தீபாவளியை கொண்டாட ரயில், பேருந்துகளில் புறப்பட்டனர்; 6 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்: கனமழையையும் பொருட்படுத்தாது கடைகளில் குவிந்த கூட்டம்

By செய்திப்பிரிவு

தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து லட்சக்கணக் கானோர் புறப்பட்டுச் சென்றனர். சென்னையில் இருந்து மட்டும் 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். கனமழையையும் பொருட்படுத்தாது ஏராளமான பொதுமக்கள் கடைகளில் குவிந்தனர்.

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை இன்று (4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே தீபாவளி விற்பனை களை கட்டியிருந்தது. புத்தாடை, ஆபரணங்கள், இனிப்புகள், பட்டாசுகள் வாங்குவதில் மக்கள் ஆர்வமாக இருந்தனர். இதனால், வர்த்தகப் பகுதிகளிலும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளில் ஒருவாரமாக பெய்த கனமழையையும் பொருட்படுத்தாமல் துணிக் கடைகளில் மக்கள் குவிந்தனர்.

தீபாவளிக்கு முந்தைய நாளான நேற்றும் துணி, பட்டாசு, இனிப்பு கடைகளில் இறுதிகட்ட விற்பனை அனல் பறந்தது. சென்னையில் வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், தி.நகர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, பள்ளிக்கரணை, புறநகர் பகுதிகளான போரூர், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந் திருந்தனர்.

தீவுத் திடலில் நடந்து வரும் பட்டாசு சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. குழந்தைகளையும் அழைத்து வந்து, அவர்களின் விருப்பத்தைக் கேட்டு பெற்றோர்கள் பட்டாசு வாங்கிக் கொடுத்தனர்.

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாநகரப் பகுதிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு இருந்தன. அக்குழுக்கள், கூட்டம் அதிகமான இடங்கள், கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், முகக் கவசம் அணியுமாறும் மக்களை அறிவுறுத்தினர். முகக் கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். கரோனா வழிகாட்டு முறைகளை கடைபிடிக்காத பல கடைகளுக்கு எச்சரிக்கையும் விடப்பட்டது.

மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை சார்பில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு திருட்டு செயல்களில் யாரேனும் ஈடுபடுகின்றனரா என கண்காணித்தனர்.

கல்வி, வேலை தொடர்பாக நகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீபாவளியை தங்கள் சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக புறப்பட்டு சென்ற வண்ணம் இருந்தனர். நீண்ட நாட்களுக்கு முன்பே ரயில், பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தனர். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வசிக்கும் மக்கள் கடந்த 1-ம் தேதி முதலே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் இருந்தனர். முக்கிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கடந்த 3 நாட்களாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2 ஆயிரம் பேருந்துகளுடன் தேவைக்கு ஏற்றார்போல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் பிரித்து இயக்கப்பட்டன. பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகள் வரிசையாக இயக்கப்பட்டன. பயணிகள் அதிகமாக செல்லும் வழித்தடங்களை தேர்வு செய்து, கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் மட்டும் 3,500 சிறப்பு பேருந்துகளையும் சேர்த்து மொத்தம் 9,800 அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று நள்ளிரவை தாண்டியும் விடிய, விடிய பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையில் இருந்து அரசுப் பேருந்துகளில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்துள்ளனர்.

சென்னையில் கோயம்பேடு, தி.நகர், பெருங்களத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெளியூர்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டன. அவற்றிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதுமட்டுமின்றி, பலர் தங்கள் சொந்த வாகனங்களிலும் புறப்பட்டு சென்றனர். இதனால், சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதேபோல ரயில்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஒரு சில விரைவு ரயில்களில் மட்டுமே முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. சென்னையில் இருந்து ரயில்கள் மூலம் சுமார் 70 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.

சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் பண்டிகை முடிந்து மீண்டும் திரும்புவதற்கு வசதியாக போதிய அளவில் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்