மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம்: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

பாஜகவின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"பாஜக ஆட்சி மத்தியில் அமைந்து, கடந்த 7 ஆண்டுகளாகத் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாக மக்கள் அனைத்து நிலைகளிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடும் விலைவாசி உயர்வால் தவியாய் தவிக்கும் மக்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதற்கு இணையாகக் குறைக்காமல் கலால் வரியை உயர்த்தி, இதுவரை கடந்த 7 ஆண்டுகளில் ரூ.23 லட்சம் கோடி வரை வசூலித்து மத்திய பாஜக அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இதைவிடக் கடுமையான மக்கள் விரோத நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டில் சமையல் எண்ணெய் விலை இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர் 300 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பெட்ரோல் மீதான கலால் வரியை 250 சதவிகிதம், அதாவது ஒரு லிட்டருக்கு ரூ.9.48இல் இருந்து ரூ.32.98 ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல, டீசல் மீதான கலால் வரி 800 சதவிகிதம் உயர்த்தியதால் ஒரு லிட்டருக்கு ரூ.3.65இல் இருந்து ரூ.31.83ஆக கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. எரிபொருட்களின் விலையை உயர்த்தி சாதாரண மக்களை வாட்டி வதைக்கும் மோடி அரசு, இந்தியாவின் பெரும் பணக்காரர்களின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதனால் மத்திய பாஜக அரசுக்கு ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக அரசின் தவறான கொள்கையின் காரணமாக கரோனா தொற்றை உரிய முறையில் எதிர்கொள்ளாததால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையான பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இதனால், இந்தியாவில் தற்போது 20 கோடி பேர் பட்டினியில் வாடி வருகின்றனர். இது உலக அளவிலான பட்டியலில் நான்கில் ஒரு பங்காகும். 2021ஆம் ஆண்டிற்கான உலகளாவிய பட்டினிப் பட்டியலில் மொத்தமுள்ள 116 நாடுகளில் இந்தியா 101ஆம் இடத்தில் உள்ளது. இதைப் பற்றி பிரதமர் மோடி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. கடந்த 67 ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை சொத்துகளை நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் மோடியின் கார்ப்பரேட் நண்பர்களுக்குத் தாரை வார்க்க முயற்சி நடைபெறுகிறது. கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது.

மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் மக்களின் பாதிப்பை உணர்த்துகிற வகையில் வருகிற நவம்பர் 22 முதல் 29ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் அளவில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் ஆலோசனையின்படி நடைபெறும் இப்பிரச்சாரப் பயணத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கதர் குல்லா அணிந்து, கையில் மூவர்ணக் கொடியையும், கண்டனப் பதாகைகளையும் தாங்கிக் கொண்டு விழிப்புணர்வு பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.

விடுதலைப் போராட்டக் காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட சத்தியாகிரகம் எத்தகைய உணர்வுகளை ஏற்படுத்தியதோ, அதைப் போல காங்கிரஸ் கட்சியினர் நடத்தும் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் அமைய வேண்டும். இந்தப் பயணம் மக்களிடையே பாஜக அரசுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற வகையில், காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளான வகையில் அணி திரண்டு பங்கேற்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு எதிராக ஒலிக்கும் காங்கிரஸின் குரலாக, மக்களின் எழுச்சியை ஏற்படுத்துகின்ற வகையில் விழிப்புணர்வு பிரச்சாரம் அமைய வேண்டும்.

மக்கள் விரோத பாஜக ஆட்சியின் அவலங்களைப் பட்டியலிட்டுத் தயாரிக்கப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களிடையே காங்கிரஸ் கட்சியினர் விநியோகம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக மக்களிடையே கருத்துகளைத் திரட்டுவதே இந்த அறப் போராட்டத்தின் நோக்கமாகும். இந்தப் போராட்டம் வெற்றி பெறுவதன் மூலமாக பாஜக ஆட்சியை அகற்றுவதற்கு தமிழகத்தில் அடித்தளமாக அமைய வேண்டும்.

தமிழகம் முழுவதும் நடைபெறும் பிரச்சாரப் பயணத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள மூத்த காங்கிரஸ் தலைவர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் முன்னோடிகளைப் பெருமளவில் திரட்டுகிற பணியை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஆலந்தூரில் ஏற்பாடு செய்யபட்டுள்ள நிகழ்ச்சியில் நான் பங்கேற்க உள்ளேன்."

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்