தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: மழை நீடிக்கும்

By செய்திப்பிரிவு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெய்துவரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வரும் நிலையில் மழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே டெல்டா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழைபெய்து வருகிறது. இதனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்துவரும் மழையால் 55 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இங்குள்ள பெலாந்துறை நீர்த்தேக்கத்தில் நீர்நிரம்பி முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த மாவட்டத்தில் தொடர்ந்து 5வது நாளாக பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

வீடுகளையும் சாலைகளையும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன. பயிரில் மூழ்கிய விளைநிலங்களை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கடலூர், திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்திலும் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் தொடர் மழையால் கோமுகி அணை வேகமாக நிரம்பி வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 5 நாளாக தொடர்ந்து மழை பெய்து வருவதல் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

ஒருபக்கம் மழை பெய்துகொண்டிருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல், மக்கள் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். இதனால் கடைகளில் பொருட்கள் வாங்க மக்கள் செல்வதால் கொட்டும் மழையிலும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வந்தவாசி பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பாலாற்றின் தடுப்பணை நிரம்பியதால் உபரிநீர் கடலில் திறந்துவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கனமழை மேலும் தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளதாவது:

''லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் தென்தமிழகத்தையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவுகிறது. இதன் காரணமாக டெல்டா, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை, நீலகிரி மற்றும் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்காலிலும் கனமழை தொடர வாய்ப்பு. சென்னையில் மிதமான தொடர்ந்து பெய்ய வாய்ப்புள்ளது.

மூன்று நாட்களுக்கு கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல்பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள்.

தமிழகக் கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகள் சூறாவளி வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE