வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றி: முத்தரசன்

By செய்திப்பிரிவு

நாட்டின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கை:

”விவசாயிகள் போராட்டம் மாபெரும் வெற்றி. மாபெரும் வெற்றி விவசாயிகளுக்கும், ஜனநாய சக்திகளுக்கும் வாழ்த்துகள். நாட்டின் வரலாற்றில் தனி முத்திரை பதித்த விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

கடந்த 2020, செப்டம்பர் மாதத்தில் பாஜக அரசு நிறைவேற்றிய மூன்று விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிகச் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஒராண்டுக்கும் மேலாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவும், ஐக்கிய விவசாயிகள் முன்னணியும் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தன.

இதன் தொடர்ச்சியாக 2020 நவம்பர் 26 “டெல்லி சலோ” (டெல்லி செல்வோம்) இயக்கம் அறிவிக்கப்பட்டது. இந்த நாளில் தலைநகர் டெல்லி நோக்கி சென்ற ஆயிரமாயிரம் விவசாயிகளை மத்திய பாஜக அரசும், ஹரியாணா, உத்தரப் பிரதேச மாநில அரசுகளும் விவசாயிகளை டெல்லி நகருக்குள் நுழையவிடாமல் திக்ரி, சிங்கு, காஸியாபாத் என நகரின் எல்லைகளில் வழிமறித்து, அடக்குமுறை தர்பார் நடத்தின. குளிர்காலத்தில் வந்த விவசாயிகள் மீது குளிர்ந்த தண்ணீரை பீய்ச்சி அடித்தது, கண்ணீர் புகை குண்டுகளை வீசியது. தடியடி நடத்தியது, நெடுஞ்சாலைகளில் அகழிகள் வெட்டியது. கூர்மையான ஆணிகளைச் சாலையில் நட்டது.

தடுப்புச் சுவர் அமைத்தது. பொய் வழக்குப் போட்டது. விவசாயிகளுக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிட்டு மோதலை ஏற்படுத்தும் சதி வேலைகளில் ஈடுபட்டது. நக்சல்கள், மாவோயிஸ்டுகள், கம்யூனிஸ்டுகள் என நாட்டின் எதிரிகள் ஊடுருவிவிட்டன என அவதூறு பரப்பியது. குடியரசு தினத்தில் (2021 ஜனவரி 26) டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியைச் சீர்குலைக்கும் சதிச் செயலில் ஈடுபட்டது.

இதன் உச்சமாக உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் மீது கார்களை ஏற்றிப் படுகொலை செய்தது எனத் தொடரும் மத்திய பாஜக, மாநில அரசுகளின் அடக்குமுறைகள், பிளவுவாதம் அனைத்தும் படுதோல்வி அடைந்துள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டங்களை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று முழங்கி வந்ததை நாடு எளிதில் மறந்து விடாது.

இந்த ஓராண்டு காலத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர்களை பலி கொடுத்து நடந்த ஜனநாயக உரிமைப் போராட்டத்தை பஞ்சாப், கேரளா, ராஜஸ்தான், டெல்லி, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில மக்கள் ஒருமனதாக ஆதரித்து வந்ததையும், சட்டப் பேரவைகளில் தீர்மானங்களும், எதிர் சட்டங்களும் நிறைவேற்றப்பட்டதையும், தமிழ்நாட்டில் நடைபெற்ற மக்கள் நாடாளுமன்ற இயக்கத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றியதையும் விவசாயிகள் இயக்கம் நன்றியோடு என்றென்றும் நினைவுகொள்ளும்.

கார்ப்பரேட் ஆதரவு வேளாண் வணிக சட்டங்களைத் திரும்பப் பெறுவது தவிர வேறு வழியில்லை என்ற நிர்பந்தத்தை உருவாக்கி, மத்திய அரசைப் பணியவைத்த ஜனநாயக சக்திகளுக்கும், உறுதி குறையாது போராடி வந்த விவசாயிகளுக்கும், விவசாயிகள் போராட்டத்தில் கலந்து செயல்பட்ட தொழிற்சங்க அமைப்புகளுக்கும், தொழிலாளர்களுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு நன்றி பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்