நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (அக். 30) வெளியிட்ட அறிக்கை:

"காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் கவலையளிக்கின்றன. மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை சிதைக்கும் வகையிலான திட்டங்களை செயல்படுத்த முனைவது நியாயமல்ல.

நாகப்பட்டினம் பகுதியில் ரூ.31,580 கோடியில் ஆண்டுக்கு 90 லட்சம் டன் சுத்திரிப்பு திறன் கொண்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியன் ஆயில் நிறுவனமும், சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனமும் இணைந்து அமைத்து வருகின்றன.

இந்த சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள்ளாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகப்பெரிய அளவில் பெட்ரோ கெமிக்கல் தொழில் மண்டலத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொழில் முதலீட்டு அமைப்பு மேற்கொண்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்படும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனம் (MSME Trade and Investment Promotion Bureau - MTIPB) இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை ரூ.50 லட்சம் செலவில் தயாரிப்பதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை கோரியிருக்கிறது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைச் சுற்றி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் சார்பிலும், பெரு நிறுவனங்களின் சார்பிலும் பெட்ரோலியம் மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களை அமைப்பது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இயற்கைக்கும், சுற்றுச்சூழலுக்கும் எதிரான மீத்தேன் எரிவாயுத் திட்டம், பாறை எரிவாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்தத் துடிக்கும் பெரு நிறுவனங்களின் வேட்டைக் காடாக காவிரி பாசன மாவட்டங்கள் தான் உள்ளன.

அந்த நிறுவனங்களின் தீய திட்டங்கள் நிறைவேறினால் காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாக மாறி விடும் ஆபத்து இருப்பதால் தான், அதை தடுப்பதற்காக பாமக சுமார் 5 ஆண்டுகள் போராடி காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது.

போராடிப் பெற்ற பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், அதற்கு எதிரான திட்டத்தை செயல்படுத்த அரசு துடிப்பதன் நோக்கத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.

பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் பகுதி காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல எல்லைக்குள் தான் வருகிறது. ஆனாலும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தடை செய்யப்பட்ட தொழில்கள் பட்டியலில் பெட்ரோ கெமிக்கல் இல்லாததால், இத்திட்டத்தைச் செயல்படுத்த எந்தத் தடையும் இல்லை என்று அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தமிழக அரசு அதிகாரிகளுக்கு தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் உள்ள ஆர்வம் சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதுகாப்பதில் இல்லை என்பதைத் தான் அதிகாரிகள் அளித்திருக்கும் விளக்கம் உறுதி செய்திருக்கிறது.

காவிரி பாசன மாவட்டங்கள் நச்சு ஆலைகளால் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பது தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் கொண்டு வரப்பட்டதன் நோக்கம் ஆகும். அதற்காக இயற்றப்பட்ட சட்டத்தின் இரண்டாவது அட்டவணையில் பெட்ரோலியப் பொருட்கள் சார்ந்த புதிய தொழில்களும், பணிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

அதனடிப்படையிலேயே பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை தடை செய்ய முடியும். ஒருவேளை அது சாத்தியமில்லை என்றால், அதற்கான விதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மாறாக, சட்டத்தில் உள்ள சிறு துளைகளை பயன்படுத்திக் கொண்டு, விவசாயத்தை சீரழிக்கும் திட்டங்களைக் கொண்டு வருவதற்கு தமிழக அரசே துணை போகக்கூடாது.

கடலூர், நாகை மாவட்டத்தில் 45 கிராமங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை ரூ. 92,160 கோடியில் அமைக்க 2017-ஆம் ஆண்டில் அப்போதைய அரசு தீர்மானித்தது. அதை எதிர்த்து மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக மக்களைத் திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தது.

அதன் பயனாக காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அறிவிக்கப்பட்ட பிறகு, அதற்குள் அமைக்கப்படவிருந்த பெட்ரோ கெமிக்கல் முதலீட்டு மண்டலத்தை தமிழக அரசு ரத்து செய்தது. அந்த மண்டலத்துக்காக ரூ.8,100 கோடி முதலீடு வந்த பிறகும் வேளாண்மையை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக பாமகவின் கோரிக்கையை ஏற்று அத்திட்டத்தை தமிழக அரசு கைவிட்டது. புதிய பெட்ரோ கெமிக்கல் மண்டலம் விவகாரத்திலும் அதே உணர்வுடன் இன்றைய அரசு செயல்பட வேண்டும்.

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் சுற்றுச்சூழலுக்கு எத்தகைய கேடுகளை விளைவிக்குமோ, அதை விட மோசமான பாதிப்புகளை பெட்ரோ கெமிக்கல் மண்டலமும் ஏற்படுத்தும். இதை உணர்ந்து நாகப்பட்டினம் பகுதியில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். அதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளியை திரும்பப் பெற வேண்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்