அருப்புக்கோட்டையில் தடுப்பூசி முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

By இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெற்றுவரும் தடுப்பூசி முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேவர் குருபூஜையை முன்னிட்டு பசும்பொன்னில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று தேவரின் உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

அதைத் தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் மதுரை புறப்பட்டார். வழியில் அருப்புக்கோட்டை வந்த முதல்வர், அருப்புக்கோட்டை காந்திநகர் அருகே தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை பார்வையிட்டார்.

அப்போது, முகாமில் பொதுமக்கள் எத்தனை பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விபரம் குறித்தும், ஆர்வத்துடன் பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி வருகிறார்களா என்பது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், தடுப்பூசி செலுத்த வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்த முதல்வர், தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார்.

அப்போது வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE