'ஜெய் பீம்' வெற்றி எங்களது போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி; பார்வதிக்கு உதவுங்கள்: சூர்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

By செய்திப்பிரிவு

உண்மைச் சம்பவம் திரைப்படமாகும்போது விமர்சனங்கள் வருவது இயல்பானதே என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூர்யாவுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்படம் குறித்து வரவேற்புகள் உள்ள அளவுக்கு எதிர்ப்புகளும் வரத் தொடங்கியுள்ளன. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சூர்யாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

சூர்யாவுக்கு வணக்கம். அண்மையில் தங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்துள்ள 'ஜெய் பீம்' திரைப்படம் சமூகத்தில் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ளதோடு, மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ள தங்களின் நடிப்பும், இதர கலைஞர்களின் நடிப்பும் மிகச்சிறப்பான முறையிலும் மக்களை நெகிழச் செய்வதாகவும் இருந்தது. மேலும் ஓர் உண்மைக் கதையை மிகவும் உயிர்ப்போடும், நிகழ்வுகளை நீர்த்துப்போகாமல் முழுமையாக பிரதிபலிக்கும் வகையிலும் இயக்கிய அதன் இயக்குநர் த.ச.ஞானவேலின் உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

'ஜெய் பீம்' திரைப்படத்தைத் தயாரித்த தங்கள் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் திரைக்கலைஞரான தாங்கள் முக்கியமான பிரச்சினைகளில் சமூக அக்கறையோடு மக்களுக்கு ஆதரவாகக் குரல் எழுப்பி வருவதற்குப் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகமெங்கும் மனித உரிமைகள் மீறப்படும்போது அத்தகைய வன்கொடுமைகளில் தலையீடு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்கான போராட்டங்களை மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்னெடுக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் கம்மாபுரம் சம்பவத்திலும் கட்சியின் தலையீடு அமைந்தது.

இத்திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட குறவர் சமூகத்தைச் சார்ந்த ராஜாக்கண்ணு மற்றும் அவரது மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்டப் போராட்டத்தையும் நீண்டகாலம் தொடர்ச்சியாக நடத்தியது.

கட்சியின் தொடர்ச்சியான தலையீடு மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாக கோரிக்கையில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது. ராஜாக்கண்ணுவைக் கொலை செய்த குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையையும், கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நிவாரணத்தையும் அரசிடமிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் பெற்றுத் தரவும் முடிந்தது. இதனைக் கருப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 'ஜெய் பீம்' படத்தின் வெற்றி எங்களது இயக்கம் நடத்திய போராட்டத்திற்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றியாகவே கருதிப் பெருமையடைகிறோம்.

பொதுவாக ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாக வெளியாகும்போது விமர்சனங்கள் முன்வைக்கப்படுவது இயல்பானதே. ஆனாலும், அத்தகைய விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையை எதிர்த்து நடைபெற்ற நெடிய போராட்டம் ஒரு வெற்றிப் படமாக அங்கீகரிக்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இத்தகைய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாகும்.

இவ்வழக்கில் நெஞ்சுறுதியோடு போராடிய ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினர் அன்றாடம் கூலி வேலைக்குச் செல்லும் ஓர் ஏழைத் தொழிலாளியாகவே இன்றும் சென்னையில் வாழ்ந்து வருகிறார்கள். சிறப்பானதொரு திரையாக்கத்தின் மூலம் பார்வதி போன்ற மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலங்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தி சமூகத்தின் கவனத்தை ஈர்த்த தாங்கள் பொருளாதார ரீதியாக மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள பார்வதிக்கும் அவர்களைப் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் ஏதேனும் ஒரு வகையில் உதவிக்கரம் நீட்டி ஆதரவளிக்க வேண்டுமெனவும் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

தங்களின் இத்தகைய சமூக அக்கறையுடன் கூடிய முயற்சிகள் தொடர்ந்திட மீண்டும் வாழ்த்துகள்''.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

37 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்