இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்துவரும் இயக்கம் திமுகதான்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

By செய்திப்பிரிவு

இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காகக் குரல் கொடுத்துவரக்கூடிய இயக்கம் நம்முடைய திமுகதான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் நடைபெற்ற அரசு விழாவில், புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3,510 புதிய குடியிருப்புகள் மற்றும் ரூ.30 கோடி மதிப்பீட்டில் முகாம்களில் குடிநீர், மின்சாரம், சாலை வசதி போன்ற அடிப்படைத் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதைத் தொடர்ந்து விழாவில் முதல்வர் பேசியதாவது:

''புலம்பெயர்ந்து நம்முடைய தாய்த் தமிழ்நாட்டிற்கு வந்து வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இலங்கைத் தமிழர்களை ஒரு அடையாளச் சொல்லாகத்தான் இலங்கைத் தமிழர்கள் என்று நான் அழைத்தேன். மற்றபடி தமிழர்கள் அனைவரும் எங்கே, எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள்தான் என்பதை நாங்கள் மறந்துவிடவில்லை. அந்த அடிப்படையில் சொன்னால், தமிழக தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் இனத்தால், மொழியால், பண்பாட்டால், நாகரிகத்தால் ஒன்றுபட்டவர்கள்.

இன்னும் மகிழ்ச்சியாக, பெருமையாக, பூரிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், நாம் அனைவரும் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். கடல்தான் நம்மைப் பிரிக்கிறது. நீங்கள் விட்ட கண்ணீர் நம்மை இன்றைக்கு இணைத்துக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் தங்களுடைய தாயகத்தில் பாதிக்கப்பட்ட காலம் முதல் அவர்களுக்காக குரல் கொடுத்துவரக்கூடிய இயக்கம் நம்முடைய திமுகதான் என்பதை யாரும் மறுத்திட, மறைத்திட முடியாது.

1983 முதல் ஈழத்திலிருந்து தமிழ் மக்கள் இங்கு வருவது தொடங்கியது, அவர்களுக்காக முகாம்கள் அமைக்கப்பட்டன, சிலர் வெளியிலும் தங்கியிருந்தார்கள். இந்த முகாம்களின் நிலைமை மிக மோசமாக இருக்கிறது என்பதை உணர்ந்து பார்த்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1997ஆம் ஆண்டு முதல்வராக இருந்த நேரத்தில், ஏராளமான திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்திக் காட்டினார். அதனால், அவர்கள் ஓரளவு தன்னிறைவு அடைந்தார்கள்.

ஆனால், கடந்த 10 ஆண்டு காலத்திலே, அதிமுக அரசு அவர்களுக்காக எந்த நன்மையும் செய்திடவில்லை, அவர்களைப் பற்றி கவலையே படவில்லை. இந்த நிலையில், இப்போது திமுக அரசு பொறுப்பேற்றவுடனே, இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுத் திட்டங்களை மீண்டும் நாம் தொடங்கியிருக்கிறோம். அவர்கள் அகதிகள் அல்ல, அனாதைகள் அல்ல, அவர்களுக்கு நாம் இருக்கிறோம் என்பதை உணர்த்துவதற்காக அகதிகள் முகாம் என்று அவற்றை, அவர்களை அழைத்திடக் கூடாது. அதனால்தான், சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி, இதற்கென ஒரு அறிவிப்பை வெளியிட்ட நேரத்தில் நான் சுட்டிக்காட்டினேன், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று அழைப்போம் என்பதை அறிவித்தேன். அதனைச் செயல்படுத்தக்கூடிய நாள்தான் இந்த நாள். அதற்காகத்தான், இந்த முகாமிற்கு நாங்களெல்லாம் வந்திருக்கிறோம்.

நம்முடைய தமிழினத் தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்த நேரத்தில், முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு 1997-1998ஆம் ஆண்டில் 3,594 புதிய வீடுகள் கட்டித் தரப்பட்டன. 1998-1999ஆம் ஆண்டில் 3,826 வீடுகள் கட்டித் தரப்பட்டன. கடந்த 2009ஆம் ஆண்டும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகள் செய்து தருவதாக திமுக அரசு 100 கோடி ரூபாய் அன்றைக்கு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலையில், இன்னும் அந்த வாழ்விடங்களைச் செழுமைப்படுத்த திட்டமிட்டிருக்கிறோம்.

எனவேதான் இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்றவுடனே அனைத்து முகாம்களையும் அந்தத் துறையின் அமைச்சர் மட்டுமல்ல, அமைச்சர்களாகப் பொறுப்பேற்றிருக்கக் கூடியவர்கள் எல்லா முகாம்களையும் சென்று பார்வையிட வேண்டும். தமிழகத்தில் இருக்கின்ற 106 இலங்கைத் தமிழர்கள் மறுவாழ்வு முகாம்களையும் ஆய்வு செய்து, அவர்களுக்கு என்ன உடனடித் தேவைகள் என்பது குறித்து அறிக்கையை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்து தரவேண்டும் என்று பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

19,046 குடும்பங்களைக் கொண்ட இலங்கைத் தமிழர்களின் முகாம்களில், மிகவும் பழுதடைந்தடைந்த நிலையில் உள்ள 7,469 வீடுகளைக் கட்டித் தரவும், அவர்களது அனைத்து முகாம்களிலும் அடிப்படைக் கட்டமைப்புகளை உருவாக்கிடவும், அதை மேம்படுத்திடவும் இலங்கைத் தமிழர் மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தேன்.

முகாம்வாழ் பிள்ளைகளின் கல்வி மேம்பட பொறியியல், வேளாண், வேளாண் பொறியியல் மற்றும் முதுநிலை பயிலக்கூடிய மாணவ, மாணவியருக்கு அனைத்துக் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் ஆகிய அனைத்தையும் அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்தேன். கலை, அறிவியல் மற்றும் பட்டயப் படிப்பு படித்து வருகின்றவர்களுக்கு உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு வேலைவாய்ப்புத் தகுதியை மேம்படுத்திட திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல், முகாம்களில் இயங்கிவரக்கூடிய சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகாலமாக உயர்த்தப்படாத மாதாந்திரப் பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். சமையல் எரிவாயு மற்றும் அலுமினியப் பாத்திரங்களுக்கு பதிலாக எவர்சில்வர் பாத்திரங்கள் வழங்கப்படும். கோ-ஆப்டெக்ஸ் வாயிலாக முகாம் வாழ் தமிழர்களுக்கு உயர்த்தப்பட்ட விலையில் தரமுள்ள ஆடைகள் வழங்கப்படும்.

நான் ஏற்கெனவே அறிவித்திருந்த இலங்கைத் தமிழ் மக்களுக்கான 12 நலத் திட்டங்களை அறிவித்து, இந்த இரண்டு மாதங்களிலேயே தொடங்கிவைத்துச் செயல்படுத்துவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இவற்றில் சமூக நலத்திட்டங்கள் இப்போது தொடங்கப்படுகின்றன. உயர்த்தப்பட்ட பணக்கொடைக்காக 12.41 கோடி ரூபாயும், துணிமணிகள் வழங்குவதற்காக 4.52 கோடி ரூபாயும், ஐந்து வகையான எவர்சில்வர் சமையல் பாத்திரங்கள் வழங்க 2.42 கோடி ரூபாயும், இலவச எரிவாயு இணைப்பு மற்றும் எரிவாயு உருளைக்கான மானியம் வழங்க 8.66 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாம்வாழ் தமிழர்களுக்கான அரிசி மானியத் தொகையை அரசே முழுமையாக ஏற்றுக்கொண்டு, முழுவதும் இலவசமாக வழங்குவதும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், முகாம்களில் வசிக்கும், கல்லூரியில் அனைத்து ஆண்டுகளிலும் பயிலக்கூடிய வகையில் இலங்கைத் தமிழர் மாணவர்களுக்கு இலவசக் கல்வி மற்றும் உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகைக்காக 4.35 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. முகாம்வாழ் தமிழர்களுக்குப் பொருளாதார ரீதியில் கவுரவமான வாழ்க்கை அளிக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவித்ததற்கேற்ப, 621 சுய உதவிக் குழுக்களுக்கு சமூக முதலீட்டு நிதி வழங்க அந்த நிதியை 6.15 கோடி ரூபாயும், சுயதொழில் மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்க 5,000 இலங்கைத் தமிழர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி, தொழிற்கல்விகள் மற்றும் வேலைவாய்ப்பு முகாம்களுக்கு என்று 10 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், முகாம்களின் உடனடி அவசியத் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தரம் மேம்பாட்டு நிதிக்காக 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த 10 நலத் திட்டங்களும் இன்று முதல் முழுமையான செயல்பாட்டிற்கு வரும்.

அதுமட்டுமன்றி, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அடிப்படைக் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய இலங்கைத் தமிழர் முகாம்களில் முதற்கட்டமாக 290 சதுர அடி கொண்ட 3,510 புதிய வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் இங்கே நாட்டப்பட்டிருக்கிறது. மேலும், குடிநீர், மின்சாரம், சாலை வசதி மற்றும் கழிவுநீர் கால்வாய் இதுபோன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக 30 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நலத்திட்டங்களுக்கு இன்று இந்த மேல்மொணவூர் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் அடிக்கல் நாட்டுவதிலும், நலத்திட்ட உதவிகளை வழங்கி தொடங்கி வைப்பதிலும் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இது முடிவல்ல, தமிழ்நாட்டிலுள்ள மற்ற 105 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலும் அனைத்து அமைச்சர்களும் சென்று இப்பணிகளைத் தொடங்கி வைக்க இருக்கிறார்கள்''.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்