100 கோடி தடுப்பூசி பிரச்சாரத்தால் பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைக்க முடியாது: கே.எஸ்.அழகிரி காட்டம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் 100 கோடி தடுப்பூசிகள் போட்டுவிட்டதாக மேற்கொள்ளும் பிரச்சாரத்தால் பாஜக அரசின் பேரழிவுகளை மூடி மறைத்துவிட முடியாது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

’’கடந்த 20 மாதங்களுக்கு மேலாக கரோனா தொற்றுப் பரவலினால் கடுமையான பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகிறார்கள். கரோனா பரவல் எண்ணிக்கை சமீபகாலத்தில் படிப்படியாகக் குறைந்து வந்தாலும் ஏற்பட்ட மனித இழப்புகளையும், பாதிப்புகளையும் எவரும் குறைத்து மதிப்பிட முடியாது. நேற்றைய நிலவரப்படி கரோனா தொற்றினால் இந்தியாவில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 3 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 307 ஆகும். மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்து 63 ஆயிரத்து 530.

இத்தகைய கடுமையான பாதிப்புகளுக்குக் காரணம் முதல் அலையின்போது ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் பாஜக அரசு எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாததுதான். இத்தகைய இழப்புகளுக்கு மத்திய பாஜக அரசு முழுப் பொறுப்பு ஏற்காமல், கடந்த அக்டோபர் 21ஆம் தேதி நாடு முழுவதும் 100 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டதைக் கொண்டாடுகிற வகையில் பாஜக ஈடுபட்டு வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும்.

கரோனா தொற்றைத் தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டு எதிர்கொள்ளாத காரணத்தினால் ஏற்பட்ட வரலாறு காணாத பேரழிவுகளை மூடி மறைப்பதற்காக, 100 கோடி தடுப்பூசி போட்டிருப்பதைக் கொண்டாடுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகின்றது. இந்தியத் தொல்லியல் துறையின் மூலமாக நூற்றுக்கும் மேற்பட்ட நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுகிற செங்கோட்டை, குதுப்மினார் மற்றும் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டிருக்கிற கப்பல்கள் ஆகியவற்றை அலங்கார மின் விளக்குகளால் பல்வேறு வண்ணங்களில் ஜொலிக்க வைத்துள்ளனர். நாடு முழுவதும் டிஜிட்டல் பேனர்கள், விளம்பரப் பலகைகளில் பிரதமர் மோடியின் மிகப்பெரிய படத்தை இடம்பெறச் செய்து 'மோடி அவர்களே, நன்றி... நன்றி' என்று நாட்டு மக்கள் வாழ்த்துவதாக விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எல்லாவற்றுக்கும் மேலாக மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் உலகிலேயே 100 கோடி தடுப்பூசிகளைப் போட்ட முதல் நாடு இந்தியா என்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மை நிலையை ஆய்வு செய்து பார்த்தால் இந்தியா 100 கோடி தடுப்பூசி போட்ட அதேநாள் வரை, சீன நாடு 220 கோடி தடுப்பூசிகளைப் போட்டிருக்கிறது. ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போடுகிற சாதனை படைத்த சீன நாடு இதை ஒரு விழாவாகக் கொண்டாடவில்லை. அமைதியான முறையில், ஆரவாரமில்லாமல் கரோனா தொற்றை ஒழிப்பதில் சீனா வெற்றி பெற்று வருகிறது. மேலும், மொத்த மக்கள் தொகையில் 80 சதவிகித பேருக்கு சீன நாடு இருமுறை தடுப்பூசி போட்டு சாதனை படைத்திருக்கிறது. ஆனால், இந்தியாவில் இதுவரை 25 சதவிகிதம் பேருக்குத்தான் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

இந்திய மக்களில் 18 வயதிற்கு மேற்பட்ட 88 கோடி மக்களுக்கு இரண்டு டோஸ் வீதம் மொத்தம் 188 கோடி டோஸ்கள் தடுப்பூசிகள் போட வேண்டும். ஆனால், இதுவரை 107 கோடி தடுப்பூசிகள்தான் போடப்பட்டிருக்கின்றன. மேலும், 80 கோடிக்கு மேல் தடுப்பூசி போட வேண்டிய நிலை இருக்கிறது. மத்திய அரசின் இலக்கின்படி டிசம்பர் 2021-க்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டும். ஆனால், மாதம் ஒன்றுக்கு 4 கோடி பேருக்குத் தடுப்பூசி போடுகிற நிலையில், மீதியுள்ள 80 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான இலக்கை டிசம்பர் 2021-க்குள் பாஜக அடைவதற்கு வாய்ப்பே இல்லை. இந்நிலையில் 100 கோடி தடுப்பூசி போட்டதற்காக தம்பட்டம் அடித்துக் கொள்வது அதன் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.

பாஜகவின் தவறான தடுப்பூசி கொள்கை காரணமாக தொடக்கத்தில் தடுப்பூசி போடுகிற பொறுப்பு மாநில அரசுகள் மீது சுமத்தப்பட்டது. மாநில அரசுகளே தடுப்பூசிகளை நேரடியாக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று விலை நிர்ணயம் செய்தது. இதற்கு பலத்த எதிர்ப்பு எழுந்தவுடன் அந்தக் கொள்கையைக் கைவிட்டு தற்போது மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசு மூலமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு, அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கை பற்றாக்குறை, ஆம்புலன்ஸ் பற்றாக்குறை ஆகியவற்றின் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்ததற்கு யார் பொறுப்பு?. இத்தகைய பேரிழப்பு குறித்து பிரதமர் மோடி கவலைப்பட்டதுண்டா?

அதுமட்டுமல்லாமல், 100 கோடி தடுப்பூசி போட்டது இந்திய அறிவியல் துறையின் வெற்றி என்று பிரதமர் மோடி கூறுகிறார். தடுப்பூசிகள் அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார். ஆனால், கோவிஷீல்ட் தடுப்பூசியை பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் தயாரித்து ஆக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனிகா என்ற நிறுவனத்தின் மூலமாக சீரம் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுத் தயாரிக்கப்பட்டது. இந்த நிறுவனம் தயாரித்த 88 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் மூலமாகத்தான் 100 கோடி இலக்கு எட்டப்பட்டிருக்கிறது. மீதியுள்ள 12 கோடிக்குதான் கோவாக்சின் உள்ளிட்ட மற்ற நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன. கோவிஷீல்ட் என்பது பிரிட்டிஷ் விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டதே தவிர, இந்தியாவில் தயாரிக்கப்பட்டதல்ல.

கடந்த காலங்களில் இந்தியாவின் வரலாற்றைப் பார்க்கிறபோது நேரு பிரதமராக இருந்த காலத்தில் அனைத்துத் தடுப்பூசிகளையும் பொதுத்துறை நிறுவனமே தயாரித்து டைஃபாய்ட், நிமோனியா, மூளைக் காய்ச்சல், பெரிய அம்மை, பிளேக் நோய் ஆகியவை கட்டுப்படுத்தப்பட்டன. கரோனா என்ற கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடும்போது, நேருவின் கடந்த கால நோய்களுக்கு எதிரான போராட்டத்தை நினைவுகொள்வது அவசியமாகும். பிளேக், காலரா நோய்களை அறிவியல் பூர்வமாக முறியடித்த பெருமை இந்தியாவிற்கு உண்டு. 1952ஆம் ஆண்டிலேயே பூனாவில் நிறுவப்பட்ட நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் வைராலஜி நிறுவனம், கரோனா காலத்தில் பயன்பட்டு வருவதை எவராலும் மறுக்க முடியாது.

எனவே, கரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை, உரிய காலத்தில் எடுக்காமல் ஏற்பட்ட பேரழிவை மூடி மறைக்கவே 100 கோடி தடுப்பூசிகள் போட்டதைக் கொண்டாட்டங்கள் மற்றும் விளம்பரங்கள் மூலம் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்து வருகிறார். இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக பாஜக அரசின் இமாலயத் தவறுகளை மூடி மறைத்துவிட முடியாது’’.

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்