மகாராஷ்டிராவில் உள்ள மகோசா சட்டம் புதுச்சேரியிலும் கொண்டுவரப்படும்: உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு

புதுச்சேரியில் விரைவில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டு கடுமையான மகோசா சட்டம் கொண்டு வரப்படும் என்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரியில் தொடர்ந்து 3 கொலைகள் அண்மையில் நடந்துள்ளன. அத்துடன் போதைப்பொருள் விற்பனையும் அதிகரித்துள்ளது. சிறையிலிருந்து ரவுடிகள் வெளியிலுள்ள ரவுடிகளுடன் கைகோத்துக் குற்றச் செயல்களை நிறைவேற்றத் தொடங்கியுள்ளனர். போலீஸார் பற்றாக்குறையும் உள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் இன்று கூறியதாவது:

“புதுச்சேரியில் சமீபத்தில் 3 கொலைகள் நடந்துள்ளன. இதில் குற்றவாளிகளைக் கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தொடர் குற்றவாளிகள் திருந்தி வாழ வேண்டும். இல்லாவிட்டால் கடுமையான சட்டம் பாயும். புதுச்சேரியில் போதைப் பொருட்களைக் கடத்தி வந்து விற்பனை செய்கின்றனர். இந்தக் கடத்தலைத் தடுக்கவும், போதைப் பொருள் விற்பனை செய்வோர் மீதும் "ஆபரேஷன் திரிசூலம்" என்ற பெயரில் நடவடிக்கை தொடங்கியுள்ளது.

புதுச்சேரியில் போதைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை பாயும். குண்டர் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படும். மகாராஷ்டிராவில் உள்ள மகோசா சட்டம் புதுச்சேரியிலும் கொண்டுவரப்படும். 390 காவலர் பணியிடங்களை நிரப்ப நவம்பர் இறுதிக்குள் பணிகள் தொடங்கி இந்த ஆண்டுக்குள் நிரப்பப்படும். போக்குவரத்துப் பிரச்சினையைச் சரிசெய்யப் போதிய காவலர்களை நியமிக்க உத்தரவிட்டுள்ளேன். சைபர் குற்றம் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது".

இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE