கல்வி, வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்துக்குமான பிரதிநிதித்துவம் குறித்து வெள்ளை அறிக்கை: முதல்வருக்கு ராமதாஸ் கடிதம் 

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெள்ளை அறிக்கையாகத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து, ராமதாஸ் எழுதிய கடிதத்தை அளித்தனர். வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்தும் இந்தச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

முதல்வருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதத்தின் விவரம்:

''சமூக நீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு வழங்கி இயற்றப்பட்ட சட்டம் செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியாக, இந்த இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உயர் கல்வி நிறுவனங்களில் அனுமதிக்கப்பட்ட வன்னியர் மாணவர்களின் நலனைக் காப்பது குறித்து தாங்கள் ஆலோசனை நடத்தியிருப்பதும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில், வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு செல்லாது என்று அறிவிக்கப்பட்டதற்கான முக்கியக் காரணமாகக் கூறப்பட்டிருப்பது மக்கள்தொகை கணக்கெடுப்பு, சமூக, கல்வி, வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இல்லை என்பதுதான்.

தமிழ்நாட்டில் மிக மிகப் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள சமுதாயம் வன்னியர்கள்தான் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ‘‘வன்னியர் சமுதாயத்தினருக்கும், பட்டியலினத்தவருக்கும் சமுதாயப் படிக்கட்டு நிலையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்ற வகையில் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்த வன்னியச் சமுதாயத்தினர் தெரிவித்தனர். நாங்கள் பார்வையிட்ட தென்னார்க்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஊர்களில் நெரிசலாக, அழுக்கடைந்த தோற்றத்துடன் வன்னியர்கள் வாழ்வதையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில இடங்களில் பெரும் நிலவுடைமையாளர்களைச் சார்ந்து இருப்பதையும் கண்டோம்.

முக்கியமான குடியிருப்புகளின் வீதிகளில் இவர்களுடைய மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் காண முடியும். இத்தகைய சூழல்களில் பிள்ளைகளின் கல்வி துன்பத்துடன் புறக்கணிக்கப்படுகிறது; பள்ளியிலிருந்து நின்று விடுவதும் மிகவும் சாதாரணமாகி விடுகிறது’’ என்று வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்து சட்டநாதன் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இந்த அளவுக்கு மிகவும் பின்தங்கியுள்ள சமுதாயத்திற்கு, போதிய புள்ளிவிவரங்கள் இல்லை என்ற காரணத்திற்காக, சமூக நீதி மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமல்ல. அத்துடன் இட ஒதுக்கீட்டால் எந்தெந்த சமுதாயங்கள் பயனடைந்துள்ளன; எந்தெந்த சமுதாயங்கள் பயனடையவில்லை என்பது குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு, அதனடிப்படையில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். இதை ஒரு தொடர் நடவடிக்கையாக அரசு மேற்கொள்ள வேண்டும்.

1969ஆம் ஆண்டு திமுக அரசால் அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம் அளித்த பரிந்துரையில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எந்த அளவுக்குப் பயன் கிடைத்துள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டும்; அனைத்து சமுதாயங்களுக்கும் சமமான சமூக நீதி கிடைத்துள்ளதா? என்பதை ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஆராய வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பரிந்துரை பின்பற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் ஒவ்வொரு சமூகத்திற்கும் எந்த அளவுக்குப் பயன் கிடைத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்கும்படி பல முறை கோரியும் அதற்கு எந்தப் பயனும் இல்லை. தகவல் அறியும் உரிமைப்படி இந்த விவரங்கள் கோரப்பட்டும் அவை வழங்கப்படவில்லை. ஒவ்வொரு சமுதாயமும் இட ஒதுக்கீட்டால் எந்த அளவுக்குப் பயனடைந்துள்ளன என்பதை அறிய இவ்விவரங்கள் மிகவும் அவசியம். ஆனாலும், அவற்றை தமிழ்நாடு அரசும், அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மறைக்கின்றன. அவ்வாறு மூடி மறைக்க எந்தத் தேவையும் கிடையாது.

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டில் யார், யாருக்கு எவ்வளவு பலன் கிடைத்துள்ளது என்பதை அறிந்துகொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்துள்ள பிரதிநிதித்துவத்தைக் கணக்கிடுவதும், கண்டறிவதும் கடினமான ஒன்றல்ல. மாணவர் சேர்க்கைகள், பணி நியமனம் உள்ளிட்ட அனைத்திற்கும் சாதிச் சான்றிதழ்கள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. அவற்றை வைத்து இட ஒதுக்கீட்டுப் பிரதிநிதித்துவத்தை மிகவும் எளிதாகக் கணக்கிட்டு, வெளியிடுவது சாத்தியம்தான்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்க செயலாகும். அதே நேரத்தில் உச்ச நீதிமன்றத்தில், வன்னியர் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க, அதில் சம்பந்தப்பட்ட சமுதாயங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரங்கள் தேவைப்படும்.

எனவே, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்காகக் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதிப் பணிகள், இரண்டாம் தொகுதிப் பணிகள், நீதிபதி பணிகள் உள்ளிட்டவற்றிலும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையிலும் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைத்த பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட அமைப்புகள் உடனடியாக வெளியிடத் தாங்கள் ஆணையிட வேண்டும்.

அடுத்தகட்டமாக, 1989ஆம் ஆண்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது என்பதை ஒவ்வொரு இட ஒதுக்கீட்டுப் பிரிவு வாரியாகவும், ஒட்டுமொத்தமாகவும் தொகுத்து வெள்ளை அறிக்கையாகத் தமிழக அரசு வெளியிட வேண்டும். அதன் மூலம் சமூக நீதி தழைப்பதை உறுதி செய்ய வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்