ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்படுமே தவிர ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை குழந்தை பிறந்த நாளாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு நாள் மாற்றம் குறித்து ஓபிஎஸ் விமர்சித்துள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18-ஆம் நாள் 'தமிழ்நாடு நாளாக' கொண்டாடப்படும் என்பதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது பொருத்தமற்ற, மரபு மீறிய உள்நோக்கம் கொண்ட, அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்ட செயல். இதற்கு எனது கடும் கண்டனத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மொழிவாரியாக 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, அப்போதைய மெட்ராஸ் மாகாணத்துடன் இருந்த ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளாவின் சில பகுதிகள் பிரிக்கப்பட்டன. இப்போதைய தமிழ்நாடு, 'மெட்ராஸ்' என்ற பெயரில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தொடர்ந்து தனி மாநிலமாக இருந்தது.
» டாஸ்மாக் பார் திறப்பை மறுபரிசீலனை செய்க: அரசுக்கு ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
» அக்.31 சென்னை நிலவரம்; கரோனா தொற்று: மண்டல வாரியான பட்டியல்
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணம்தான் தற்போதைய தமிழ்நாடு. எனவேதான், அப்போதைய மெட்ராஸ், தற்போதைய தமிழ்நாடு, நவம்பர் ஒன்றாம் தேதி தோன்றியதன் அடிப்படையில், நவம்பர் ஒன்றாம் நாளை 'தமிழ்நாடு நாளாக' அறிவிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவெடுக்கப்பட்டு அந்த நாளை தமிழ்நாடு நாள்' என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு அறிவித்தது.
இதனை எப்படியாவது மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜூலை 18 ஆம் நாளை தமிழ்நாடு நாள் என்று அறிவிக்கப் போவதாக முதல்வர் அறிவித்து இருக்கிறார். மெட்ராஸ் மாகாணம் என்பதை மாற்றி, 1967 ஜூலை 18 ஆம் தேதி, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி 'தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட நாள்தான் பொருத்தமாக இருக்கும்' என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தியதாகத் தெரிவித்து, அதன் அடிப்படையில், ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக இனிக் கொண்டாட அரசாணை வெளியிடப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
ஆனால் இது பொருத்தமற்ற ஒன்றாகும். ஜூலை 18 ஆம் நாள் சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டாலும், இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் 1968 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் , நிறைவேற்றப்பட்டு 14-01-1969 முதல் தான் தமிழ்நாடு என்ற பெயர் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. முதல்வரின் வாதத்தின்படி பார்த்தாலும் 14-01-1969 ஆம் நாளைத்தான் "தமிழ்நாடு நாள்' என்று கொண்டாட வேண்டும்.
ஒரு குழந்தை என்றைக்குப் பிறக்கின்றதோ அந்த நாள்தான் பிறந்த நாளாக கொண்டாடப்படுமே தவிர ஒரு பெண்ணினுடைய கருப்பையில் குழந்தை உருவாகிய நாளை குழந்தை பிறந்த நாளாக எடுத்துக்கொள்ள முடியாது. ஒரு அலுவலகமோ, கட்டிடமோ முழுவதுமாக முடிக்கப்பட்டு என்றைக்குத் திறந்து வைக்கப்படுகிறதோ அந்த நாள்தான் அந்த அலுவலகமோ, கட்டிடமோ தோன்றிய நாளாகக் கருதப்படுமே தவிர, திட்ட அறிக்கை தயார் செய்தது, நிர்வாக அனுமதி அளித்தது, நிதி ஒதுக்கீடு செய்தது, அடிக்கல் நாட்டியது ஆகியவற்றை எல்லாம் அந்த அலுவலகமோ, கட்டிடமோ தோன்றிய நாளாகக் கருத முடியாது. எனவே, 'ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பு நியாயமற்றதாக இருக்கிறது.
ஒரு குழந்தை பிறந்தவுடன் அதற்குப் பெயர் வைக்கப்படுகிறது. பத்து வருடங்கள் கழித்து அந்தக் குழந்தையின் பெயர் மாற்றப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டாலும், அந்தக் குழந்தையின் பிறந்த நாள் என்பது அந்தக் குழந்தை என்று பிறந்ததோ அந்த நாளில் தான் கொண்டாடப்படுமே தவிர, பெயர் மாற்றம் செய்த நாளில் கொண்டாடப்படமாட்டாது. இதேபோன்று, தற்போதைய நிலப்பரப்புடன் 1956 ஆம் ஆண்டு பிறந்த சென்னை மாகாணம் என்ற குழந்தைக்கு 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்ய முடிவெடுத்து அதன் அடிப்படையில் 1969 ஆம் ஆண்டு பெயர் மாற்றப்பட்டாலும், அதன் பிறந்த நாள் 1956 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதிதான்.
எனவே ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பு எந்தவிதத்திலும் பொருத்தமாக இருக்காது. இந்தச் செயல் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் முன் பிறந்த மாநிலத்தை, பின் பிறந்ததாகக் கூறுவதற்குச் சமம். இது வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சி. 1956 ஆம் ஆண்டு பிறந்த மாநிலத்தை 1967 ஆம் ஆண்டு பிறந்ததாகச் சித்தரிப்பது மரபு மீறிய செயல், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சகட்டம்.
எனவே, சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்கள் எல்லாம் நவம்பர் ஒன்றாம் தேதியையே அந்த மாநிலங்கள் உருவான நாளாகக் கொண்டாடுவதைக் கருத்தில் கொண்டு, ஜூலை 18-ஆம் நாள் 'தமிழ்நாடு நாள்' என்ற அறிவிப்பினை திரும்பப் பெற்று, நவம்பர் ஒன்றாம் தேதியே 'தமிழ்நாடு நாள்' என்று தொடர்ந்து இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலல்வர் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago