கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்துவரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் சென்னை பகுதிகளான சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை, தியாகராய நகர் ஆகிய பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (7.11.2021) நேரடியாகச் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டு, அவற்றை உடனடியாகக் களைய நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், பல்வேறு பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்றத் துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையையொட்டியும், வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை எதிர்கொள்ளவும் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வெள்ளத் தடுப்புப் பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதல்வர் நேற்று காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள வடசென்னையில் புரசைவாக்கம், கொசப்பேட்டை, ஓட்டேரி, வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய பகுதிகளை முதல்வர் இன்று காலையில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, சைதாப்பேட்டை, ஆட்டுத்தொட்டி பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கைத் தமிழக முதல்வர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர், ஆட்டுத்தொட்டி, செங்கேணியம்மன் கோயில் தெரு மற்றும் வண்டிக்காரன் தெரு ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வேளச்சேரி ஏரியின் வெள்ள நிலவரத்தைப் பார்வையிட்டு, ஆய்வு செய்து, வேளச்சேரி ரேடியல் ரோடு, ஏ.ஜி.எஸ். காலனியில் உள்ள கல்கி நகரில் பம்பிங் ஸ்டேஷன் மூலம் மழை நீரை வெளியேற்றும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பள்ளிக்கரணை, கைவேலி பாலப் பகுதியில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கையும், ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
இறுதியாக தியாகராய நகரில் சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரைப் பார்வையிட்டு, அதனை உடனடியாக அகற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.எம்.எச்.அசன் மவுலானா, எஸ்.அரவிந்த் ரமேஷ், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, இ.கா.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, ரிப்பன் மாளிகையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், வடகிழக்குப் பருவமழை பாதிப்பைக் கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும், இனி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி சென்னையில் தற்போது பெய்து வரும் கனமழையால் சாலைகளில் ஆங்காங்கே தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாதுகாப்பான தங்கும் வசதியும், உணவும் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
மேலும், கட்டுப்பாட்டு அறைக்குத் தொலைபேசி மூலம் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அத்துடன் மழைக் காலங்களில் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தின் முடிவில், ஆவின், பொதுப் போக்குவரத்து, மின்சாரம், உள்ளாட்சித் துறை, மருத்துவத் துறை, வருவாய்த் துறை போன்ற அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத் துறைகள் தவிர்த்து சென்னை மாவட்டத்திலுள்ள இதர அரசு அலுவலகங்களுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுப்பு அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், தனியார் நிறுவனங்களும், தற்போதைய மழை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு, தங்கள் பணியாளர்களுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அளித்தோ அல்லது வீட்டிலிருந்து பணிபுரியும் வகையிலோ ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, இ.கா.ப., நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago