மழை பாதிப்பு; உபரி நீர் வெளியேற்றம், நிவாரணப் பணிகள்: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின் விளக்கம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கனமழை மற்றும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அனைத்து நிவாரணப் பணிகளும் விரைவாக நடைபெற்று வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தின் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ள நீர் குடியிருப்புப் பகுதிகளிலும், நெல் வயல்களிலும் சூழ்ந்ததால் மிகப்பெரிய பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான நிவாரணப் பணிகள் விரைவாக நடைபெற்றுவருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று (11.11.2021) மாலை கரையைக் கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில், 38 மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது. மாநிலத்தின் சராசரி மழை அளவு 17.5 மி.மீட்டர். கன்னியாகுமரி மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக அதிகபட்சமாக 77.21 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை 01.10.2021 முதல் 12.11.2021 வரை 416.5 மி.மீ. பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 266.3 மி.மீட்டரை விட 56 சதவீதம் கூடுதல் ஆகும்.

முக்கிய நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படும் விவரம்:

மேட்டூர் அணையிலிருந்து 14,569 கன அடியும்,
பவானிசாகர் அணையிலிருந்து 1,400 கன அடியும்,
வைகை அணையிலிருந்து 2,069 கன அடியும்,
செங்குன்றத்திலிருந்து 3,218 கன அடியும்,
செம்பரம்பாக்கத்திலிருந்து 2,146 கன அடியும்,
பூண்டியிலிருந்து 15,000 கன அடியும்,
சோழவரத்திலிருந்து 2,515 கன அடியும்,
வீராணம் ஏரியிலிருந்து 1,321 கன அடியும் திறந்து விடப்படுகிறது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 11.11.2021 நாளிட்ட அறிக்கையில், இன்று (12.11.2021) நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், 13.11.2021 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். 14.11.2021 அன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், தொடர்ந்து மூன்று நாட்கள் கனமழை பெய்யும் பட்சத்தில், அதிக பாதிப்புகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே, கூடுதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையிலிருந்து 17,000 கன அடி உபரி நீர் ஆரணியாற்றில் திறந்து விடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், வஞ்சிவாக்கம், ஏ.ரெட்டி பாளையம் பகுதியில் சேதம் ஏற்பட்டதன் காரணமாக இந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து இந்தப் பகுதிகளில் வசித்து வரும் 664 நபர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆரணியாற்றில் ஏற்பட்ட சேதங்கள் பொதுப்பணித் துறையினரால் சீரமைக்கப்பட்டு வருகிறது.

கேசவபுரம் அணையிலிருந்து உபரி நீர் கூவம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால், கடம்பத்தூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை நிரம்பி உபரி நீர் கூவம் ஆற்றில் விடப்படுகிறது. இது கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்தவும், நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், கூடுதல் வெள்ளத் தடுப்பு நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், வரதராஜபுரம் பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், நிவாரண மையங்களில், தேவையான அடிப்படை வசதிகள் செய்யவும், வெள்ள நீரை வெளியேற்றவும், அனைத்துத் துறைகள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் 7 குழுக்கள், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்ள மூன்று குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா இரண்டு குழுக்கள் தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நிவாரண முகாம்கள்

செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களில் மொத்தம் 259 முகாம்களில், 14,135 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் 2,699 நபர்கள் 44 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை, 28,64,400 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சென்னையில் தொடர் மழை காரணமாக வெளியில் வர இயலாத நிலையில் உள்ள பொது மக்களுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வார்டுக்கு ஒருவர் வீதம் 200 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து இந்தப் பணிகளைக் கண்காணிக்க 15 மண்டலங்களுக்கும் உதவி வருவாய் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

◦ செங்கல்பட்டு மாவட்டத்தில், 3215 நபர்கள் 80 நிவாரண முகாம்களிலும்,
◦ காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1546 நபர்கள் 40 நிவாரண முகாம்களிலும்,
◦ கடலூர் மாவட்டத்தில், 49 நபர்கள் 3 நிவாரண முகாம்களிலும்,
◦ நாகப்பட்டினம் மாவட்டத்தில், 3217 நபர்கள் 12 நிவாரண முகாம்களிலும்,
◦ பெரம்பலூர் மாவட்டத்தில், 71 நபர்கள் 1 நிவாரண முகாம்களிலும்,
◦ ராணிப்பேட்டை மாவட்டத்தில், 5 நபர்கள் 1 நிவாரண முகாம்களிலும்,
◦ தூத்துக்குடி மாவட்டத்தில், 54 நபர்கள் 1 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவள்ளூர் மாவட்டத்தில், 2,497 நபர்கள் 44 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவண்ணாமலை மாவட்டத்தில், 402 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,
◦ திருவாரூர் மாவட்டத்தில், 68 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,
◦ வேலூர் மாவட்டத்தில், 345 நபர்கள் 6 நிவாரண முகாம்களிலும்,
◦ விழுப்புரம் மாவட்டத்தில், 2666 நபர்கள் 61 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்

• கடந்த 24 மணி நேரத்தில், சென்னை, சிவகங்கை, நீலகிரி, மாவட்டத்தில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
• 64 கால்நடை இறப்பு பதிவாகியுள்ளது.
• 500 குடிசைகள் பகுதியாகவும், 34 குடிசைகள் முழுமையாகவும் ஆக மொத்தம் 534 குடிசைகளும், 129 வீடுகள் பகுதியாகவும், 4 வீடு முழுமையாகவும் ஆக மொத்தம் 133 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சி

◦ மழை நீர் தேங்கியுள்ள 530 பகுதிகளுள், 119 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர், ராட்சத பம்புகள் மூலம் அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய 411 பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

◦ மழை நீரால் சூழப்பட்டுள்ள 22 சுரங்கப்பாதைகளில், 15 சுரங்கப்பாதைகளில் மழை நீர் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 7 சுரங்கப்பாதைகளில் மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

◦ சாலைகளில் விழுந்த 529 மரங்களில், 521 மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய 8 மரங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 2007 மருத்துவ முகாம்கள் மூலம் 79,043 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

◦ மழை நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள மக்களை மீட்க 55 படகுகளும், மழை நீரை வெளியேற்ற 46 ஜேசிபிக்களும், 539 ராட்சத பம்புகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

◦ 15,225 புகார்கள் வரப்பெற்று, 5,639 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது. எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

◦ சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

◦ 1070-ல் இதுவரை 2606 புகார்கள் பெறப்பட்டு 1267 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

◦ மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077-ல் இதுவரை 1808 புகார்கள் பெறப்பட்டு, 1654 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

◦ பொதுமக்கள் TNSMART இணையதளத்திலும், வாட்ஸ் அப் எண் 94458 69848 மூலமாகவும் புகார்களைத் தெரிவிக்கலாம்''.

இவ்வாறு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்