அலியாபாத் அணைக்கட்டில் தடுப்புகள் இல்லாததால் ஆபத்தை உணராமல் கமண்டல நதியில் குதிக்கும் சிறுவர்கள்: பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

படைவீடு அருகே உள்ள அலியாபாத் அணைக்கட்டில் தடுப்பு கம்பிகள் இல்லாததால், ஆபத்தை உணராமல் கமண்டல நதியில் குதித்து சிறுவர்கள் குளித்து மகிழ்கின்றனர்.

தி.மலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் இருந்து உற்பத்தியாகி கமண்டல நதி செல்கிறது. இந்த நதியின் குறுக்கே, சந்தவாசல் அருகே படைவீடு ஊராட்சிக்கு உட்பட்ட கேசவாபுரம் கிராமத்தில் ஆங்கிலேயர்கள் காலத்தில் கடந்த 1869-ம் ஆண்டு அலியாபாத்அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. கம்பீரமாக இருந்த அணைக்கட்டு,போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து பொலிவிழந்தது. அணைக்கட்டு மீது போடப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் உடைந்துகாணமால் போனது. அலியாபாத் அணைக்கட்டை சீரமைக்க வேண்டும் என கிராம மக்களின் கோரிக்கையை பொதுப்பணித் துறையினர் நிறைவேற்றவில்லை.

இந்நிலையில், கமண்டல நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. இதனால் ஈர்க்கப்பட்ட மாணவர்கள், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அலியாபாத் அணைக்கட்டின் மீது ஏறி, கமண்டல நதியில் குதித்து மகிழ்கின்றனர். தண்ணீரின் வேகம் திடீரென அதிகரிக்கும்போது, நதியில் குதிக்கும் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார் சமூக ஆர்வலர் அமுல்ராஜ்.

மேலும் அவர் கூறும்போது, “அலியாபாத் அணைக்கட்டை சீரமைக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். அணைக்கட்டில் இருந்த தடுப்பு கம்பிகளும் உடைந்துபோனதால், அதற்கு மாற்றாக புதிய தடுப்புகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். தடுப்பு கம்பிகள் இருந்தால், சிறுவர்கள் குளிப்பது கட்டுப்படுத்தப்படும். ஆனால், நிதிநிலையை மேற்கோள்காட்டி, சீரமைப்பு பணியை தொடங்க பொதுப்பணித் துறையினர் முன்வரவில்லை.

அசம்பாவித நிகழ்வு நடைபெறுவதற்கு முன்பாக, அலியாபாத் அணைக்கட்டை சீரமைத்து, தடுப்புகளை அமைத்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE