பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் தேவையா? - காந்திய மக்கள் இயக்கம் கேள்வி 

By செய்திப்பிரிவு

பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் கச்சேரி தேவையா? என்று தமிழருவி மணியனைத் தலைவராகக் கொண்ட காந்திய மக்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக விவசாயிகளுக்கு கேரள அரசு துரோகம் இழைத்துள்ளது என்றும் இதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் திமுக அரசு தமிழக விவசாயிகளின் உரிமைகளை நிலைநாட்டத் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் காந்திய மக்கள் பெரியாறு அணைப் பிரச்சனையில் அரசியல் செய்யவேண்டாம் என அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து காந்திய மக்கள் இயக்கம் இன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நம்மை அடிமைப்படுத்திய அன்னியனுக்கு இருந்த மனித நேயம் கூட நம் சகோதர மாநிலத்தவர்கள் இடம் இல்லை என்பதை முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் காண முடிகிறது. கேப்டன் பென்னி குக், 1886இல் இந்த அணையைக் கட்ட மேலும் பணம் தர முடியாது என்று பிரிட்டிஷ் அரசு கைவிரித்த பின், தன் சொத்துக்கள் அனைத்தையும் விற்று அணையைக் கட்டித் தென்தமிழ் மாவட்டங்களில் வேளாண்மைக்குத் தண்ணீர் கிடைக்க வேண்டும் என்ற தன் தவத்தை நிறைவு செய்தான்.

பெரியாறு அணைதான் தமிழகத்தின் தென்மாவட்ட மக்களின் ஜீவாதாரம். தேனி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய 5 மாவட்டங்களின் 2 லட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நீர்த்தேவையினையும், பல கோடி மக்களின் குடிநீர்த் தேவையினையும் பூர்த்தி செய்து வருகிறது.

"பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது, அணை உடைந்துவிடும், 30 லட்சம் கேரள மக்கள் கடலுக்கு அடித்துச் செல்லப்படுவார்கள்'' என்ற பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கேரள மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தின, கேரளத்தின் சில ஊடகங்களும். திரையுலகப் பிரமுகர்களும். கேரள அரசும் அதற்குத் துணை போனது.

அணையைப் பார்வையிட்ட மத்திய அரசின் பாசன கமிஷன் அதிகாரிகள், "அணை நல்ல நிலையில்தான் இருக்கிறது என்றாலும் கேரள மக்களின் அச்சத்தைப் போக்குவதற்காகப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியிலிருந்து 145 அடியாகக் குறைத்துக் கொள்ளலாம்" என்றனர். தமிழக அரசு அதனை ஏற்றுக்கொண்டு, நீர் தேக்கும் அளவை 145 அடியாகக் குறைத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அடாவடி செய்தது கேரளா. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 152இல் இருந்து 136 அடியாகக் குறைக்கப்பட்டது.

பெரியாறு நீர் மட்டத்தினை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், ''பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யலாம். நீங்கள் வேண்டுமானால் 152 அடிக்குப் புது அணை கட்டிக் கொள்ளுங்கள்'' என்று கேலி செய்தவர் அப்போதைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆனந்த் தலைமையில் அமைத்த குழுவினர் அணையை ஆய்வு செய்து, அணை பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்திருக்கும் நிலையில், கேரள அரசு தானாக அணை பாதுகாப்பாக இல்லையெனச் சொல்வதை ஏற்க முடியாது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து அளிக்கப்பட்ட தீர்ப்பு, அரசியல் சாசன அமர்வால் அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பை மீறிட கேரள அரசு முயல்வது வியப்புக்குரியது.

இப்போதைய பிரச்சினை...

பெரியாறு அணையிலுள்ள பேபி அணையைப் பலப்படுத்த, அங்குள்ள 23 மரங்களை வெட்ட கடந்த 4 ஆண்டுகளாகத் தமிழகம் அனுமதி கேட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி நிராகரிப்பர், இந்த அமைச்சக அதிகாரிகள். இது சில ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. இப்போதும் மரம் வெட்ட அனுமதி உண்டு, இல்லை என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மரங்களை வெட்ட அனுமதி கொடுத்து விட்டு, பின்னர் மாநில எதிர்க்கட்சிகள் குறிப்பாக தேசிய ஒருமைப்பாடு பற்றிப் பேசும் காங்கிரஸ் எதிர்க்குரல் கொடுத்தவுடன், சர்வ தேசியம் பேசும், உலகத் தொழிலாளர்களை ஒன்று சேரக் குரல் கொடுக்கும் பொதுவுடமைக் கட்சியின் கேரள மாநில அரசினர் பின்வாங்கி விட்டனர். தமிழகத்தில் ஆளும் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இவர்கள் கைகட்டி, வாய் பொத்தி கட்சி தர்மத்தை அணுவளவும் பிறழாமல் தமிழகத்தில் கடைப்பிடிக்கின்றனர்.

கேரள அரசியல் கட்சிகள் பெரியாறு பிரச்சனையை இடைவிடாது கிளப்பிக் கேரள மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டி வருகின்றன. கேரளாவுக்கு நீர் தேவையா என்றால் அதுவும் இல்லை. பெய்யும் மழையின் பெரும்பகுதியைக் கடலுக்குத் திருப்பி விடுகிறது கேரளம். இந்த நிலையில், கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு பொறுப்பேற்றவுடன் இந்தப் பிரச்சனை குறித்துச் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் பேசினர். அப்போது, முதல்வர் பினராயி விஜயன் "முல்லைப் பெரியாறு அணைக்குப் பதில், அங்குப் புதிய அணை கட்டுவதற்கே புதிய அரசு" விரும்புகிறது என்றார்.

இழந்தது எவ்வளவு ?

அணை பலவீனமாக இருக்கிறது என்ற பொய்க் காரணத்தால் அணையில் நீர் தேக்கும் அளவை 136 அடியாகக் குறைத்த பிறகு தமிழகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம். அணையின் நீர்மட்டத்தைக் குறைத்தவுடன், அணைப்பகுதியில் நீரில் மூழ்கும் நிலப்பகுதி 4677 ஏக்கராகக் குறைந்தது. ஆனாலும், தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் சேர்த்து முதலில் தீர்மானித்தபடி 8000 ஏக்கருக்கான வாடகையைத் தமிழக அரசே கொடுத்தது. நீர் தேங்கும் கொள்ளளவு 10.4 டிம்சியில் இருந்து 6.4 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டதால் தமிழகத்தின் பாசனப்பகுதியில் 1,25,000 ஏக்கரில் முறையான விவசாயம் தொலைந்து போனது.

140 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட பெரியாறு மின்நிலையத்தில் 40 சதவிகிதம் உற்பத்தி குறைந்தது. விவசாய உற்பத்தி பாதிப்பு மற்றும் மின் உற்பத்தி பாதிப்பால் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழகம் இழந்தது சுமார் எட்டாயிரம் கோடி ரூபாய். இதனைப் பணமதிப்பாகப் பார்ப்பதை விட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் சிதைந்ததாகத் தான் பார்க்க வேண்டும்.

இப்படி அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதை விட்டுவிட்டு வாக்கு வங்கியைத் தவிர வேறு எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை என்று சபதம் எடுத்துக் கொண்டு உள்ளனர், நமது அரசியல் கட்சிகள். வீணாகக் கடலில் கலந்தாலும், கவலை இல்லை, தண்ணீர் இல்லாமல் என் பக்கத்து மாநில மக்கள் தவிக்கட்டும் என்ற இந்த வறட்டுச் சிந்தனை மாற வேண்டாமா?

'முப்பது கோடி முகமுடையாள், எனில் சிந்தனை ஒன்றுடையாள்' என்று நம்மைப் பற்றி உயர்வாகக் கனவு கண்டு விட்டுக் கண் மூடினானே, பாரதி, அவன் கவிதை நனவு ஆகாதா? 'குறுகிய சிந்தனைகளை விட்டு வெளியே வாருங்கள், நியாயத்தின் பக்கம் நில்லுங்கள்' என்று கேரளத்தின் அனைத்து தரப்பினரையும், தமிழக அரசியல் கட்சிகளே, 'அரசியல் லாவணிக் கச்சேரிகள் வேண்டாம்' என்றும், 'மாநில நலன் காக்க ஓரணியில் நில்லுங்கள்' என்றும் 'பெரியாறு அணையை மையப்படுத்தி ஆடும் அரசியல் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றும் காந்திய மக்கள் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு காந்திய மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்