நவம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை: சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று 50 ஆயிரம் இடங்களில் 7-வது கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாயகம் கவி, அசன் மௌலானா ஆகியோர் உடனிருந்தனர்.

அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் இதுவரை 5 கோடியே 73 லட்சத்து 91,006கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 70 சதவீதத்தினருக்கு முதல் தவணையும், 29 சதவீதத்தினருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மிகச்சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, இந்தியாவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கும், முதியோர்களுக்கும் அவர்களின் இல்லங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மாநகராட்சி சிறப்பாக செயல்படுத்தியது. சென்னை மாநகராட்சியில் 87 சதவீத மக்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 48 சதவீத மக்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மூன்றாவது அலை அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது. எனவே அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். மத்திய அரசு தமிழகத்துக்கு தேவையான கரோனா தொடர்ந்துவழங்கி வருகிறது.

இந்தியாவிலேயே தமிழகம் மட்டும்தான் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளில் ஈடுபடுத்தி வெற்றிகரமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணைத் தடுப்பூசியும், 50 சதவீதத்துக்கும் மேல் இரண்டாம் தவணை தடுப்பூசியும்போட நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE