புதுவையில் பாகூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட வந்த துணை ஆட்சியர் காரைப் பொதுமக்கள் சிறைப்பிடித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் நகர் மற்றும் கிராமப் பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
பல இடங்களில் இந்த மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மின் மோட்டார் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் பல இடங்களில் வீடுகளில் சூழ்ந்துள்ள மழை நீர் வடியாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏம்பலம், பாகூர் தொகுதிகளுக்குட்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புதுச்சேரி துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா இன்று (நவ.12) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கிருமாம்பாக்கம் பேட் மாரியம்மன் கோயில் தெருவில் ஆய்வு செய்த அவர், வீடுகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு பாகூர் தொகுதிக்குட்பட்ட மேல் பரிக்கல்பட்டு பகுதிக்குச் சென்றார். அங்குள்ள மழையால் சேதமடைந்த வீடுகள் மற்றும் மழை நீர் சூழ்ந்துள்ள இடங்களைப் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து பாகூர் பேட் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து இருளன்சந்தை பகுதிக்குப் புறப்பட்டார். அப்போது திடீரென்று அங்கிருந்த பொதுமக்கள் துணை ஆட்சியர் காரைச் சிறைப்பிடித்து காரின் முன்பு அமர்ந்தனர். துணை ஆட்சியரைச் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர்.
‘‘மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை இதுநாள் வரை எந்த ஒரு அதிகாரியும் ஆய்வு செய்யவில்லை. தொகுதி எம்எல்ஏ மட்டும் பொதுமக்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் உரிய நடவடிக்கைகனை எடுத்து வந்தார். தற்போது, நீங்கள் வந்தவுடன் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் இங்கு வந்துள்ளனர். தற்போது ஆய்வுக்கு வரும் நீங்கள் தொகுதி எம்எல்ஏவைத் தொடர்பு கொள்ளாமல் தனியாக ஆய்வு மேற்கொள்வது சரியா" எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பி கோஷமிட்டனர்.
இதையடுத்து அங்கு பாதுகாப்பில் இருந்த பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி துணை ஆட்சியர் கார் செல்ல வழிவகை செய்தனர். இதைத் தொடர்ந்து துணை ஆட்சியர் அங்கிருந்து குருவிநத்தம் இருளன் சந்தை, இருளர் குடியிருப்புப் பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அங்கும் திரண்ட பொதுமக்கள் மீண்டும் துணை ஆட்சியரின் காரைச் சிறைப்பிடித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதுகுறித்துத் தகவல் அறிந்த தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர்கள் சிறைப்பிடிப்பைக் கைவிட்டனர். இதன்பின்னர் தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார், துணை ஆட்சியர் ரிஷிதா குப்தா இருவரும் இருளர் குடியிருப்புப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு இருளர் மக்கள் பல்வேறு கோரிக்கைகளை அவர்களிடம் வைத்தனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
இதன் பின்னர் ஆய்வை முடித்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர். இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு நிலவியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
16 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago