முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பேபி அணை மற்றும் சிற்றணை ஆகியவை பழுதுபார்க்கப்பட்டு, பலப்படுத்தப்பட்டபின் அணையின் நீர்மட்டத்தை 152 அடி வரை உயர்த்திக் கொள்ளவும், பழுது பார்க்கும் பணிகளை மேற்கொள்வதற்கு கேரள அரசு எந்தவித இடையூறும் அளிக்கக்கூடாது எனவும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், பேபி அணையைப் பலப்படுத்தும் வகையில், அதற்குக் கீழுள்ள 23 மரங்களை வெட்டுவது தொடர்பான கருத்துரு எண். FPIKKLIRRIG/12012/2015-ல் கம்பம் நீர் ஆதாரத் துறையின் செயற்பொறியாளரால் கேரள வனத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனைப் பரிசீலித்த பெரியாறு புலிகள் காப்பக கிழக்குக் கோட்ட துணை இயக்குநர், தமிழ்நாட்டிற்குக் குத்தகைக்கு விடப்பட்ட முல்லைப் பெரியாறு பகுதியில் உள்ள 15 மரங்களை வெட்டப் பரிந்துரை செய்து கேரள அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளருக்கு 30-10-2021 நாளிட்ட கடிதத்தின் மூலம் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதன் அடிப்படையில், கேரள அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளர் அங்குள்ள 15 மரங்களை வெட்டிக் கொள்ள அனுமதி அளித்து அதற்கான 05-11-2021 நாளிட்ட ஆணையைக் கம்பத்தில் உள்ள நீர் ஆதாரத் துறை செயற்பொறியாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆணையுடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் எந்தெந்த மரங்கள் வெட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழக முதல்வரும் கேரள அரசிற்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். இந்தச் செய்தி அனைத்துப் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் செய்தியாக வந்தது. இதற்கு மறுநாளே, கேரள மாநில வனத் துறை அமைச்சர், மரங்களை வெட்ட அனுமதி கொடுத்தது தனக்குத் தெரியாது என்றும், இதுகுறித்த முடிவு அதிகாரிகள் மட்டத்தில் எடுக்க முடியாது என்றும், இது கொள்கை சம்பந்தப்பட்ட முடிவு என்றும், இதுகுறித்து கேரள முதல்வருக்கோ, நீர்ப் பாசனத்துறை அமைச்சருக்கோ, வனத்துறை அமைச்சருக்கோ எதுவும் தெரியாது என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தச் செய்தியும் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து மரங்களை வெட்டுவதற்கான ஆணை ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் பத்திரிகையில் செய்தி வெளிவந்துள்ளது. கேரள முதல்வருக்குத் தெரியாமல் அதிகாரிகள் மட்டத்தில் இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டு இருக்கும் என்பது நம்பும்படியாக இல்லை. மேலும், புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பதில் கேரளா உறுதியாக உள்ளதாகவும், இதுகுறித்து அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் முதலமைச்சர்களுக்கு இடையேயான கூட்டத்தில் பேச இருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில், மரங்களை வெட்ட அனுமதி அளித்ததற்காக, இந்திய வனப் பணி அதிகாரியான முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை வனவிலங்கு காப்பாளரைத் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்திய அதிகாரியைப் பணியிடை நீக்கம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்பதோடு மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பாகும். மரங்களை வெட்ட அனுமதி - அளித்த ஆணை வெளிவந்த மறு வினாடியே கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்த தமிழக முதல்வர், அதற்குப் பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து மவுனமாக இருப்பது வியப்பாக இருக்கிறது.
நீர்வளத்துறை அமைச்சரோ, 'இது அம்மாநில அரசு அலுவலர்களும் அமைச்சரும் சம்பந்தப்பட்ட விஷயம், அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை ' என்று மழுப்பலான பதிலைக் கூறி நழுவிவிட்டார். திமுக கூட்டணிக் கட்சிகளும் இதுகுறித்துப் பேசத் தயங்குகின்றன. தமிழ்நாட்டின் உயிர் நாடி பிரச்சினையான முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மவுனமாக இருப்பது தமிழக மக்களுக்கு, தமிழ்நாட்டிற்கு செய்கின்ற துரோகம் ஆகாதா? என்னதான் கூட்டணி தர்மம் என்றாலும், தமிழ்நாட்டின் உரிமை பறிபோகின்ற விஷயத்தில் மவுனம் சாதிப்பது சரிதானா! என்பதை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
கேரளாவிற்கு ஆதரவான மனநிலையில் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் இருப்பதாகப் பொதுமக்களும், விவசாயப் பெருங்குடி மக்களும் நினைக்கும் சூழ்நிலை தமிழ்நாட்டில் உருவாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கின்ற கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின் உரிமை என்று வரும்போது, அதை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக, இருக்கின்ற அனைவருக்கும் உண்டு.
இந்த விஷயத்தில் மவுனம் சாதிப்பது என்பது தமிழ்நாட்டின் உரிமையை கேரளாவிற்கு அடகு வைத்ததற்குச் சமம். முல்லைப் பெரியாறு பிரச்சினையில் நாம் அனைவரும், ஒன்றுசேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதோடு, இதுகுறித்து அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, விவாதித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒருமித்த முடிவினை எடுக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் வருவதாகக் கூறப்படுகிறது. அப்போது, இதுகுறித்து வலுவான வாதங்களை தமிழ்நாட்டின் சார்பில் எடுத்துரைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் உள்ளது.
எனவே, தமிழக முதல்வர் இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு, பேபி அணையை வலுப்படுத்த கேரள அரசு இடையூறு அளிக்கக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், ஆண்டுக்கணக்கில் இடையூறு அளித்து வரும் கேரள அரசைத் தட்டிக் கேட்க வேண்டுமென்றும், மரங்களை வெட்டுவதற்கான அனுமதி ஆணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதைத் திரும்பப் பெற கேரள அரசை வலியுறுத்த வேண்டுமென்றும், இந்தப் பிரச்சினை குறித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க ஏதுவாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்க வழிவகை செய்ய வேண்டுமென்றும், புதிய அணை கட்டுவது தொடர்பான எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இடம் தரக்கூடாது என்றும் அதிமுக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago