மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டி ஐந்து நாட்களாகியும் 22 ஏரிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்?-அன்புமணி கேள்வி

By செய்திப்பிரிவு

கனமழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வருவதால் வீணாகும் நீரை ஏரிகளில் உடனடியாக நிரப்ப வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதோடு, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் கடந்த 5 நாட்களில் மட்டும் 9 டி.எம்.சி நீர் கடலில் கலந்துள்ளது. அதில் ஒரு சிறு பங்கை 22 ஏரிகளிலும் நிரப்பினால் ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெறும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாசன ஆதாரமாகத் திகழும் மேட்டூர் அணை கிட்டத்தட்ட நிரம்பிவிட்டது. மொத்தம் 120 அடி நீர்மட்டம் கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119 அடியாக உள்ளது. மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவை நெருங்கிவிட்ட போதிலும், உபரி நீரைக் கொண்டு சேலம் மாவட்ட ஏரிகளுக்குத் தண்ணீர் அனுப்பப்படாதது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

சேலம் மாவட்டத்தின் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 வறண்ட ஏரிகளை மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு நிரப்புவதற்கான மேட்டூர் உபரி நீர் திட்டம் கடந்த 2019ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்தின் 80 விழுக்காடு பணிகள் நிறைவடைந்து விட்டன.

இத்திட்டத்திற்காக 241 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பாக சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இத்திட்டப் பணிகள் இன்னும் முழுமை அடையவில்லை. ஆனாலும், திப்பம்பட்டியில் முதன்மை நீரேற்றும் நிலையம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்து விட்டது. அங்கிருந்து எம்.காளிப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப் பட்டுவிட்டன.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 5 நாட்களுக்கு முன்பாகவே 119 அடியை எட்டிவிட்டது. அணைக்கு வரும் நீரைத் திறக்காமல் தேக்கினால், ஒரு சில மணி நேரங்களில் அணை நிரம்பிவிடும். ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணையின் நீர்மட்டத்தை 119 அடி என்ற நிலையில் நீர்வளத்துறை பராமரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் அணைக்கு வினாடிக்கு 26,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று காலை நீர்வரத்து 16,000 கன அடியாகக் குறைந்துவிட்டது. அணைக்கு வரும் நீர் அப்படியே நீர் மின்னுற்பத்திக்காக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

தமிழக அரசு நினைத்தால் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீரை எடுத்து திப்பம்பட்டி நீரேற்று நிலையம் வழியாக எம்.காளிப்பட்டி ஏரிக்கு தண்ணீரைக் கொண்டுசெல்ல முடியும். எம்.காளிப்பட்டி ஏரியில் தொடங்கி மானாத்தாள் ஏரி வரை உள்ள 22 ஏரிகள் பழங்காலத்திலேயே கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் காளிப்பட்டி ஏரிக்குத் தண்ணீர் வந்தால், மீதமுள்ள 21 ஏரிகளும் இயல்பாகவே நிரம்பிவிடும். ஆனால், மேட்டூர் அணை நீர்மட்டம் 119 அடியை எட்டி ஐந்து நாட்களாகியும் 22 ஏரிகளை நிரப்புவதற்கு நீர்வளத்துறையும், சேலம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனத் தெரியவில்லை.

மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு ஏரிகளை நிரப்பும் திட்டத்தால் யாருக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. இத்திட்டத்தின்படி மொத்தமுள்ள 100 ஏரிகளையும் நிரப்ப வேண்டும் என்றால் கூட, 0.555 டி.எம்.சி தண்ணீர்தான் தேவைப்படும். இதற்கான வினாடிக்கு 126 கன அடி தண்ணீரை நீரேற்றினால் போதுமானது.

ஆனால், இப்போது அதில் ஐந்தில் ஒரு பங்கு ஏரிகளை மட்டும்தான் நிரப்ப முடியும் என்பதால் மிகவும் சொற்பமான தண்ணீரே போதுமானது. மேட்டூர் அணையிலிருந்து கடந்த 5 நாட்களில் மட்டும் 9 டி.எம்.சி நீர் கடலில் கலந்துள்ளது. அதில் ஒரு சிறு பங்கை 22 ஏரிகளிலும் நிரப்பினால் ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெறும். இப்போது இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், அடுத்து மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்பது தெரியாது.

மேட்டூர் உபரி நீர் திட்டம் சாதாரணமாகக் கிடைத்துவிடவில்லை. மேட்டூர் அணை கட்டப்பட்டு 88 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதன் உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வருகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளாக பாமக வலியுறுத்தி வருகிறது.

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி 2008ஆம் ஆண்டு சேலத்தில் ராமதாஸ் தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் 50,000 பேருக்கும் கூடுதலானவர்கள் பங்கேற்றனர். அதே கோரிக்கையை வலியுறுத்தி 2017ஆம் ஆண்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் நான் விழிப்புணர்வு பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அதைத் தொடர்ந்துதான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட செயல்படுத்தி முடிக்கப்பட்டுள்ளது. போராடிப் பெற்ற இந்தத் திட்டம் வீணாகிவிடக் கூடாது. எனவே, உடனடியாக மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு காளிப்பட்டி ஏரி உள்ளிட்ட 22 ஏரிகளை நிரப்ப அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மேட்டூர் உபரி நீர் திட்டத்தில் மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடித்து, அத்திட்டத்தை முழுமையாகச் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையில் மேட்டூர் உபரி நீர் திட்டம் என்பது சேலம் மாவட்டத்திலுள்ள திருமணிமுத்தாறு, சரபங்கா ஆகிய ஆறுகளை இணைத்து, மேட்டூர் அணையின் உபரி நீரை நீரேற்று நிலையங்கள் மூலம் அந்த ஆறுகளுக்குக் கொண்டுசென்று, சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்கள் வரை கொண்டுசெல்வது ஆகும்.

இத்திட்டத்தால் நேரடியாக 30 ஆயிரத்து 154 ஏக்கர் நிலங்களும், நிலத்தடி நீர்வளம் மேம்படுவதன் மூலம் 18 ஆயிரத்து 228 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறும். இத்திட்டத்தில் வசிஷ்ட நதி என அழைக்கப்படும் வட வெள்ளாற்றையும் இணைத்தால் விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளும் பயனடைவர். இதைக் கருத்தில் கொண்டு மேட்டூர் உபரி நீர் திட்டத்தை விரிவுபடுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும்''.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்