தேர்தல் பயத்தால் மட்டுமே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்: ப.சிதம்பரம் கருத்து

By செய்திப்பிரிவு

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அச்சத்தால் மட்டுமே 3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இன்று (நவ.19) காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இது குறித்து முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:

இன்று பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, அவருக்கு விவசாயிகள் மீதுள்ள அக்கறை, மத்திய அரசு தனது அடிப்படைக் கொள்கையில் மாற்றம் செய்து கொண்டது என்றெல்லாம் காரணமல்ல.

அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் அச்சத்தால் தான் இன்று மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்கள் வாபஸ் என்ற அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

ஆனால், அது அறிவிக்கப்பட்டுள்ள நேரத்தை மக்கள் உணர்ந்து கொண்டுள்ள வேண்டும். ஏனெனில் ஒரு மாதத்துக்கு முன்னர் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் தேச விரோதிகள் என்று பாஜக விமர்சித்து வந்தது. இப்போது திடீரென இந்த முடிவை எடுக்க தேர்தலைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க இயலும். கடைசியாக நடந்த மக்களவை, மாநிலங்களை தொகுதி இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இப்போது இந்த 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் இப்படியொரு முடிவை எடுத்துள்ளனர். மக்கள் இதனை உணர்த்து பாஜகவுக்கு தொடர் தோல்விகளைத் தர வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்கள் விரோதக் கொள்கைகளை எடுப்பதை நிறுத்துவார்கள்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் புத்திசாலிகள்!

"இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் எதிர்த்துப் போராடிய விவசாயிகள் புத்திசாலிகள். அவர்கள் ஒருபோதும் எந்த ஒரு அரசியல் தலைவரும் தங்களின் போராட்ட மேடையில் அனுமதிக்கவில்லை. தங்களின் போராட்டத்திற்கு அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் மிகவும் உறுதியாக இருந்தனர். அந்த சாதுர்யத்தால் மட்டுமே இந்தப் போராட்டம் ஓராண்டை நெருங்க முடிந்தது. அவர்களின் புத்திசாலித்தனமான போராட்டத்திற்கு இன்று வெற்றி கிடைத்துள்ளது. விவசாயிகளுக்கு நான் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE