பெயர் சூட்டப்பட்ட நாள் பிறந்த நாள் அல்ல. நவம்பர் 1ஆம் நாள்தான் தமிழ்நாடு நாள் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் எல்லைப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகள் 110 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் இன்றைய தமிழ்நாடு உருவாக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாள்தானே தவிர, தமிழ்நாடு நாள் அல்ல; மாறாக 1967ஆம் ஆண்டு சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரும் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் நாள்தான் தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் கூறியிருப்பதை ஏற்க முடியாது.
தமிழ்நாடு நாள் என்றைக்குக் கொண்டாடப்பட வேண்டும் என்பது குறித்துத் தேவையற்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவற்றுக்குச் செவிமடுத்து ஜூலை 18ஆம் நாளைத் தமிழ்நாடு நாளாக அறிவித்து அரசாணை பிறப்பிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு நாள் என்று பெயர் சூட்டக்கோரி சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்ட நாளும், அது நடைமுறைப்படுத்தப்பட்ட 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாளும் மிகவும் முக்கியமானவை.
அந்த நாட்களை அவற்றுக்குரிய முக்கியத்துவத்துடன், தனிப்பெயர் சூட்டிக் கொண்டாடுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், அந்த நாட்களை ‘‘தமிழ்நாடு நாள்’’ என்று கொண்டாட முடியாது. இன்றைய தமிழ்நாட்டின் எல்லைப் பரப்பு உறுதி செய்யப்பட்ட நாளும், இன்றைய தமிழ்நாட்டின் நிலப்பரப்பைக் கொண்ட மாநிலமாக அறிவிக்கப்பட்ட நாளுமான நவம்பர் ஒன்றாம் நாள்தான் தமிழ்நாடு நாள் ஆகும். இதை மாற்ற முடியாது.
இந்தியா விடுதலையாகி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டபோது 9 மாநிலங்களும், 3 யூனியன் பிரதேசங்களும் மட்டுமே இருந்தன. எனினும், பின்னர் நாடு முழுவதும் வெடித்த போராட்டங்களைத் தொடர்ந்து 1956ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோது இந்தியா 14 மாநிலங்களாகவும், 6 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. அதுவரை ஆந்திரா, கர்நாடகம், கேரளம் ஆகியவற்றின் நிலப்பரப்பை உள்ளடக்கியிருந்த சென்னை மாகாணத்தின் பெரும்பகுதிகள் அங்கு வாழும் மக்கள் பேசும் மொழிகளின் அடிப்படையில் பிரித்து, புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு என்ற பெயரில் இப்போது அழைக்கப்படும் நிலப்பரப்பு மட்டுமே புதிய சென்னை மாகாணமாக 1956-ல் அறிவிக்கப்பட்டது.
அதன்பின் 11 ஆண்டுகள் கழித்து 1967ஆம் ஆண்டுதான் சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் அது நடைமுறைக்கு வந்தது. இந்த இரண்டும் வெவ்வேறு நடைமுறைகள். தமிழ்நாட்டின் இன்றைய நிலப்பரப்பைக் கொண்ட புதிய மாநிலம் பிறந்த நாள் நவம்பர் 1ஆம் தேதி. அதற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட நாள் 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி. இரண்டுக்கும் நடுவே சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாள்தான் 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி.
ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாகக் கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்த நாளாகக் கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதைத் தமிழக அரசு தவிர்க்க வேண்டும்.
இன்றைய தமிழ்நாடு மாநிலம் தோற்றுவிக்கப்பட்டு 66 ஆண்டுகள் ஆகின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டு 52 ஆண்டுகள் ஆகின்றன. முதல்வர் கூறுவதைப் போன்று தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 54 ஆண்டுகளாகின்றன. தமிழ்நாட்டின் வயது என்ன? என்று வினா எழுப்பட்டால், அதற்கான விடை எது? என்ற குழப்பம் ஏற்படும். தமிழர்களின் நலனுக்காகவும், தமிழ்நாட்டின் நலனுக்காவும் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் ஏராளமாக இருக்கும்போது இத்தகைய குழப்பங்கள் தேவையற்றவை.
சென்னை மாகாணத்திலிருந்து பிரிக்கப்பட்ட மாநிலங்களின் அரசுகள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் ஒன்றாம் தேதியை, தங்கள் மாநிலம் உருவாக்கப்பட்ட நாளாகக் கொண்டாடி வருகின்றன. அதேபோல், தமிழகமும் நவம்பர் ஒன்றாம் தேதியைத் தமிழ்நாடு நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பாமக நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தது. இதை முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் ஏற்றுக் கொண்டனர். தமிழறிஞர்களும், தமிழ் அமைப்புகளும் இதே கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர்.
இந்தக் கோரிக்கையை முன்வைத்து நவம்பர் ஒன்றாம் நாளில் பல்வேறு விழாக்கள் எடுக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாகவே நவம்பர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று 2019ஆம் ஆண்டு அப்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அறிவித்தது. அதை ஒட்டுமொத்தத் தமிழகமும் ஏற்றுக்கொண்டது; எவரும் எதிர்க்கவில்லை. கடந்த ஆண்டு தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டபோது கூட அதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
எனவே, இன்றைய தமிழ்நாடு நிலப்பரப்பு உருவாக்கப்பட்ட நவம்பர் ஒன்றாம் தேதியே தொடர்ந்து தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட வேண்டும். தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18ஆம் தேதியையும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட ஜனவரி 14ஆம் தேதியையும் அவற்றுக்கு உரிய சிறப்புகள், முக்கியத்துவத்துடன் தனி விழாக்களாகக் கொண்டாட அரசு நடவடிக்கை எடுக்கலாம்.’’
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago