சென்னை மழைநீரால் பாதிக்கப்படாத வண்ணம் வடிகால் அமைக்க குழு: முதல்வர் ஸ்டாலின் தகவல்

By செய்திப்பிரிவு

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்யும் வழியில் மன்னார்குடியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

சென்னை மழைநீரால் பாதிக்கப்படாத வண்ணம்; புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வுகள் செய்து ஆலோசனை வழங்கும். இவர்கள் தரும் ஆலோசனைப்படி, பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடும் என முதல்வர் தெரிவித்தார்.

கடந்த ஒருவார காலமாக பெய்துகொண்டிருக்கக்கூடிய கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கையில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் குறித்து உங்களுக்கு நான் விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை, உங்களுக்கே தெரியும். மழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் - அதனைத் தொடர்ந்து ஏற்படும் சேதங்களைத் தடுப்பதற்கும், அதைத் தொடர்ந்து மக்களுக்குப் பல்வேறு ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்வதற்கும் தமிழ்நாடு அரசு எடுத்துக்கொண்டிருக்கக்கூடிய நடவடிக்கைகளை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.

கடந்த ஒரு வார காலமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் என்கிற முறையில் நானும் மக்களோடு இருந்து பணியாற்றி வந்தேன். நான் மட்டுமல்ல; அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள், களப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் துரிதமாகச் செயல்பட்டதன் காரணமாக பெரிய சேதங்கள் அதிகம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது என்பது உண்மை.

இன்றைக்கு காலை முதல் கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களை நான் சென்று பார்வையிட்டேன். தஞ்சாவூர் செல்லப் போகிறேன். விவசாயிகளுடைய கருத்துக்களை அவர்களின் உணர்வுகளை, அவர்களுடைய கோரிக்கைகளை எல்லாம் நேரடியாக நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ஏற்கனவே என்னுடைய உத்தரவின் பேரில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு, அவர்களும் ஆரம்பகட்ட ஆய்வு நடத்தி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா பகுதியில் இருக்கக்கூடிய விவசாய பெருங்குடி மக்களைச் நேரடியாகச் சென்று பார்த்து அரசுக்கு ஆய்வறிக்கையை தாருங்கள் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். அவர்களும் அந்தப் பயணத்தை மேற்கொண்டிக்கிறார்கள். என்னென்ன பிரச்சினைகள் என்பதை இன்று காலை என்னைச் சந்தித்து சொல்லியிருக்கிறார்கள்.

நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை, 17 இலட்சத்து 46 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய கணக்கெடுப்பின்படி பார்த்தால், 68 ஆயிரத்து 652 ஹெக்டேர் பரப்பளவு நீரில் முழ்கியுள்ளது என்று தெரியவந்துள்ளது. தேங்கியுள்ள நீரை வடிய வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நீர்வளத்துறை மற்றும் ஊரக உள்ளாட்சித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். இயன்ற அளவு பயிர்களைக் காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவ்வாறு பயிர்களைக் காப்பற்ற முடியாத நிலங்களில் உழவர்கள் மறுநடவு செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

மேலும், கிராம வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கிறது, அதனையும் விரைந்து முடிக்கவேண்டுமென்று கூறியிருக்கிறேன். அந்த அடிப்படையில் பெருமழையினால் முழுமையாக பயிர் சேதம் அடைந்த உழவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உங்கள் மூலமாக நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஆட்சிக்கு வந்தவுடன் இந்த அரசு, குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்து 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4000 கிலோ மீட்டர் தூர்வாரப்பட்ட காரணத்தால், காவிரி தண்ணீர் கடைமடை வரை சென்றடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்ல, தற்போதைய பெருமழையினால் தேங்கியுள்ள நீர் வடிவதற்கும் பேருதவியாக உள்ளது என்பதை இப்பகுதி மக்கள் குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் நன்கு அறிவார்கள்.

மேலும், வேளாண்மையை ஊக்கப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை, இந்த அரசு மேற்கொண்ட காரணத்தால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 4.9 லட்சம் ஹெக்டேர் பயிர் சாகுபடி நடைபெற்று, நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது.

எந்த நிலையிலும், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் உழவர்களைக் கண்போல் காப்பாற்றும் அரசாக தி.மு.க. அரசு விளங்கும் என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை, உங்களுக்கே நன்றாகத் தெரியும்.

நடப்பு வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், இந்த மாதம் 6, 7, 10, 11 ஆகிய 4 நாட்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. இதனை எதிர்நோக்கும் வகையில், கடந்த 4 மாத காலங்களில் ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நம்முடைய அரசு எடுத்திருக்கிறது.

இதன்படி சென்னையைப் பொறுத்தவரை, 720 கிலோ மீட்டர் தூரத்துக்கு மழைநீர் வடிகால்கள் தூர்வாரப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை எல்லாம் நானே கடந்த மாதம் 25, 28 ஆகிய நாட்களில் நேரில் சென்று பார்த்தேன்.

மேலும், அடையாறு, கூவம் ஆறு, கேப்டன் காட்டன் கால்வாய், ஓட்டேரி நல்லா கால்வாய், பக்கிங்காம் எம்.ஜி.ஆர். கால்வாய், வேளச்சேரி ஏரி ஆகியவற்றில் இருக்கக்கூடிய ஆகாயத் தாமரைகள், வண்டல்கள், அதையெல்லாம் அகற்றித் தூர்வாரப்பட்டிருக்கிறது.

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரி ஆகியவற்றின் நீர் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. தேவையான நேரங்களில் உபரிநீர் முறையாக வெளியேற்றப்பட்டிருக்கிறது. 2015-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்ட காரணத்தினால் சென்னை எந்த அளவிற்கு சேதம் அடைந்தது என்பது உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரியும், இன்றுவரை சென்னை மக்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள். அத்தகைய அவலம் மீண்டும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை துல்லியமாக கவனித்து, சரியான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு எடுத்தது.

இத்தகைய துரிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீவிரமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாகத்தான் மிகப்பெரும் மழையில் இருந்து சென்னை மக்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் முடிந்தது. இதற்குக் காரணமான சென்னை மாநகராட்சியின் அதிகாரிகள், அலுவலர்கள், முன்களப்பணியாளர்கள், அரசு அதிகாரிகள், அலுவலர்கள், காவல்துறையைச் சார்ந்த நண்பர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

அன்றைய அ.தி.மு.க. அரசு செம்பரம்பாக்கம் ஏரியை, மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் வழங்காமல் திறந்து விட்ட காரணத்தினால், சென்னையே மிதந்தது.

174 பேர் அப்போது இறந்துபோனார்கள். சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம், ஒரு அவலம் அப்போது ஏற்பட்டது. இப்போது தி.மு.க. ஆட்சியின் நிர்வாக எந்திரம் போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு வருவதையும், அ.தி.மு.க. ஆட்சி செயல்பட்ட விதத்தையும் நிச்சயமாக மக்கள் மறந்திருக்கமாட்டார்கள்.

மழை, அதிக நீர்வரத்து, அதனால் ஏற்பட்ட சேதங்கள், அதைத் தடுக்க துரிதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை தற்காலிகமானவை என யாரும் நினைத்துவிடக் கூடாது. அப்படி நாங்கள் நிச்சயமாக ஒருக்காலும் இருக்க மாட்டோம். ஒரு நிரந்தரத் தீர்வை உருவாக்குவதற்கான முயற்சியில் நாங்கள் ஈடுபடப் போகிறோம், தமிழ்நாடு அரசு ஈடுபட்டுள்ளது என்பதை உங்கள் மூலமாக மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இந்தப் பேரிடர் காலத்தில், ஒரு சிலர் அரசியல் இலாபத்துக்காகப் பல்வேறு விமர்சனங்களை செய்துகொண்டிருக்கிறார்கள். நான் அதற்கெல்லாம் பதில் சொல்லி, இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. நம்முடைய பணி மக்கள் பணி. நான் ஆட்சிக்கு வந்தபோதே முதன்முதலில் செய்தியாளர்களிடத்தில் சொன்னது, திமுக-விற்கு ஓட்டு போட்ட மக்களுக்காக மட்டுமல்ல, திமுக-விற்கு ஓட்டு போடாத மக்களும் பாராட்டக்கூடிய அளவிற்கு நிச்சயமாக எங்களுடைய ஆட்சி செயல்படும் என்று நான் உறுதியாக சொன்னேன்.

அந்த அடிப்படையில், மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம்.

இருந்தாலும், தற்போது பருவமழை காரணமாக பாதிப்புக்குள்ளாகும் சென்னையில் மழைநீர் வடிகால்கள் முந்தைய ஆட்சி காலத்தில் சரியான திட்டமிடுதல் இன்றி மேற்கொள்ளப்பட்ட காரணத்தால், பல இடங்களில் நீர் தேங்கி நிற்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும். இதனைச் சரிசெய்யும் நோக்குடன், தமிழக அரசின் சார்பில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை பெருநகர வெள்ள மேலாண்மைக் குழு ஒன்றை நியமித்திருக்கிறோம்.

அதன் அடிப்படையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் இணைச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி திருப்புகழ் ஐ.ஏ.எஸ். தலைமையில் இந்த மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் நம்பி அப்பாதுரை, பேராசிரியர் ஜானகிராமன், பேராசிரியர் கபில் குப்தா, டாக்டர் பிரதிப் மோசஸ், மற்றும் அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இக்குழு விரைவில் கூடி, சென்னை பெருநகர மாநகராட்சி மழைநீரால் பாதிக்கப்படாத வண்ணம்; புவியியல் அமைப்புக்கு ஏற்றவாறு வடிகால் அமைப்பது குறித்து ஆய்வுகள் செய்து ஆலோசனை வழங்கும். இவர்கள் தரும் ஆலோசனைப்படி, பருவமழைக் காலங்களில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இந்த அரசு ஈடுபடும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இதேபோல், டெல்டா மாவட்டங்களுக்கும் தனி கவனம் செலுத்தி, வெள்ளப் பாதிப்பிலிருந்து அந்த மாவட்டங்களை மீட்பதற்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்பதை உங்களின் மூலமாக நான் நாட்டு மக்களுக்கும், உங்களுக்கும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பாசன வாய்க்கால் பகுதி கடந்த ஆட்சியில் தூர்வாரப்படாதது முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது, அதே மாதிரி ஏரி, குளங்கள் தூர் வார விடப்பட்ட ஒப்பந்தங்களில் கடந்த ஆட்சியில் பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா?

இதை அரசியல் ஆக்க விரும்பவில்லை என்று முதலிலே சொன்னேன். மேட்டூர் அணையை திறப்பதற்கு முன்பாக டெல்டா பகுதிகளில் முழுமையாக தூர்வார வேண்டும் என்று சொல்லி, உத்தரவிட்டு, அந்தப் பணி நடந்திருக்கிறது என்பது உங்களுக்கு எல்லாம் நன்றாக தெரியும். மற்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஆறுகள், ஏரிகள், குளங்களை கூட தூர்வாரக் கூடிய முயற்சிகளில் இந்த அரசு ஈடுபடும்.

நீங்கள் கேட்டப்படி, பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அதிமுக ஆட்சியில் தூர்வாரினோம் என்று கணக்கு காட்டினார்களே தவிர, அதன்மூலம் கமிஷன் அடித்தார்களே தவிர, முறையாக இந்தப் பணிகளை செய்யவில்லை என்பது உறுதி. இருந்தாலும் அதற்கென்று ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டு நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் மழையால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது....

இது குறித்து காலையிலிருந்து செய்தி வந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் இருந்து பணி செய்து கொண்டிருக்கிறார். மேலும் அமைச்சர்கள் .கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், பெரியகருப்பன் ஆகிய இரண்டு அமைச்சர்களையும் உடனடியாக அங்கே சென்று மேலும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அனுப்பி வைத்திருக்கிறோம்.

டெல்டா பகுதிகளை பொறுத்தவரை 2500 கால்வாய்கள் இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் மாநில அரசு நிதி ஒதுக்கீடு குறைவாக இருந்தது, மூன்று மாத காலத்திற்குள் 60 சதவிகித கால்வாய்களை சீர் செய்திருந்தால் இந்தப் பிரச்சனை வந்திருக்காது என்று சொல்கிறார்கள்.....

ஏற்கனவே பணிகளை செய்ததால் தான் பாதிப்பு குறைவாக உள்ளது. இல்லையென்றால் பெரிய சேதம் ஏற்பட்டு இருக்கும். திமுக அரசு வந்தபிறகு டெல்டா பகுதிகளில் தூர் எடுத்த காரணத்தினால் தான் இந்த அளவுக்கு காப்பாற்றப்பட்டு இருக்கிறது. அதுதான் உண்மை. அதுபோல் எல்லா பகுதிகளிலும் தேவைப்படுகிறது. நிச்சயமாக அந்தப் பணிகளை செய்வோம்.

பயிர்காப்பீடு செய்து அறுவடை முடிந்த மூன்று மாதத்திற்குள் அந்த பயிர்காப்பீட்டு பயன் கிடைக்க வேண்டும் என்று விதியில் இருக்கிறது. ஆனால் வருடந்தோறும் 8 மாதங்கள் கழித்து தான் விவசாயிகளுக்கு அந்தப் பணமே கிடைக்கிறது. இது விவசாயிகளுக்கு எந்தவிதமான பயனும் இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படுமா?

மத்திய அரசிடம் இது குறித்து கோரிக்கை வைத்திருக்கிறோம். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட பிரதமர் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு பேசியபோது கூட இந்த விவரத்தை நான் சொல்லியிருக்கிறேன். ஏற்கனவே வழங்கப்பட வேண்டிய நிதி இருக்கிறது. இதற்கும் சேர்ந்து உடனடியாக எங்களுக்கு நிதி வழங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன், நிச்சயமாக வழங்குவதாக பிரதமரும் சொல்லியிருக்கிறார். அதற்காகத் தான் அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த கணக்குகளை பார்த்து அறிக்கை அளிக்க சொல்லியிருக்கிறோம்.

அறிக்கை கொடுத்ததற்கு பிறகு முறையாக அது எல்லாம் பரிசீலிக்கப்பட்டு நிச்சயமாக கொடுக்கப்படும். அதுமட்டுமல்ல, காப்பீடு பீரிமியம் தொகை கட்டுவதற்கு இடையில் விடுமுறை நாட்கள் வந்துவிடுகிறது. அந்த சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லாமல்

அலுவலகத்தை திறந்து வைக்க உத்தரவிட்டு இருக்கிறோம். அதனால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

நெல்லின் ஈரப்பதம் 17 சதவிகிதம் தான் சொல்லி இருக்கிறார்கள். 25 சதவிகிதம் விவசாயிகள் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு தான் ஒரு குழுவை அமைத்து மாற்ற வேண்டும். ஆனால் இதுவரைக்கும் முடிவு எதுவும் எடுக்கவில்லை. குறுவை சாகுபடி காலத்திலும் மழை பெய்து கொண்டே இருந்தது நெல் ஈரப்பதத்தோடு இருந்ததால் விவசாயிகள் நெல்லை காயவைக்க சிரமப்பட்டார்கள். இப்போதும் சாகுபடி செய்திருக்கிறார்கள். வரும் சம்பா சாகுபடி காலத்திலாவது நமக்கு நல்ல தீர்வு கிடைக்குமா?

பார்ப்போம். நல்ல தீர்வு கிடைக்க வேண்டும் என்று தான் எல்லோரும் முயற்சி செய்கிறோம். உங்களுடைய நல்ல எண்ணத்திற்கு நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் கான்கீரீட் போடும் போது, நிலத்தடி நீர்மட்டம் உயராமல் இருக்கிறது, நடுவில் பைப் மட்டும் போட்டுக் கொண்டு செல்கிறார்கள். அந்த பைப்பையும் சமூக விரோதிகள் சேதப்படுத்திவிடுகிறார்கள். நடுபக்கம் மட்டும் மணற்பரப்பாக விட்டுவிட்டு இரண்டு பக்கமும் கான்கிரீட் போடலாம்....

ஏற்கெனவே இந்தச் செய்தி குறித்து விவாதித்து இருக்கிறோம். அது தொடர்பான அமைச்சரிடத்திலும் பேசியிருக்கிறோம். நீங்கள் சொன்ன யோசனை நல்ல கருத்தாக உள்ளது. நிச்சயமாக அதை கவனிப்போம்.

உண்மையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்றுவதற்கு நிவாரணம் வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறீர்கள், தற்போது இடைக்கால நிவாரணம் வழங்கப்படுமா?

அதற்கு தான் குழு அமைந்திருக்கிறோம். அந்தக் குழு விசாரித்து அறிக்கை அளித்தவுடன், அந்த அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசின் மூலமாக பெறப்படும் நிதியையும் பெற்று அதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மத்திய குழு வருமா?

நிச்சயமாக பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட மத்திய குழு வரும்.

இலவச மின்சாரம் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு இன்னும் எண்ணிக்கை அதிகரித்து வழங்கப்படுமா?

செய்து கொண்டு தான் இருக்கிறோம். கட்டாயம் கொடுப்போம்.

பயிர்காப்பீட்டு தொகை கட்டுவதற்கு காலநீட்டிப்பு தொடர்பாக மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் வந்திருக்கிறதா?

இதுவரை வரவில்லை.

முல்லை பெரியாறு பிரச்சனை பொறுத்தவரையில் நம்முடைய அரசாங்கம் 142 அடி தேக்கி வைக்க தவறி விட்டது என்று அதிமுக தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்களே?

அரசியல் ரீதியாக வேண்டுமென்றே உண்மைகளை மறைத்து பொய்யான செய்திகளை பரப்புவதற்காக செய்து கொண்டு இருக்கிறார்களே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதற்கு ஏற்கனவே நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதன் அடிப்படையில் தான் நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்