தேர்தல் பணிகளுக்கு செலவு செய்த தொகை; நிதி ஒதுக்க வலியுறுத்தி போராட்டம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கு செலவு செய்த தொகைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி, வருவாய்த்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் பகுதியில், நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ச.முருகதாஸ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசியதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தியதற்கான செலவினங்களை முழுமையாக வழங்கிட வேண்டும். பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு, மண்டல அலுவலர்கள், தேர்தல் பார்வையாளர்கள் ஆகியோர் பயன்படுத்த எடுக்கப்பட்ட தனியார் வாடகை வாகனங்களுக்குரிய வாடகை தொகை உட்பட அனைத்தையும் வழங்க வேண்டும்.

கரோனா தொற்று தொடர்பான பிரச்சினைகள் இருந்த சூழ்நிலையிலும், அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து சட்டப்பேரவைத் தேர்தல் பணியினை வெற்றிகரமாக நிறைவு செய்த வருவாய்த்துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும், பல்வேறு குழுக்களில் பணியாற்றிய அலுவலர்களுக்கும் அவர்களின் பணியினை அங்கீகரிக்கும் வகையில் மதிப்பூதியத்தை உடன் வழங்க வேண்டும்.

ஆறு மற்றும் அதற்கு மேலும் சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள மாவட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் வழங்க வேண்டும், சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளுக்கான செலவின தொகையினை வழங்காததால் வருவாய்த்துறை அலுவலர்கள் பல்வேறு பிரச்சினைகள் எதிர் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இந்த அடையாள போராட்டத்துக்கு பிறகும், கோரிக்கைகளை பரிசீலனை செய்து உரிய நிதிகளை ஒதுக்கீடு செய்யாமல் இருக்கும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் - 2022 தொடர்பாக, வரும் 13,14 மற்றும் 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெறும், வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பணிகளை புறக்கணிப்போம் என்றார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு, ஆட்சியர் அலுவலக பொறுப்பாளர் மோகனன் நன்றி தெரிவித்தார்.

மேலும் ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஏராளமான வருவாய்த்துறையினர் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE