையைத் தனியார் மயமாக்கும் முதல் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

''தெற்கு ரயில்வே சார்பில் தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டிலிருந்தும் இயக்கப்படும் 13 விரைவு ரயில்களைத் தனியார் மயமாக்கும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இதன் மூலம் ரயில் சேவையை ஏழை மற்றும் நடுத்தர மக்களிடமிருந்து தட்டிப் பறிக்கும் முயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது.

தாராளமயமாக்கல் என்பதே தனியார் மயமாக்கல்தான் என்றாகிவிட்ட நிலையில், அந்த நடவடிக்கைகளின் நீட்சியாக ரயில் சேவைகளைத் தனியார் மயமாக்கும் நடவடிக்கைகள் கடந்த ஆண்டின் மத்தியில் தொடங்கப்பட்டன. நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 ரயில்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு தீர்மானித்தது. அவற்றில் சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்கள், கன்னியாகுமரியிலிருந்து எர்ணாகுளத்திற்கு இயக்கப்படும் ரயில் ஆகிய 13 ரயில்களைத் தனியார் மயமாக்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டிருந்த நிலையில், எந்த நிறுவனமும் அந்தத் தடங்களில் ரயில்களை இயக்குவதற்கு முன்வரவில்லை.

அகில இந்திய அளவில் கூட டெல்லியிலும், மும்பையிலும் சில ரயில்களை மட்டும் ஐஆர்சிடிசி நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளது. தனியார் மயமாக்கப்படவிருந்த ரயில்களில் 95%க்கும் கூடுதலானவற்றை ஏலம் எடுக்க எந்த நிறுவனமும் முன்வரவில்லை. உண்மையில், ரயில்களைத் தனியார் மயமாக்க நினைத்த மத்திய அரசுக்கு இது பெரும் ஏமாற்றமாக இருக்கலாம். ஆனால், நீண்ட தொலைவு பயணத்திற்கு ரயில்களையே நம்பியிருக்கும் மக்களுக்கு இது மகிழ்ச்சியான செய்திதான். ரயில்கள் தனியார் மயமாகி விடக்கூடாது என்பதுதான் பெரும்பான்மையினரின் விருப்பம்.

இந்தியாவைப் பொறுத்தவரை ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ரயில் சேவைகள் என்பது மிகப்பெரிய வரம் ஆகும். பேருந்துகளுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த கட்டணத்தில், பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்கு ரயில் சேவைகள் மட்டும்தான் ஒரே வாய்ப்பாகும். இத்தகைய ரயில்கள் தனியார் மயமாக்கப்பட்டால், அவற்றின் கட்டணம் எட்டாத உயரத்திற்குச் சென்றுவிடும்.

சரக்குப் போக்குவரத்தில் மிக அதிக லாபம் ஈட்டும் ரயில்வே துறை, அதைப் பயணிகள் சேவைக்கு மானியமாக வழங்குகிறது. அதனால், பயணிகள் கட்டணத்தில் சராசரியாக 47%, மானியமாக வழங்கப் படுகிறது. ரயில்கள் தனியார் மயமாக்கப்படும்போது அவற்றை இழப்பு இல்லாமல் இயக்குவதற்கே சராசரியாக 47% கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கும். அத்துடன் தனியார் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் லாபத்தையும் சேர்த்தால் கட்டணம் 70% வரை உயர்த்தப்படக்கூடும். அந்த அளவுக்குக் கட்டணம் உயர்த்தப்பட்டால், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களால் ரயில்களில் பயணிக்க முடியாது.

ரயில்களை ஏலத்தில் எடுத்து இயக்க தனியார் நிறுவனங்கள் முன்வராததற்கு இரு காரணங்கள் உள்ளன. முதலாவது வருவாய்ப் பகிர்வு நிபந்தனை. ஒரு ரயிலைத் தனியார் இயக்கும் பட்சத்தில் அதன் வருவாயில் ஒரு பங்கை ரயில்வே துறைக்கு வழங்க வேண்டும். அதற்கு எந்த நிறுவனமும் தயாராக இல்லை.

இரண்டாவது கட்டண உயர்வு. இந்தியாவில் எல்லா ரயில்களும் தனியார் மயமாக்கப்படப் போவதில்லை. 10%க்கும் குறைவான ரயில்கள் மட்டும்தான் தனியார் மயமாக்கப்படவுள்ளன. அந்த வண்டிகளை இயக்கும் நிறுவனங்கள் கட்டணத்தை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக் கொள்ள முடியும். ஆனால், மீதமுள்ள 90% ரயில்களில் கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் தனியார் ரயில்களுக்கு வரவேற்பு இருக்காது என்பதால்தான் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்க முன்வரவில்லை.

ரயில்களைத் தனியார் மயமாக்கும் முயற்சி தோல்வியடைந்திருந்தாலும் அது தற்காலிகமானதுதான். ரயில்கள் தனியார் மயமாக்கப்படும் வாய்ப்புகள் இன்னும் முழுமையாக விலகவில்லை என்பதுதான் உண்மை. வருவாய்ப் பகிர்வு நிபந்தனையை மத்திய அரசு தளர்த்தினாலோ, பெரும்பான்மை ரயில்களைத் தனியார் மயமாக்க மத்திய அரசு முன்வந்தாலோ நிலைமை தலைகீழாக மாறிவிடும். அதன்பின்னர் தனியார் நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம் என்பதால், ரயில்வே துறை தனியார் பெரு நிறுவனங்களின் லாப வேட்டைக் காடாகிவிடும். அவற்றின் ஆதிக்கத்தை யாராலும் தடுக்க முடியாது.

ரயில்களை இயக்கத் தனியார் நிறுவனங்கள் முன்வராததைக் காரணம் காட்டி, வருவாய்ப் பகிர்வு நிபந்தனையை ரத்து செய்யவும், அதிக எண்ணிக்கையிலான ரயில்களைத் தனியார் மயமாக்கவும் மத்திய அரசு முன்வரக்கூடும். அது மக்களுக்கோ, மத்திய அரசுக்கோ நன்மையளிப்பதாக இருக்காது. மாறாக, தனியார் நிறுவனங்கள் இந்திய மக்களையும், ரயில்வே துறையின் கட்டமைப்புகளையும் சுரண்டுவதற்கே வழிவகுக்கும். எனவே, ரயில்களைத் தனியார் மயமாக்கும் முயற்சி தோற்றதாகவே இருக்கட்டும்; மீண்டும் அந்த முயற்சியை மத்திய அரசு தொடங்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்