பறிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

பறிக்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் பாமக ஓயாது என்று வன்னிய சமுதாய மக்களுக்கு ராமதாஸ் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இன்று எழுதியுள்ள கடிதம்:

''தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 10.50% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. வன்னியர்களுக்கான உள் இட ஒதுக்கீட்டால் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முன்னுரிமை கிடைக்கும். அதன் மூலம் நமது வாழ்க்கையில் வசந்தம் பிறக்கும் என்று நம்பிக் கொண்டிருந்த வன்னியர் சமுதாயத்து மாணவச் செல்வங்களும், வேலைவாய்ப்புக்காகக் காத்திருந்த சொந்தங்களும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நான் அறிவேன்.

இட ஒதுக்கீடு ரத்து என்ற அதிர்ச்சியிலிருந்து என்னாலேயே இன்னும் முழுமையாக மீண்டுவர முடியாத நிலையில், உங்களின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். சமூக நீதிக்காகப் போராடி வரும் நமக்கு இது பெரும் பின்னடைவுதான். ஆனால், இதிலிருந்து மீண்டும் இன்னும் பிரம்மாண்டமாக எழுச்சி பெரும் வலிமையும், திறனும் நமக்கு உண்டு.

கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக மோசமான நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள்தான் என்பதை சமூக நீதி பேசும் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். தமிழ்நாடு அரசால் 1969ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட சட்டநாதன் ஆணையம், அதன் அறிக்கையில், வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்து என்ன குறிப்பிட்டிருக்கிறது? என்பதை அனைவருக்கும் சுட்டிக்காட்ட வேண்டியது எனது கடமையாகும்.

‘‘வன்னியர் வகுப்பினரின் கல்வி முன்னேற்றம் எல்லா நிலைகளிலும் கீழானவற்றுள் ஒன்றாகவே உள்ளது. இன்றும் கூட பெரும் மக்கள்தொகையுடைய இவ்வகுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூறு பட்டதாரிகள் இருப்பது கடினமே. மருத்துவர்களாக, பொறியாளர்களாக உள்ளவர்களும் சிலரே.

வன்னியர் சமுதாயத்தினருக்கும், பட்டியலினத்தவருக்கும் (தலித்) சமுதாயப் படிக்கட்டு நிலையில் உள்ள வேறுபாட்டைத் தவிர, மற்ற வகையில் எந்த வேறுபாடும் இல்லை என்று ஆணையத்தின் முன் சாட்சியம் அளித்த வன்னியச் சமுதாயத்தினர் தெரிவித்தனர். நாங்கள் பார்வையிட்ட தென்னார்க்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஊர்களில் நெரிசலாக, அழுக்கடைந்த தோற்றத்துடன் வன்னியர்கள் வாழ்வதையும், தஞ்சாவூர் மாவட்டத்தின் சில இடங்களில் பெரும் நிலவுடைமையாளர்களைச் சார்ந்து இருப்பதையும் கண்டோம். முக்கியமான குடியிருப்புகளின் வீதிகளில் இவர்களுடைய மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் காண முடியும். இத்தகைய சூழல்களில் பிள்ளைகளின் கல்வி துன்பத்துடன் புறக்கணிக்கப்படுகிறது; பள்ளியிலிருந்து நின்று விடுவதும் மிகவும் சாதாரணமாகி விடுகிறது’’ என்றுதான் வன்னியர்களின் வாழ்க்கை நிலை குறித்து சட்டநாதன் ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வன்னியர்களில் பெரும்பான்மையினர் கையெழுத்து கூடப் போடத் தெரியாதவர்களாகவும், வண்டி மசையைக் கைகளில் தடவி கை ரேகை வைப்பவர்களாகவும்தான் சில பத்தாண்டுகளுக்கு முன் இருந்தனர். இப்போதும் பல இடங்களில் இத்தகைய நிலை தொடர்கிறது. வன்னியர்களின் இத்தகைய இழிநிலையைக் கண்டுதான், மருத்துவர் பணியையும் கைவிட்டு, வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் பிரிந்து கிடந்த வன்னியர் சங்கங்களை எல்லாம் ஒன்று திரட்டிப் போராடத் தொடங்கினேன். கடந்த 42 ஆண்டு காலத்தில் நமது சமூக நீதிப் பயணம் எவ்வளவோ வெற்றிகளைக் குவித்திருக்கிறது; பல பின்னடைவுகளையும் சந்தித்திருக்கிறது. அதில் இதுவும் ஒன்று.

10.50% வன்னியர் உள் ஒதுக்கீட்டுக்கான சட்டப் போராட்டத்தில் நாம் களத்தைத்தான் இழந்திருக்கிறோம்... போரை அல்ல. இந்தக் களத்தில் இழந்ததை இன்னொரு களத்தில் வென்றெடுக்க முடியும். அதையும் கடந்து இந்தக் களத்தில் நாம் வீழவில்லை. வீழ்ந்ததாக அறிவிக்கப்பட்டோம். அவ்வளவுதான். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. அதில் பல ஓட்டைகள் உள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில், இட ஒதுக்கீட்டைக் காப்பதற்காக தமிழக அரசின் சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் வாதிட்டார். அவரைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் மற்றும் அவற்றின் துணை அமைப்புகள் சார்பில் கர்நாடக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர் ரவிவர்மக்குமார், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞர்கள் ஜி.மாசிலாமணி, ஏ.எல்.சோமயாஜி, பி.எஸ்.இராமன், மூத்த வழக்கறிஞர்கள் என்.எல்.இராஜா, ஓம் பிரகாஷ் உள்ளிட்டோர் வாதிட்டனர்.

வன்னியர் இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்காக உயர் நீதிமன்றம் எழுப்பியுள்ள அனைத்து வினாக்களுக்கும் இவர்கள் அற்புதமான, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விளக்கங்களை அளித்தனர். அவை ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனடிப்படையில் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தால், அது இட ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் வழிகாட்டும் தீர்ப்பாக அமைந்திருக்கும்.

ஆனால், அரசுத் தரப்பு வாதத்தை மட்டும்தான் ஏற்றுக்கொள்ள முடியும்; மற்றவர்களின் வாதத்தை ஏற்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. ஒருபுறம் இவ்வாறு கூறிவிட்டு, இன்னொரு புறம் நீதிமன்றம் எழுப்பிய வினாக்களுக்கு அரசுத் தரப்பில் போதிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்று கூறி வன்னியர் இட ஒதுக்கீட்டையே சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இது என்ன நீதி?

வன்னியர்களுக்கான சமூக நீதி என்பது எந்தக் காலத்திலும் எளிதில் கிடைத்துவிடவில்லை. பலகட்டப் போராட்டங்கள், உயிரிழப்புகள், சிறைச்சாலைகள், அடக்குமுறைகள் உள்ளிட்ட அனைத்தையும் அனுபவித்துத்தான் நமக்கான சமூக நீதியை நாம் வென்றெடுத்திருக்கிறோம். நாம் நமக்காக மட்டும் இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. இஸ்லாமியர்கள், அருந்ததியர்கள், தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் என அனைத்துத் தரப்புக்கும் இட ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். அப்படிப்பட்ட நாம் நமக்கான இட ஒதுக்கீட்டை மீட்டெடுக்காமல் இருப்போமா?

வன்னியர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளோம். தமிழக அரசும் உரிய ஆவணங்களுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் என்று நம்புகிறோம். நாமும் நம்மை இந்த வழக்கில் இணைத்துக்கொண்டு நீதி பெற்றுத் தர நடவடிக்கை எடுப்போம். அந்த வகையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை விரைவிலேயே வென்றெடுக்கப் போராடுவோம்.

வன்னியர் இட ஒதுக்கீட்டைக் காக்க ஒருபுறம் சட்டப் போராட்டம் என்றால் மறுபுறம் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும். வன்னியர் மக்கள் தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு கிடைக்காமல், 10.50% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருகிறதே? என்ற எண்ணம் என்னை உறுத்திக் கொண்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அந்த நிலையை மாற்றி, மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீட்டை நாம் வென்றெடுப்பதற்கான வாய்ப்பை நமக்கு மீண்டும் கொடுத்துள்ளது. இந்த வாய்ப்பை பாமக நழுவ விடாது.

போராடிப் பெற்ற 10.50% வன்னியர் உள் இட ஒதுக்கீட்டின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் இணைந்திருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் அரசு வேலைகளில் சேர்ந்துள்ளனர். அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்து நடைபெறவிருக்கும் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளின் மூலம் அரசுப் பணியில் சேர பல்லாயிரக்கணக்கானோர் காத்திருக்கின்றனர். நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், விரைவில் தொடங்கவுள்ள மருத்துவ மாணவர் சேர்க்கையில் வாய்ப்பு கிடைக்குமா? எனப் பல்லாயிரம் மாணவர்கள் காத்திருக்கின்றனர். அவர்களின் நம்பிக்கை சிதைந்து விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் பாமக மேற்கொள்ளும்.

ஆகவே.... மாணவச் செல்வங்களே, அரசு வேலையில் இணைந்த, அரசு வேலைக்காகக் காத்திருக்கும் சொந்தங்களே....

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எண்ணி நீங்கள் கலங்க வேண்டாம். உங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீட்டை வென்றெடுத்துக் கொடுக்க வேண்டியது எனது கடமை. அதை நிறைவேற்றாமல் ஓயமாட்டேன். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம்; வன்னியர் இட ஒதுக்கீட்டை மீட்டெடுப்போம். கவலை வேண்டாம்... இதுவும் கடந்து போகும். நீதி வெல்லும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்