உண்டியல் வசூலை காரணம் காட்டி கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் எடுக்க முடியாது: உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் இந்து அமைப்புகள்

By ஆர்.பாலசரவணக்குமார்

உண்டியல் வசூலை காரணம் காட்டி எந்தஒரு கோயிலையும் அறநிலையத் துறை தனதுகட்டுப்பாட்டில் எடுக்க முடியாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டும் இந்து அமைப்புகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களுக்கு சட்டப்படியான அறங்காவலர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் 1983-ம் ஆண்டு ஸ்ரீவரசித்தி விநாயகர் சத்சங்கம் சார்பில் உருவாக்கப்பட்டது. இக்கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கடந்த 2014முதல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, செயல் அலுவலரையும் நியமித்தது.

இதை எதிர்த்து ஸ்ரீவரசித்தி விநாயகர் சத்சங்கத்தின் செயலர் கே.நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி - தமிழகஅரசு இடையிலான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கோயில் செயல் அலுவலர்களின் பணி என்ன என்பது குறித்தும், அவர்களுக்கான நியமன வரையறை குறித்தும் தெளிவாகஉத்தரவிட்டுள்ளது. மேலும் செயல் அலுவலர்களின் நியமனம், பதவிக் காலம் தொடர்பாக தமிழக அரசு கடந்த 2015-ம் ஆண்டு வகுத்துள்ள விதிகளில், அதிகபட்சமாக 5 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதன்படி, மனுதாரரின் கோயிலுக்கு 2014-ல் நியமிக்கப்பட்ட செயல் அலுவலரின் பதவிக்காலம் ஏற்கெனவே முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, வரசித்தி விநாயகர் கோயிலுக்கான அறங்காவலர் குழுவுக்கு, மனுதாரரின் சத்சங்கம் பரிந்துரை செய்யும் நபர்களையும் பரிசீலித்து அறநிலையத் துறை அதிகாரிகள் 4 வாரத்தில் நியமிக்க வேண்டும்.

பொது கோயில் என்பதற்காகவோ, உண்டியல் வைத்துபக்தர்களிடம் பணம் வசூலிக்கப்படுகிறது என்பதற்காகவோ அறநிலையத் துறை அந்தகோயிலை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது. நிர்வாக குளறுபடிகள், முறைகேடுகள் நடந்துள்ளது என்பதற்கு சரியான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே அந்த கோயில் நிர்வாகத்துக்கு முறையாக நோட்டீஸ் கொடுத்து அறநிலையத் துறை தலையிட முடியும்.

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து அமைப்புகள் சார்பில் சென்னை இண்டிக் கலெக்டிவ் டிரஸ்ட் அமைப்பின் தலைவரான மயிலாப்பூர் டி.ஆர்.ரமேஷ், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியதாவது:

இந்து கோயில்களின் பாரம்பரியம், கலாச்சாரத்தை சட்டரீதியாக காப்பதே எங்கள் அறக்கட்டளையின் முக்கிய நோக்கம். தமிழகத்தில் அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில்44,286 கோயில்கள் உள்ளன. ஆனால், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், பழநி தண்டாயுதபாணி சுவாமி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் இன்னும் பரம்பரை வழி அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. கடந்த 11 ஆண்டுகளாக செயல் அலுவலர்களையே தக்காராக நியமித்து அரசுகாலம் கடத்தியது. அதுவே பல முறைகேடுகளுக்கு முக்கிய காரணம்.

அதேநேரம், உண்டியல் வைத்து பக்தர்களிடம் பணம்வசூலிக்கப்படுகிறது என்பதற்காக எந்த ஒரு கோயிலையும் அறநிலையத் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாது என்று பெசன்ட் நகர் ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் வழக்கில் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

ஏனென்றால், பெரும்பாலான கோயில்களை கையில் எடுத்த மறுநிமிடமே அறநிலையத் துறை உண்டியல் வைத்து விடுகிறது. 1959 அறநிலையத் துறை சட்டப்படி கோயில்களில் செயல் அலுவலர்களை நிரந்தரமாக நியமிக்க எந்த சட்ட விதிகளும் இல்லை. பிரிவு 45-ன்படி அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு மட்டுமே செயல் அலுவலர்களை இடைக்கால ஏற்பாடாக நியமிக்க முடியும். அதுவும், கோயில் நிர்வாகத்தில் முறைகேடு, பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே அறநிலையத் துறை தலையிட முடியும்.

கோயில் நிர்வாகத்துக்கு வெளியே இருந்து மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே அறநிலையத் துறைக்கு உள்ளது என்பதால் செயல் அலுவலர் நியமனம் செல்லாது என்று அறிவிக்க கோரியும், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு அறங்காவலர் குழுவை உடனே நியமிக்க கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் செயல் அலுவலரின் நியமனம் செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் கண்டுள்ளேன். தற்போது பழநி கோயிலுக்கு நியமிக்கப்பட்ட அறங்காவலர்களும் ராஜினாமா செய்துவிட்டதால் தற்போது யாருடைய கட்டுப்பாட்டில் பழநி கோயில் உள்ளது என்பது தெரியவில்லை.

எனவே, தமிழக அரசு விரைவாக செயல்பட்டு, பரம்பரை வழி அல்லாத அறங்காவலர்களை சட்டப்படி நியமிக்க வேண்டும்.

5 பேர் கொண்ட அறங்காவலர் குழுவில்பட்டியலினத்தவர், பழங்குடியினர், பெண்களுக்கும், சைவ, வைணவ கோயில்கள் என்றால் அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்