காரைக்காலில் தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது: அமைச்சர் சந்திர பிரியங்கா தகவல்

By வீ.தமிழன்பன்

காரைக்கால் மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார்.

பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்த புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்கள் 1954 நவ.1-ம் தேதி இந்தியாவுடன் இணைந்தன. அதனால் நவ.1-ம் தேதியன்று புதுச்சேரி விடுதலை நாளாக அரசு சார்பில் கொண்டாடப்பட வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அதனடிப்படையில் 2014-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் அரசு சார்பில் புதுச்சேரி விடுதலை நாளைக் கொண்டாடுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. தொடர்ந்து ஆண்டுதோறும் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று (நவ.1) நடைபெற்ற 67-வது புதுச்சேரி விடுதலை நாள் விழாவில் புதுச்சேரி அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டார்.

இவ்விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் சந்திர பிரியங்கா பேசியதாவது:

''புதுச்சேரி அரசு ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்ற அயராது பாடுபடும். நிலத்தடி நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில், காரைக்கால் மாவட்டத்தில் பிராந்திய நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் தடுப்பணைகள் கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் விளை நிலங்களில் தொடர்ந்து சாகுபடி செய்யும் விதத்தில் முதல் கட்டமாக ரூ.60 லட்சம் செலவில் 5 ஆழ்குழாய் கிணறுகள் புதுப்பிக்கப்பட அல்லது புதிதாக அமைக்கப்படவுள்ளன.

கால்நடை மருந்தகங்களைச் செயல்படுத்தும் வகையில் காரைக்காலுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கப்படவுள்ளது. திருமலைராயன்பட்டினத்தில் புதிதாக தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும். காரைக்கால் பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் மீன் காட்சியகம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஹட்கோ நிதியுதவியுடன் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் ரூ.50 லட்சம் செலவில் வெளிப்புற சிகிச்சைப் பிரிவு மற்றும் பதிவு மையம் மேம்படுத்தப்படவுள்ளது. காரைக்காலில் ரூ.14.50 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டங்கள் நடப்பு ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ளன''.

இவ்வாறு அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார்.

விழாவில் தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நிஹாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எஸ்.பாஸ்கரன், மண்டலக் காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ஆர்.ரகுநாயகம், இந்திய கடலோரக் காவல் படை காரைக்கால் கமாண்டண்ட் சி.விவேக் ஆனந்தா, பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அணி வகுப்பில் வெற்றி பெற்ற அணியினருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE