படைப்புச் சுதந்திரம் சூர்யாவுக்கு மட்டும்தானா; எங்கள் மனம் வலிக்கிறது- பாரதிராஜாவுக்கு அன்புமணி பதில் கடிதம்

By செய்திப்பிரிவு

வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா?, ராமதாஸின் சமூக நீதி சாதனைகள் தெரியுமா என்று அன்புமணி ராமதாஸ் இயக்குநர் பாரதிராஜாவுக்குக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இயக்குநர் பாரதிராஜாவுக்கு எழுதியுள்ள நீண்ட பதில் கடிதம்:

’’ஜெய்பீம் சர்ச்சை தொடர்பாக தாங்கள் எனக்குக் கடிதம் எழுதியிருந்தீர்கள். களப்போராளியாகவும், யாருமே துணியாத காலத்தில் சமூகநீதியைத் திரைப்படத்தில் பதிவு செய்தவர் என்ற முறையிலும், படைப்பாளியாகவும் எனக்குக் கடிதம் எழுதியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள், மகிழ்ச்சி.

ஒடுக்கப்பட்ட மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய உரிமைகளுக்காக போராட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. இன்று தமிழ்நாட்டில் அதிகமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடி அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுத் தந்ததில் ராமதாஸுக்கு நிகராக இங்கு வேறு யாரும் இல்லை.

ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை சாதிப் பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனையும் அல்ல. இது ஒரு சமூகப் பிரச்சனை. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின் பெருங்குடி சமுதாயமான வன்னியர் சமூகம் திட்டமிட்டு, தொடர்ந்து இழிவுபடுத்தப்படுவது தொடர்பான சமூகப் பிரச்சனை. இந்தப் பிரச்சனையில் உங்களுக்கும் திரைத்துறையினருக்கும் மிகப்பெரிய புரிதல் இல்லை என்பது எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஜெய்பீம் திரைப்படத்தில் சாதிவெறி பிடித்த, கொடுமைக்கார, சைக்கோ காவல் உதவி ஆய்வாளர் (வில்லன்) இல்லத்தில் மாட்டியிருக்கும் காலண்டரில் வன்னியர்களின் அடையாளமான அக்னிக் குண்டம் இல்லாமல் நீங்கள் போற்றி வணங்கும் தேசியமும், தெய்வீகமும் எனது இரண்டு கண்கள் என்று முழக்கமிட்ட முத்துராம லிங்கத்தேவரின் படம் இருந்தால் நீங்களும், தேவர் சமுதாயமும் சும்மா இருப்பீர்களா? அல்லது கொங்கு மக்களால் கடவுளுக்கு இணையாக வழங்கப்படும் வீரத்தின் விளைநிலம் தீரன் சின்னமலையின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாட்காட்டி இருந்திருந்தால் அவர்கள் கொதித்து எழுந்து இருக்க மாட்டார்களா? அண்ணல் அம்பேத்கரின் புகைப்படம் இருந்திருந்தால் என்னவாகி இருக்கும்? படைப்புச் சுதந்திரம் என்று சும்மா இருந்திருப்பீர்களா?

ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன், மேற்கண்டவற்றில் எந்தக் காட்சி அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தாலும் அதை கண்டித்தும் முதல் குரல் என்னிடமிருந்துதான் வந்திருக்கும்.

வானளாவிய படைப்புச் சுதந்திரம் நடிகர் சூர்யாவுக்கு மட்டும்தானா? இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க முனைந்த நடிகர் விஜய் சேதுபதிக்கு அந்தப் படைப்புச் சுதந்திரம் மறுக்கப்பட்டது ஏன்? கடுமையான கண்டனக் கடிதத்தைத் தாங்கள்தான் எழுதியிருந்தீர்கள், நினைவு இருக்கிறதா?

சமீபத்தில் வெளியான Family Man- II தொடர் முழுவதும் தடை செய்ய வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கை விடுத்தீர்கள். அப்பொழுது எங்கே போயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்? அண்மையில் வெளியான ’கர்ணன்’ படத்தில் 1997ஆம் ஆண்டு என்று இருந்ததை மாற்றி ’1990-களின் இறுதியில்” என்று போட வைத்தபோது, என்னவாயிற்று உங்கள் படைப்புச் சுதந்திரம்?

படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் வன்னியர்களுக்கு புனிதமான அக்னிக் குண்டத்தை வைத்து சத்ரியர் என்ற அடிக்குறிப்பு போட்டு கொலையாளிகளாகக் காண்பித்தால் அதற்கு நீங்களும், திரைத்துறையினரும் ஆதரவு அளிக்கிறீர்களா?

