அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய நவ.19-ம் தேதி தீப விழா நாளில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும் நாளான நவ.19-ம் தேதி அன்று அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் வரும் 10-ம் தேதி காலை நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் சுவாமி அபிஷேகம் மற்றும் திருஉலா புறப்பாடு நேரங்களை தவிர்த்து, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். சுவாமி தரிசனம் செய்ய வரும் 7-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையும் மற்றும் 21-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையும் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். ஆன்லைன் மூலம் கட்டணம் இல்லாமல் முன் பதிவு செய்து தரிசிக்கலாம். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு 30 சதவீதமும், வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களக்கு 70 சதவீதமும் அனுமதி வழங்கப்படும்.

பரணி தீபம் மற்றும் மகா தீபம் நடைபெறும் நாளான நவ.19-ம் தேதி அன்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்வுகளை தொலைக்காட்சிகள், உள்ளூர் கேபிள் டிவிக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

கரோனா தொற்று பரவாமல் தடுக்க, கட்டுப்பாடுகளுடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE