கோவையில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மேலும் இருவரிடம் விசாரணை

கோவையில் தற்கொலை செய்த பள்ளி மாணவி எழுதியிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் 2 நபர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

கோவையில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால், கடந்த 11-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் மிதுன் சக்கரவா்த்தி(31) மற்றும் பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோர் போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தற்கொலை செய்யும் முன்பு மாணவி எழுதியிருந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அதில், ஆசிரியர் தவிர மேலும் இருவரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இதையடுத்து, அந்த இருவர் யாரென கண்டறிந்து அவர்களிடம் சிலமணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். அவர்களுக்கும், உயிரிழந்த மாணவிக்கும் என்ன மோதல் என்பது குறித்தும் விசாரித்தனர்.

இவ்வழக்கு தொடர்பாக, பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மற்றும் லேப்டாப்பில் உள்ளதகவல்கள் குறித்து போலீஸார் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இணைந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். மேலும், கைதான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி எப்போது மாணவியை தொடர்பு கொண்டார்? மாணவியின் செல்போன் எண்ணுக்கு யார் யாரெல்லாம் அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, பள்ளியின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன், ஜாமீன் கேட்டு கோவை போக்ஸோ நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

48 யூ டியூப் சேனல் மீது வழக்கு

இந்த விவகாரத்தில் போக்ஸோ சட்ட விதிகளை மீறி சம்பந்தப்பட்ட மாணவியின் பெயர், புகைப்படங்களைப் பயன்படுத்தி செய்திகள் வெளியிட்ட, 48 யூடியூப் ஊடகங்கள் மீதும் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். தவிர, மாணவியின்புகைப்படங்களைப் பயன்படுத்தி பேனர் வைத்த 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘‘போக்ஸோ சட்டம் 2021 பிரிவு 23(2)-ன்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெயர், முகவரி, புகைப்படம், குடும்ப விவரங்கள், பள்ளி, சுற்றுப்புறம் அல்லது குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்த வழிவகுக்கும் பிற விவரங்கள் உட்பட குழந்தையின் அடையாளத்தை எந்த ஊடகத்திலும் வெளியிடக் கூடாது.

எனவே, தங்களது சமூக வலைதளங்களில் ஏதேனும் பதிவு இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் நீக்கிக் கொள்ளவும்” என்று கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE