பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? - நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி

பெரியாறு அணை விவகாரத்தில் தனது நிலையை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

பெரியாறு அணை குறித்து வதந்தி பரப்பும் கேரள அரசைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்து அக்கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:

பெரியாறு அணையில் கேரள நீர்வளத் துறை அமைச்சர் உள் ளிட்டோர் தண்ணீரைத் திறந்தனர். ஆனால், தமிழக அரசுதான் தண்ணீரைத் திறந்துவிட்டது என அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். பிறகு ஏன் தேனி ஆட்சியர், அமைச்சர்கள் யாரும் அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை?

பெரியாறு அணை விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து தமிழக அரசு தெளிவாக விளக்க வேண்டும். பெரியாறு அணைக்காகப் போராடும் பாஜக வினர் நேரடியாகப் பிரதமரிடம் முறையிட்டால் விரைவில் தீர்வு கிடைத்துவிடும். கம்யூனிஸ்ட்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர். பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கின்றனர்.

தமிழக அரசு தனது உரிமையை விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இந்நிலை நீடித்தால் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்களைத் தடுப்போம் என்று பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE