தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தீபாவளிப் பண்டிகைக்கு பட்டாசுகளை வெடிக்க உச்ச நீதிமன்றம் நேரக் கட்டுப்பாடு விதித்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலுமே பட்டாசு வெடிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய, பேரியம் என்ற ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசு கள் மற்றும் சரவெடிகளை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவோ, விற்பனை செய்யவோ, வெடிக்கவோ தடை விதிக்கப்பட்டது.
ஆனால், தமிழகம் முழுவதுமே நேற்று பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லை. இதனால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகம் முழுவதும் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 1,614 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் தலைநகர் சென்னையில் மட்டுமே, 758 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையில் வழிகாட்டுதலை மீறி பட்டாசுக் கடைகள் நடத்தியதாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டி கைதானவர்களில் 517 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.