'திராவிட லெனின்' டி.எம்.நாயருக்கு சிலை நிறுவுக; வைகோ வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

பெரியாரால் திராவிட லெனின் என்று போற்றப்படும் டி.எம்.நாயருக்கு சிலை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;

"1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனும் நீதிக்கட்சி நாளையோடு 106 ஆவது ஆண்டை எட்டியுள்ளது.

அன்றைய சென்னை மாகாணத்தில் பார்ப்பனரல்லாதார் வகுப்புரிமையை நிலைநாட்ட காலத்தின் தேவையாக மலர்ந்த நீதிக்கட்சியை வழிநடத்திய முப்பெரும்தலைவர்களான டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் போன்றோரும், 1938 இல் நீதிக்கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற தந்தை பெரியார், பொதுச்செயலாளர் பொறுப்பை வகித்த பேரறிஞர் அண்ணா ஆகியோரின் அருந்தொண்டுதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு கடந்தும் அசைக்க முடியாத அடித்தளத்துடன் நிமிர்ந்து நிற்பதற்குக் காரணமாக உள்ளது.

மாண்டேகு செம்ஸ்போர்டு அரசியல் சீர்திருத்தத்தின்படி 1920 இல் சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது, அத்தேர்தலில் நீதிக்கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. 1921 இல் கடலூர் சுப்பராயலு ரெட்டியார் தலைமையில் நீதிக்கட்சியின் முதல் அமைச்சரவை அமைந்தது. பின்னர் அதே ஆண்டு ஜூலையில் பனகல் அரசர் ராமராய நிங்கார் முதலமைச்சர் (First Minister) பொறுப்பை ஏற்றார்.

பனகல் அரசர் ஆட்சிக் காலத்தில்தான் சட்டமன்றத்தில் முதன் முதலில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமையை நடைமுறைப்படுத்த 1921 ஆகஸ்ட் 16 இல் சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. நீதிக்கட்சி அரசு பிறப்பித்த வகுப்புரிமை ஆணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆதிக்கவாதிகள் வழக்குத் தொடுத்து, அதை முடக்கினர்.

அதன்பின்னர் நீதிக்கட்சியின் ஆதரவுடன் சுப்பராயன் முதல் அமைச்சர் பொறுப்பேற்றபோது, அதில் இரண்டாவது அமைச்சராக பொறுப்பேற்றிருந்த எஸ்.முத்தையா முதலியார் தனது ஆவணப் பதிவுத் துறையில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை 04.11.1928 ஆம் நாளிட்ட அரசாணை எண்.1071 மூலம் சட்டமாக்கினார். இதன் மூலம்தான் அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோரும், பட்டியல் இனத்தோரும் இடஒதுக்கீடு பெற்று சமூகநீதி நிலைநாட்டப்பட்டது என்பது வரலாறு.

கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு இன்று இந்தியாவுக்கே சமூகநீதிக் கோட்பாட்டிற்கு வெளிச்சம் பாய்ச்சியது திராவிட இயக்கம்தான் என்பதும் மறுக்க முடியாத வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகநீதி, ஒடுக்கப்பட்ட, பட்டியல் இன மக்கள் முன்னேற திட்டங்கள்; பெண்களுக்கு வாக்குரிமை; தேவதாசி முறை ஒழிப்பு; இந்து அறநிலையத்துறை உருவாக்கம்; பல்கலைக் கழகங்கள் தொடக்கம்; அனைவருக்கும் சமத்துவமான கல்வி; மாணவர் விடுதிகள்; கல்வி உதவித்தொகை; அரசுப் பணியாளர் தேர்வு வாரியம்; சிறுபான்மை மக்களுக்கும் இடஒதுக்கீடு; மருத்துவப் படிப்பிற்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்பது நீக்கம் இவ்வாறு எண்ணற்ற சாதனைகளை நீதிக்கட்சியின் அரசு படைத்தது.

இன்று இந்தியாவிலேயே முன்னேறிய மாநிலமாக அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு சிறந்தோங்கி இருப்பதற்கு நீதிக்கட்சியின் அரசு நிறைவேற்றிய திட்டங்களும், நிகழ்த்திய சாதனைகளும்தான் காரணம். அதனால்தான் பேரறிஞர் அண்ணா அவர்கள், 1967 இல் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைகிற பொழுது, எங்கள் அரசு நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சிதான் என்று பிரகடனம் செய்தார்.

நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக அமைந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நீதிக்கட்சி அமைந்த நூற்றாண்டில் ஒரு அன்பான வேண்டுகோளை முன்வைக்கின்றேன்.

வகுப்புவாரி உரிமைக்காக வாதாட இங்கிலாந்து லண்டன் வரை இரண்டுமுறை சென்று, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தில், சட்டமன்றத்தில் வகுப்புரிமையை உறதி செய்யப் போராடியவர் டாக்டர் டி.எம்.நாயர். நீரழிவு நோய் வாட்டியபோதும் கவலைப்படாமல் வகுப்புரிமைக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஆதரவு திரட்டிய டி.எம்.நாயர், 17.7.1919 அன்று லண்டனிலேயே உயிர் துறந்தார்.

திராவிட இயக்கத்தின் ஆணிவேரான நீதிக்கட்சியின் மாபெரும் தலைவர்கள் டாக்டர் சி.நடேசனார், சர் பிட்டி தியாகராயர் இருவருக்கும் தலைநகர் சென்னையில் சிலைகள் நிறுவப்பட்டு பெருமைப்படுத்தி இருக்கின்றோம்.

நீதிக்கட்சியின் மற்றொரு தலைவரான டாக்டர் டி.எம்.நாயர் என்ற தாராவாட் மாதவன் நாயர் அவர்களுக்கு சென்னையில் இதுவரையில் சிலை நிறுவப்படவில்லை. நீதிக்கட்சியின் நூறாவது ஆண்டு விழாவில் மறுமலர்ச்சி திமுக சார்பில், சென்னையில் டி.எம்.நாயர் சிலை அமைந்திட இடம் ஒதுக்கித் தருமாறு அப்போதைய முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் பலனில்லை.

தற்போது அமைந்திருக்கின்ற திராவிட இயக்க ஆட்சியில், திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பெற்ற டாக்டர் டி.எம்.நாயர் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் சென்னையில் அவருக்கு முழு உருவச் சிலையை நிறுவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்