எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்கினால் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடும்: கே.எஸ்.அழகிரி

By செய்திப்பிரிவு

அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கே.எஸ்.அழகிரி இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கை:

"கடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திமுக ஆட்சி மக்கள் நலனில் மிகுந்த அக்கறையோடு நாள்தோறும் பணியாற்றி வருகிறது. தமிழக முதல்வர் ஒரு நாள்கூட ஓய்வு எடுக்காமல் கடுமையாக உழைத்து வருவதை எவரும் பாராட்டாமல் இருக்க முடியாது. சிறிய பிரச்சினைகள் முதல் பெரிய பிரச்சினைகள் வரை தெளிவான அணுகுமுறையோடு எதிர்கொண்டு மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். ஒரு முதல்வர் எப்படிச் செயல்பட வேண்டுமோ அதற்கு முன்னுதாரணமாகச் செயல்படுவதால் வாக்களித்த மக்களின் பாராட்டுதலை விட, வாக்களிக்காத மக்களும் முதல்வரைப் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாகத் தமிழகத்தில் பல மாவட்டங்கள் கனமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சர்கள் குழு, ஐஏஎஸ் அதிகாரிகள் குழு என்று அமைத்து பாதிப்புகளை ஆய்வு செய்து முதல்வர் அறிக்கையைப் பெற்றிருக்கிறார்.

அத்தோடு தமது பணி முடிந்துவிட்டது என்று கருதாமல், முதல்வரே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளைக் கள ஆய்வு செய்து முடுக்கிவிட்டிருக்கிறார். இதனால் மக்கள் பாதிப்பிலிருந்து மீட்கப்படுகிற சூழல் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 1955ஆம் ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது, அன்றைய முதல்வர் காமராஜர் நேரடியாக அந்தப் பகுதிகளுக்குச் சென்று வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு கடுமையாகப் பணியாற்றியதை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அண்ணா பாராட்டியதை எவரும் மறந்திட இயலாது.

அதைப் போல, இன்றைக்கு தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதைப் பாராட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் எதிர்க்கட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால், அதிமுக தலைவர்கள் நிவாரணப் பணிகளை விமர்சனம் செய்வது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். கடந்த 2015ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை கடுமையாகப் பெய்த போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரி நீரை படிப்படியாக வெளியேற்றுகிற முடிவை எடுக்காத காரணத்தால், ஒரே நேரத்தில் முதலில் 18 ஆயிரம் கன அடி நீரும், பிறகு 29 ஆயிரம் கன அடி நீரும் திடீரென முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் திறந்துவிடப்பட்டது. இதனால், ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த அப்பாவி மக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சோக நிகழ்வு நடந்தது. ஆனால், இன்றைய தமிழக அரசு அதே செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்த உபரி நீரை திட்டமிட்டுச் செயலாற்றிப் படிப்படியாகத் திறந்து விட்டதால் பாதிப்பிலிருந்து மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய முதல்வரால் அனுப்பப்பட்ட அமைச்சர்கள் குழு அறிக்கையைச் சமர்ப்பித்திருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சேதம் அடைந்ததற்காக விவசாயிகளுக்கு இழப்பீடாக ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவித்ததோடு, மறு சாகுபடி செய்திட ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு இருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது. அதேபோல் குறுகிய கால விதைகள், நுண்ணூட்ட உரம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு வழங்கி, அவர்களது துயரைத் துடைக்கிற பணியில் முதல்வர் ஈடுபட்டு இருக்கிறார். மக்கள் துன்பத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறபோது, எத்தகைய நிவாரணங்களை வழங்க வேண்டுமோ அதை அறிந்து, அதற்கேற்றாற்போல் உதவிகளை அறிவித்து வருகிற முதல்வரின் தொலைநோக்குப் பார்வை அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலமாக 37 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். கனமழை பெய்த ஒரு வார காலத்துக்கு அம்மா உணவகத்தின் மூலம் 14 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டிருக்கிறது. இவற்றை எல்லாம் பார்க்கிறபோது, கடந்த 6 மாத காலமாக தமிழக முதல்வர் மிக அற்புதமாகச் செயல்பட்டு தமிழக மக்களின் நலனைப் பாதுகாத்து வருகிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சீரிய பணிகளைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகப் பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம். அவரது பணி மேலும் சிறப்பாகத் தொடரக் கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் பீடு நடைபோடுவதற்கான வாய்ப்பு உருவாகும்”.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்