’எலி வேட்டை’ என்ற பெயரில் படத்தைத் தொடங்கி, தயாரித்து முடிக்கும் தருவாயில் பரபரப்புக்காக ’ஜெய்பீம்’ ஆக்கி பெயர் அரசியல் செய்து வியாபாரமாக்கியது நாங்கள் அல்ல. அந்தோணிசாமி என்று பெயர் வைப்பதற்கு பயந்து குருமூர்த்தி என்று பெயர் அரசியல் செய்து குறவர் சமுதாயத்தை இருளர் சமுதாயமாக மாற்றி, வட தமிழகத்தில் உள்ள இரண்டு பெரிய சமுதாயத்திற்கும் சாதிக் கலவரத்தைத் தூண்டி பெயர் அரசியல் செய்தது திரையுலகம்தானே தவிர, அந்த இரண்டு சமுதாயங்கள் அல்ல.

தென் மாவட்டத்தைச் சேர்ந்த தாங்கள் சாதிக்கலவரம் குறித்தும், அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்தும் நன்றாக அறிந்திருப்பீர்கள். ஆனால், வட தமிழ்நாட்டில் கடந்த 40 ஆண்டுகளாக அத்தகைய கலவரங்கள் எதுவும் ஏற்படாமல் மக்கள் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ வகை செய்திருப்பவர் ராமதாஸ். வட தமிழகத்தில் இருந்து வந்த, வன்னிய குலத்தில் பிறந்த ராமதாஸின் சமூக நீதி சாதனைகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், உங்களுடன் நிற்கும் திரைத்துறையினருக்குத் தெரிய வாய்ப்பில்லை. பட்டியலிடுகிறேன் தெரிந்துகொள்ளுங்கள்.

1) குடிதாங்கி என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்டவரின் பிணத்தைத் தன் தோளில் சுமந்துசென்று, ஊர் மக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அடக்கம் செய்து சமூகப் புரட்சி செய்த ரியல் ஹீரோ எங்கள் ராமதாஸ்தான்.

2) எங்களுக்கு மத்திய அரசில் கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை தலித் எழில்மலை என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவருக்கு நாங்கள் கொடுத்தோம். இரண்டாவது முறையும் பொன்னுசாமி என்ற தாழ்த்தப்பட்ட சமுதாயத்தவரை மத்திய அமைச்சராக்கினோம்.

3) இந்தியாவில் தொடக்கம் முதலே மறுக்கப்பட்டு வந்த, யாருமே கொடுக்க முன்வராத All India Quota UG and PG மருத்துவப் படிப்பு மற்றும் மேற்படிப்பில் கடுமையான எதிர்ப்புகளையும் மீறி SC/ST இட ஒதுக்கீட்டை இந்திய அளவில் 2008-ல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தவன் நான். எனக்கு அதற்காக அன்றே தேசிய தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் பூட்டா சிங் தலைமையில் 32 ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களின் தலைவர்கள் சேர்ந்து சென்னையில் பாராட்டு விழா நடத்தி, பாராட்டுப் பத்திரமும், விருதும், பட்டமும் வழங்கி கவுரவப்படுத்தினார்கள்.

4) இந்தியாவின் தலைசிறந்த மருத்துவ நிறுவனமான டெல்லி எய்ம்ஸில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு, முன்னேறிய வகுப்பினரால் நடத்தப்பட்ட மோசமான அடக்குமுறைகளை தோரட் கமிட்டி (Thorat Committee) அமைத்து முடிவுகட்டி, சுமுகமாகத் தீர்வு கண்டவன் நான்.

5) தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அயோத்திதாசரின் பெயரை தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்திற்குச் சூட்டி, அவரின் திருவுருவச் சிலையும் அங்கே நிறுவியுள்ளேன்.

6) எங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி அன்றிலிருந்து இன்று வரை பட்டியலினத் தலைவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

7) அரியலூர் மாவட்டம், பாப்பாகுடி கிராமத்தில் இருளர் சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாமல் இருந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன் ராமதாஸின் தலைமையில் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஜெ.குருவின் தொடர் முயற்சிக்குப் பின்னர் 62 இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வாங்கிக் கொடுத்த நன்றிக்கடனுக்காக அந்த இடத்திற்கு டாக்டர் அய்யா நகர் என்று அன்புள்ளம் கொண்ட இருளர் சமுதாய மக்கள் நன்றி மறவாமல் பெயர் வைத்துள்ளனர். சந்தேகம் இருந்தால் நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்துகொள்ளவும்.

8) சிபிஎஸ்இ பாடத்திட்ட நூலில் நாடார் சமுதாயம் இழிவுபடுத்தப் பட்டபோது அதற்காக முதன்முதலில் குரல் கொடுத்ததும் மத்திய அரசிடமும், உயர் நீதிமன்றத்திடமும் வாதாடி, சம்பந்தப்பட்ட பகுதிகளை நீக்கியது எங்கள் கட்சிதான்.

9) கோவை தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோட்டைமேடு பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் இஸ்லாமிய சகோதரிகள் இழிவுக்கும், இன்னலுக்கு ஆளானபோது, அதற்கு எதிராக சம்பவ இடத்தில் போராடி அவர்களின் துயரைப் போக்கியவர் ராமதாஸ்தான்.

10) தாமிரபரணி ஆற்றில் தேவேந்திர குல சமுதாய மக்களின் மீது காவல்துறையால் நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின்போது, முதன்முதலில் ஓடோடி அவர்களுக்காக்ச்க் குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்தியவர் ராமதாஸ்தான்.

சமூகநீதிக்காகவும், மக்களின் பிரச்சினைகளுக்காகவும் ராமதாஸ் இன்னும் ஏராளமான போராட்டங்களை நடத்தி, நீதியும், தீர்வும் பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அவை தமிழகத்தின் சமூகநீதி வரலாற்றில் வலிமையாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவைபோன்ற எத்தனையோ சமூகப் புரட்சிகளை நிஜவாழ்க்கையில் ராமதாஸும், எங்கள் இயக்கமும் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. இத்தனை செய்தும், அதைப்பற்றிய புரிதல் சற்றும் இல்லாமல், நீங்களும், தாங்கள் சார்ந்த திரைத்துறையினரும் எங்கள் மனதை மிகவும் புண்படுத்தி விட்டீர்கள்.

கொலை செய்யப்பட்டவரும் வன்னியர் அல்ல, கொலை செய்தவரும் வன்னியர் அல்ல, கொலை செய்யப்பட்டவருக்காக வழக்காடியவரும் வன்னியர் அல்ல, உதவி செய்தவர்கள் மட்டுமே வன்னியர்கள் என்று உண்மை நிலவரம் இருக்கும்போது, எதற்கு வன்னியரின் சின்னமான அக்னிக் குண்டத்தை கொலையாளியின் வீட்டில் நட்ட நடுவில் மாட்டி வைத்தீர்கள்? என்ற நியாயமான கேள்வி கூடவா உங்கள் மனங்களில் எழவில்லை.
வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை காயப்படுத்தி விட்டீர்கள் என்ற உண்மையை ஒத்துக்கொள்ள மனம் இல்லை என்பதைத்தான் திரைத் துறையினரின் கடிதங்களும், ஊடகங்களின் விவாதங்களும் காட்டுகின்றன.

இது வெறும் காலண்டர்தானே, என்று நீங்கள் சாதாரணமாக நினைக்கலாம். சுட்டிக்காட்டிய உடன் அந்த காட்சி நீக்கப்பட்டு விட்டது என்று சப்பைக்கட்டு கட்டலாம். ஆனால் ஏன் அந்த அக்னிக் குண்டத்தை அங்கு வைத்தீர்கள்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் வரவில்லை. கோடிக்கணக்கான வன்னியப் பெருங்குடி மக்களின் மனதை ஆழமாகப் புண்படுத்தி விட்டீர்கள் என்று ஏன் உங்களாலும் எங்களை விமர்சனம் செய்கின்ற அவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை?

ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அதனால் அவர்களின் மனங்கள் காயப்பட்டிருக்கின்றன. இதைச் சுட்டிக்காட்டி நான் கடிதம் எழுதியபோது, உண்மையை ஒப்புக்கொண்டு வன்னிய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காகப் படக்குழுவினர் வருத்தம் தெரிவித்திருந்தால், இந்த விவகாரம் அன்றே முடிவுக்கு வந்திருக்கும்.

உங்களுக்கு வீடு கட்டித்தரும் தொழிலாளியாகவும் நீங்கள் பயணிக்கின்ற சாலைகளைப் போடும் பாட்டாளிகளாகவும், உங்களுக்காக சேற்றில் இறங்கிக் கடுமையாக உழைத்து உங்களுக்கு சோறு போடும் விவசாயிகளான வன்னிய மக்களைக் கொலையாளிகளாக சித்தரித்து இருக்கிறீர்கள் அல்லவா? அதனால்தான் எங்கள் மனம் வலிக்கிறது.

இதற்குப் பிறகும் நாங்கள் மவுனமாக இருந்தால் இந்தக் குற்றச்சாட்டை ஒத்துக்கொள்வதாக ஆகிவிடாதா? திருடியதாக ஒத்துக்கொண்டால் காலத்துக்கும் அந்தத் திருட்டுப் பட்டம் தங்கிவிடும் என்று ஜெய்பீம் திரைப்படத்தில் வசனம் வருகிறது. அது அவர்களுக்கு மட்டும்தானா? கொலையாளிகள் வன்முறையாளர்கள் என்ற அவப்பெயர் வன்னியப் பெருங்குடி சமுதாயத்திற்கு காலத்திற்கும் தங்கி விடாதா?

இவை எனது கேள்விகள் மட்டுமல்ல...

கோடிக்கணக்கான வன்னிய மக்களின் மனங்களில் தீயாய் எரிந்து கொண்டிருப்பவைதான் இந்த வினாக்கள். வன்னியர்களின் மனக்காயங்களுக்கு மருந்து போடாமல் அவர்களின் மனத் தீயை அணைக்க முடியாது என்பதை மட்டும் தாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு எங்கள் கைகளில் இல்லை. இவற்றைத் தெரிவிப்பதற்காகவே இந்தக் கடிதம்’’.

இவ்வாறு அன்புமணி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்