அண்டை மாநிலங்களுக்கு இணையாக பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க முதல்வருக்கு லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

அண்டை மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காவிட்டால், நமது மாநில வாகனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கும் சூழல் உருவாகும் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சம்மேளனத்தின் மாநிலச் செயலாளர் வாங்கிலி செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் லாரிகள், பேருந்துகள் என சுமார் 4.5 லட்சம் கனரக வாகனங்கள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக ஆயில் நிறுவனங்கள் நாள்தோறும் டீசல் விலையை உயர்த்தி வந்ததால், கட்டுப்படியான வாடகை கிடைக்காமல் சுமார் 30 சதவீதத்துக்கு மேற்பட்ட லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்தது. இதைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாட்வரி குறைக்கப்பட்டு ஒரு லிட்டர்டீசலுக்கு ரூ.7 முதல் ரூ.12 வரைவிலை குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றிபெற்றால் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.4 குறைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை குறைக்கவில்லை. தற்போது அண்டை மாநிலங்கள் டீசலுக்கான வாட் வரியை குறைத்தபோதும், தமிழக அரசு வாட் வரியை குறைக்க முன்வரவில்லை.

இதனால் தமிழகத்தில் உள்ள லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டை மாநிலங்களுக்கு இணையாக தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் மீதான வரி குறைக்காவிட்டால், நமது மாநில வாகனங்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்று டீசல் பிடிக்கும் சூழல் உருவாகும்.

இதனால் தமிழக அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். எனவே, தமிழக முதல்வர் இதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து டீசல் விலையை அண்டை மாநிலங்களுக்கு இணையாக குறைந்தது லிட்டருக்கு ரூ.7 வாட் வரி குறைக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE