அரசுப் பணியில் விளையாட்டு வீரர்களுக்கான 3% இட ஒதுக்கீட்டில் சிலம்பம் சேர்ப்பு

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''முதல்வரது ஆணையின்படி, தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டைச் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி, சி.ஏ.பவானிதேவி (வாள் சண்டை), எ.தருண் (தடகளம்), லஷ்மண் ரோஹித் மரடாப்பா (படகோட்டுதல்), தனலட்சுமி, (தடகளம்), வி.சுபா (தடகளம்) மற்றும் டி.மாரியப்பன் ஆகியோருக்குத் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மேற்படி திட்டத்தின் கீழ் ரோலர் ஸ்கேட்டிங், ஸ்குவாஷ், கபடி உள்ளிட்ட விளையாட்டுகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுக்கு முந்தைய இந்திய தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டு 3 விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டு, அதற்கான அரசாணை (நிலை) எண்.46, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் (எஸ்1) துறை, நாள்.29.10.2021-ன் மூலம் ஆணையிட்டுள்ளது.

மேலும், முதல்வரது சீரிய முயற்சியின் கீழ், மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தில் சிலம்பம் விளையாட்டு ஏற்கெனவே சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள சிலம்ப விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பெருமளவில் பயன்பெறுவர். இதனால் தமிழினத்தின் பழங்காலத் தற்காப்புக் கலைகளில் சிறப்புமிக்க சிலம்பம் விளையாட்டிற்கு மாபெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது''.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE