தொடர் மழையால் சோகம்; வேலூரில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் பலி: ரூ.5 லட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

By வ.செந்தில்குமார்

பேரணாம்பட்டில் மழையின் காரணமாக 50 ஆண்டுகள் பழமையான வீடு இடிந்து விழுந்ததில் 4 சிறுவர், சிறுமிகள் உள்ளிட்ட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகளை முடுக்கிவிட்ட மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனைப் பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழையால் பேரணாம்பட்டு நகரில் ஓடும் கொட்டாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து அருகில் உள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மசூதிகளில் தஞ்சமடைந்தனர்.

பேரணாம்பட்டு அஜிஜியா தெருவில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பலர் அக்கம்பக்கம் இருந்த மாடி வீடுகளில் தங்கினர். இதில், அனிஷா பேகம் (63) என்பவரது வீட்டில் மழையால் பாதிக்கப்பட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் குடும்பத்துடன் தங்கினர். அந்த வீட்டில் சுமார் 18 பேர் தங்கினர்.

சுமார் 50 ஆண்டுகள் பழமையான அந்த வீடு இன்று (வெள்ளிக்கிழமை) காலை திடீரென இடிந்து விழுந்தது. தரைமட்டமான வீட்டில் 18 பேர் சிக்கிய தகவலை அடுத்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி முடுக்கிவிடப்பட்டது. இடிபாடுகளில் இருந்து முகமது கவுசிப், முகமது தவுசிக், சன்னு அஹ்மது, அபிப் ஆலம், இலியாஸ் அஹ்மது, ஹாஜிரா, நாசிரா, ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இவர்களில் ஹாஜிரா நிகாத், மொய்தீன் ஆகியோர் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் ஹபிரா (4), மனுலா (8), தமீத் (2), ஹப்ரா (3), மிஸ்பா பாத்திமா (22), அனிஷா பேகம் (63), ரூஹிநாஸ் (27), கவுசர் (45), தன்ஷிலா (27) ஆகியோர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்களின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேரணாம்பட்டு நகருக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினார். பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்த ஆட்சியர், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் ஆட்சியரை முற்றுகையிட்டு, ‘‘கொட்டாறு தூர் வாராததால் வெள்ள நீர் வீடுகளில் புகுந்து வெளியேறாமல் இருக்கிறது. ஆற்றைத் தூர்வார வேண்டும் என்று பலமுறை மனு அளிக்கும் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்கவில்லை. மழைக்கால நிவாரண முகாம்கள் கூட ஏற்படுத்தவில்லை. தரைக்காடு பகுதியில் வி.கோட்ட சாலையும் பள்ளமாக அமைத்ததால் வெள்ள நீர் வெளியேறாமல் வீடுகளில் புகுந்துள்ளது. நகரில் உள்ள வார்டுகளை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்தனர்.

பேரணாம்பட்டில் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நாற்காலி மூலம் நின்றபடி பேசிய மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.

அவர்களை சமாதானம் செய்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மழைச் சேத பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பேரணாம்பட்டில் வீடு இடிந்து விழுந்ததில் 9 பேர் இறந்த சம்பவம் நகர மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இழப்பீடு அறிவித்த முதல்வர்

வீடு இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்